உலக நாடுகளின் நடைமுறை ஒழுங்குகள் பற்றி நாம் அறியும் போது ஒரு நாட்டில் நடக்கக் கூடிய தவறுகள், பிழைகள் அந்த நாட்டைச் சேர்ந்தவர்களால் சுட்டிக்காட்டப்பட்டு அவை நடைபெறாமல் காப்பாற்றப்படுகிறது.
இந்தப் பணியில் அந்த நாட்டில் இருக்கக் கூடிய பிரதான அரசியல் கட்சிகளும் புலமை சார்ந்த வல்லுநர்களும் பெரும் பங்காற்றுகின்றனர்.
குறிப்பாக பாராளுமன்றம் அல்லது அதற்கு ஈடான இரண்டாம் தர சபைகள் ஒரு தவறான தீர்மானத்தை நிறைவேற்ற முற்படும்போது எதிர்க் கட்சியானது குறித்த தீர்மானம் தொடர்பான பாதகத் தன்மைகளைச் சுட்டிக்காட்டுகிறது. இதனால் அங்கு நியாயம் ஏற்படுகின்றது.
இதற்கு மேலாக எதிர்க்கட்சி முன்வைத்ததகை சார்ந்த விளக்கங்கள் பொதுமக்களையும் சென்றடைந்து ஒரு புரிதலை ஏற்படுத்துகின்றது.
இது ஒருபுறம் இருக்க, குறித்த தீர்மானங்கள் தொடர்பில் துறைசார் நிபுணர்களும் தமது கருத்துக்களை மக்கள் முன் வைக்கும் போது பொதுமக்கள் விழிப்படைய, குறித்த தீர்மானம் செம்மைப் படுத்தப்படுகின்றது.
ஆக, ஒரு உடம்பில் நோய்க்கிருமிகள் உட்செல்லும் போது உடம்பில் உள்ள வெண்குருதிச் சிறு துணிக்கைகள் அவற்றை எதிர்கொண்டு அழித்து உடம்பைப் பாதுகாப்பது போன்ற ஒரு கட்டமைப்பு நாடுகளிலும் உள்ளமையால்தான் பல்வேறு தாக்கங்கள், போட்டிகள், எதிர்ப்புக்கள் மத்தியிலும் அந்த நாடுகளால் ஈடுகொடுக்க முடிகின்றது.
இதில் எந்த நாடு, எந்த இனம் பலயீனமாக இருக்கின்றதோ அந்த நாட்டால், இனத்தால் மீள எழவே முடியாது.
இந்த வகையில் எம் இனத்தின் நிலைமை பற்றியும் நாம் நோக்க முடியும். எங்களிடம் பலமான அரசியல் கட்சிகள் இருக்காமை மிகப்பெரும் குறைபாடாக உள்ளது.
எந்த முடிவை எடுத்தாலும் அதை எதிர்க்கின்ற வல்லமை கொண்ட இன்னொரு அரசியல் பலம் இல்லாமையால் தாம் நினைப்பதைச் செய்வோம் என்ற கர்வம் அரசியல் தரப்பிடம் ஏற்படுகின்றது.
இது மிகப்பெரும் ஆபத்து. இந்தக் கட்டத்தில் தான் துறைசார் வல்லுநர்கள் தமது இனத்தைக் காப்பாற்றும் நோக்கில், விஞ்ஞானரீதியாக ஆதாரங்களுடன் நிலைமைகளை விளக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது.
இருந்தும் எம் இனத்தைப் பொறுத்தவரை துறைசார் நிபுணர்களும் புத்திஜீவிகளும் எது நடந்தாலும் மெளனமாக இருப்பதே ஒரே ஒழி என்று நினைத்துக் கொண்டனர். இந் நிலைமையும் தமிழர்களுக்கு ஈனமாக அமைந்தது.
இச் சந்தர்ப்பத்தில் புத்திஜீவிகள் மெளனமாக இருப்பது நல்லதல்ல எனும் கோங்கள் மெல்லமெல்ல உருவேற்றி விட, நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் துறைசார்ந்த வல்லுநர்கள் ஒன்று கூடி; வடக்குக்கான பொருளாதார மத்திய நிலையம் எங்கே? அமைய வேண்டும் என்பதை மிகத்தெளிவாகக் கூறியுள்ளனர்.
இது காலம் உணர்ந்த பணி. இத்தகைய பணி நம் அரசியல்வாதிகளையும் வழிப்படுத்தும் என் பதால், தமிழினத்தின் துறைசார்ந்த வல்லுநர்கள் எம் இனத்தின் எழுகை பற்றி சதா சிந்திக்க வேண்டும் என்பதே நம் தாழ்மையான கோரிக்கை.
இச் சிந்தனை நிச்சயம் உங்களையும் தமிழ் அரசியல்வாதிகளையும் இணைக்கும். இந்த இணைப்பு ஒரு நேர் கோட்டில் வரும் போது அதன் உச்சமான நன்மைகள் எம் தமிழினத்தின் சொத்தாகி விடும்.
ஆகையால், அன்புக்குரிய அறிவுசால் பெருந்தகைகளே! வீழ்ந்து போன எம் இனத்தை நாங்களே எழுகை பெறச்செய்வோம் என்ற மகுடவாசகத்துடன் உங்கள் பணியைத் தாருங்கள்.