காணாமல்போனோரின் உறவினர்கள் மற்றும் யுத்தத்தால் கணவனை இழந்த பெண்களை புலனாய்வு எனும் பெயரில் துன்புறுத்தும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடமாகாணத்தில் சட்ட ஒழுங்குகள் தொடர்பாக உள்ள 4 பிரதானமான பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் சாலக ரத்நாயக்க தலைமையில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத்தினருடனான கலந்