இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு காயங்களுடன் தப்பித்துவந்த பிள்ளையாரடியைச் சேர்ந்த கந்தசாமி கிருஸ்ணகுமார் என்ற இளைஞர்; இராணுவ முகாமிற்குள் நடந்த படுகொலைகள் பற்றிய உண்மைகளை வெளியிட்டிருந்தார்.
அதன் பிரகாரம் 09-09-1990 அன்று பி.ப 5.30 மணியளவில் கெப்டன் திஸ்ஸ வர்ணகுலசூரியாவின் தலைமையில் சீருடை அணிந்த இராணுவத்தினர். சத்துருக்கொண்டான், பனிச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடி ஆகிய கிராமங்களை சுற்றிவளைத்தனர்.
ஒரு பகுதியினர் மெயின்வீதி வழியாக பிள்ளையாரடிக் கிராமத்தை சுற்றிவளைத்தார்கள். மற்றையவர்கள் போய்ஸ்டவுன் முகாமிற்கு பின்புறமாக வந்து சத்துருக்கொண்டான் கொளனிப் பக்கமாகச் சென்று அங்கு ஒரு வீட்டிலிருந்த ராசா என்பவரையும் அவரின் மனைவி நேசம்மா,
நான்கு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வந்து பக்கத்து வீடுகளிலிருந்த கணபதிப்பிள்ளை குடும்பத்தினர்கள், அழகையா குடும்பத்தினர்கள், கதிர்காமத்தம்பி, கண்மணி குடும்பத்தினர்கள், நற்குணசிங்கம், மனைவி, சித்தி இவர்களின் மூன்று மாதக்குழந்தை அனைவரையும் அழைத்து “நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கத்தான் வந்துள்ளோம் உங்களுக்கான எல்லா உதவிகளையும் செய்வோம். எங்களுடன் வாருங்கள்” என அழைத்து வந்து பனிச்சையடிச் சந்தியில் இருக்க வைத்தனர்.
அதன் பின் பனிச்சையடி சந்திக்கு பக்கத்து வீட்டிலிருந்த கிருபைரெட்ணம் குடும்பம், பேரின்பம் குடும்பம் இவர்களின் வீட்டிலிருந்த மற்றைய குடும்பங்கள் என அங்கு தஞ்சமடைந்திருந்த சுமார் 40 பேரையும் சந்திக்கு கூட்டிவந்தனர்.
இதில் பேரின்பத்தின் மனைவி பரஞ்சோதியுடன் நந்தினி என்ற பிள்ளையும் இவர்களுடன் நடக்க முடியாத, முடமான, பேசமுடியாத ஊமைப்பிள்ளைகள் நால்வரும் இருந்தனர்.
இவர்களை தூக்கி வர முடியாது எனக்கூற இவர்களை நாங்கள் முகாமிற்கு கொண்டுபோய் பாதுகாப்பு வழங்குவதுடன் சுகமாக்கியும் தருவோம் எனக்கூறி மற்றவர்களைத் தூக்கிவரும்படி இராணுவத்தினர் கூறினர்.
இவர்களின் நயவஞ்சகத்தினை அறியாத அப்பாவி மக்கள் அந்த வலது குறைந்த பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டு வந்து சந்தியில் வைத்தனர்.
அதன் பின் பரமக்குட்டி என்பவரின் வீட்டில் ஒன்றாக இருந்த 20 குடும்பங்களைச் சேர்ந்த அத்தனை பேர்களையும் பனிச்சையடிச் சந்திக்கு கொண்டு வந்து அனைவரையும் ஒன்றாகச் சேர்த்தனர்.
இப்படிப் பனிச்சையடிச் சந்தியில் சேர்க்கப்பட்டவர்கள் கொக்குவில், பிள்ளையாரடியில் பிடிக்கப்பட்டவர்கள் என எல்லோரையும் கொத்துக்குளத்து மாரியம்மன் கோவில் சந்திக்கு கொண்டு வந்திருந்தனர்.
பின் அனைவரையும் கொண்டுசென்ற இராணுவத்தினர் மாலை 7.00 மணியளவில் போய்ஸ்டவுன் முகாமிற்குள் இருந்த ஒரு பெரிய கட்டிடத்திற்குள்; (முன்னர் அரிசி ஆலை இருந்த கட்டிடத்தில்) 63 குடும்பங்களைச் சேர்ந்த 177 பேரையும் ஒன்றாக அடைத்தனர்.
இப்படி ஒன்றாக இருட்டுக் கட்டடத்துக்குள் அடைத்த பின்னர் அனைவரும் பயமும் பீதியும், நடுக்கமும் ஏற்பட்டு அழத்தொடங்கினர்.
ஒவ்வொரு குடும்பத்தினர்களும் அவர்களின் சொந்த உறவுகளை கட்டிப்பிடித்து முனுமுனுத்தவாறு அழுதனர். எல்லோரும் கடவுளே எங்களைக் காப்பாத்து என கடவுளை வேண்டினர். இவர்களை அடைத்த படையினர் தமது சீருடைகளைக் கழட்டி வைத்துவிட்டு மது அருந்தத் தொடங்கினர்.
எல்லோரும் குடித்துவிட்டு வாள், கத்தி என்பவற்றை எடுத்து பூட்டிய கதவைத் திறந்தனர். இவர்களை இருட்டில் அரைகுறையாகக் கண்ட மக்கள் அழத்தொடங்கினர்.
இவர்களில் மூவரை வெளியே எடுத்தனர். இவர்களை நாங்கள் விசாரிக்க வேண்டும், இது மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது, இப்படி விசாரிக்கும் போது நாங்கள் அடித்தால் மற்றவர்கள் சத்தம் போடக்கூடாது என அனைவரின் கண்களையும் கட்டினர்.
குமார் வயது 27, ஜீவானந்தம் வயது 33, கிருஸ்ணகுமார் வயது 22 ஆகிய மூவரையும் முகாமின் பின்பக்கமாக கொண்டு சென்று, சித்திரவதை செய்தனர், கத்தியால் குத்திக் கொன்றனர். இதில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாக இராணுவத்தினர் கருதிய கிருஸ்ணகுமார் என்பவரின்; இரு கண்களுமே படுகாயத்துடன் இந்த கொடூரக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தன.
பின்னர் வயது முதிர்ந்த ஆண்களை எடுத்து ஒவ்வொருவராக இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்றனர். கால்களையும், தலைகளையும் வெட்டி அங்கே ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த பெரிய குழியில் போட்டனர்.
இதன்பின் வயது போன பெண்களைக் கொண்டுவந்து கம்பியாலும், பொல்லாலும் அடித்துக் கொண்டு குழியிலே போட்டனர். அடுத்து திருமணம் முடித்த அனைத்து ஆண்களையும் கண்களைக் கட்டிக் கொண்டு வந்து கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றனர். இவ்வாறே திருமணமான பெண்களையும் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். பின் இளைஞர்களைக் கண்களைக்கட்டிக் கொண்டு வந்து கையையும், கால்களையும் வெட்டி அவர்கள் துடிக்கும் காட்சியைப் பார்த்து மகிழ்ந்தனர்.
அவர்களை பல துண்டுகளாக துண்டாடி கொன்று குழியிலே போட்டனர். பின் சிறுவர்களையும், குழந்தைகளையும் கொண்டு வந்து சாய்ந்து கிடந்த முந்திரிகை மரத்தில் ஒவ்வொருவராக படுக்க வைத்து இரண்டு துண்டுகளாக வெட்டி குழியிலே போட்டனர்.
குழந்தைகயைக் கால்களால் மிதித்தும், கழுத்தைத் திருகியும் கொன்றனர். அவர்கள் பேசமுடியாத ஊமையாக இருந்த, நடக்கமுடியாது முடமாக இருந்த அந்த வலது குறைந்த 4 பிள்ளைகளையும் விட்டுவைக்கவில்லை. அவர்களை முந்திரிகை மரத்தில் போட்டு துண்டு துண்டாக வெட்டிக் கொன்றனர்.
25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய படையினர் அப்பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர்.
பின் சிறிது நேரம் ஓய்வெடுத்து பின் எஞ்சியிருந்த இளம் யுவதிகளையும் வெளியே எடுத்து அவர்களை நிர்வாணமாக்கி காட்டு மிராண்டித்தனமாக மனித நேயமுள்ளவர்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநாகரீகமான முறையில் அவர்களை சின்னாபின்னப்படுத்தி அவர்களின் அங்கங்களை வெட்டி சித்திரவதை செய்து கொன்றனர்.
இவர்கள் சத்தமாக கூக்குரலிட அவர்களின் வாய்களில் கறுப்புச் சீலையை திணித்தனர். அவர்களை அரைகுறை உயிருடன் குழியிலே கொண்டுபோய் போட்டனர். இப்படி அனைவரையும் ஒரே குழியில் ஒன்றாகக் குவித்தனர். அந்த குழி குற்றுயிரும் குறைஉயிருமாக கிடந்த உடல்களால் நிறைந்திருந்தது.
இதன் பினனர் பெற்றோல் மண்ணெண்ணை என்பவற்றை உடல்கள் மேல் ஊற்றினர். எரிபொருள் போதாமையால் இன்னும் எடுப்பதற்காக வெளியில் சிலர் சென்றனர். மற்றவர்கள் களைப்பிலும் மதுபோதை மயக்கத்துடன் படுத்திருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தைப் பார்த்து இறந்தவனைப் போல் சடலங்களுடன் அந்த காட்சிகளை பார்த்து படுத்துக்கொண்டிருந்த கிருஸ்ணகுமார் என்பவர் மெதுவாக அந்த இடத்தைவிட்டு வெளியேறி பத்தைக்குள் மறைந்துகொண்டார்.
எரிபொருளுடன் வந்தவர்கள் இரத்தம் வடிய வெளியே சென்ற கிருஸ்ணகுமாரின் இரத்த அடையாளத்தை கண்டு அந்தவழியே தேடியுள்ளனர். இருந்தும் இராணுவத்தினர் மதுபோதையில் இருந்ததால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
கிருஸ்ணகுமார் ஒழித்திருந்து மேலும் நடக்கும் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். கொண்டுவந்த பெற்றோலையும் திரும்ப ஊத்தி அனைவரையும் ஒன்றாக எரித்தனர். எங்கும் ஒரே புகைமண்டலமாக காட்சியளித்தது. உடல்களும் மண்டையோடுகளும் வெடிக்கும் சத்தந்தான் கேட்டன.
இதன் பின் இரவு 2.00 மணியளவில் கிருஸ்ணகுமார் தவண்டு வந்து ஒருவீட்டிற்கு வந்து பின் சிலரின் உதவியுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார்.
இவர் தப்பிவந்து வைத்தியசாலையில் இருப்பதை அறிந்த இராணுவத்தினர் வைத்தியசாலையை முற்றுகையிட்டு தேடினர்.
கிருஸ்ணகுமாரை அமெரிக்க மிசன் பாதர் மூலம் காப்பாற்றிய சமாதானக்குழுவினர் பின்னர் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ததுடன் அவரை ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் சாட்சிசொல்லவைத்தனர்.
அன்றைய தினம் முகாமில் எரிக்கப்பட்ட அப்பாவி பொது மக்களின் உடல்கள் இரண்டு நாட்களாக எரிக்கப்பட்ட பின் அடையாளம் தெரியாமல் மறைக்கப்பட்டன.
குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள்
தப்பிவந்த கிருஸ்ணகுமாரின் மூலமாக வெளிவந்த பல தகவல்களின் அடிப்படையில் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புக்கள் சத்துருக்கொண்டான் இராணுவ முகாமிற்கு சென்று நடந்த சம்பவத்தை முகாமிற்கு பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரியிடம் வினாவியிருந்தனர்.
இதற்கு அந்த இராணுவ அதிகாரி கூறியதாவது “இங்கு நாங்கள் யாரையும் கொண்டுவரவுமில்லை. அவ்வாறான சம்பவம் ஏதும் இங்கு இடம்பெறவுமில்லை” என்பதே அவர்களின் பதிலாக அமைந்தது.
இந்த சத்துருக்கொண்டான் படுகொலையை தலைமைதாங்கி நடாத்தியது போய்ஸ்டவுன் இராணுவ முகாமில் கடமையாற்றிய கப்டன் காமினி வர்ணகுலசூரிய, கப்டன் கெரத், விஜயநாயக்க மற்றும் இதற்கான கட்டளை அதிகாரியாக இருந்த கேணல் பெசி பெனாண்டோ ஆகியோரே இக் கொலைகளுக்கான முக்கிய சூத்திரதாரிகளாக ஜனாதிபதி ஆணைக்குழுவால் இனம் காணப்பட்டனர்.
நீதி விசாரணை இலங்கை அரசாங்கத்தினால், இப்படுகொலைச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்தவென இரு விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன.
ஓய்வுபெற்ற நீதிபதியான கே.பாலகிட்ணர் அவர்கள் இவ்விசாரணைகளை நடத்தவென அக்காலத்தில் ஆட்சியிலிருந்த பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டார்.
இச்சம்பவத்தை விசாரணை செய்த நீதிபதியின் அறிக்கைப்படி 27 வயதான மோகன சுந்தரி எனும் தாயும் அவரது 3 மாதக்குழந்தையும் படையினரால் “மண்ணா” கத்திகளால் சாகும்வரை குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் எனவும். அத்தோடு 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கும் குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டுள்ளனர்.
நீதிபதி தனது அறிக்கையில் படுகொலை நிகழ்ந்ததற்கான வலுவான சாட்சியங்கள் இருப்பதாகவும் குற்றவாளிகளுக்கெதிரான கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் ஜனாதிபதியை வேண்டிக்கொண்டார்.
இதுவரை இவ்வாறான சட்ட நடவடிக்கைகளோ, காவல்துறை விசாரணைகளோ மேற்கொள்ளப்பட்டதாக தகவலெதுவும் இல்லை. அவர்கள் இலங்கையின் நீதிமன்றங்களினால் தண்டிக்கப்படவில்லை சம்பவம் நடந்து இன்று 26 ஆண்டுகளாகியும் இக்கொலைக்கான நீதி வழங்கப்படவில்லை.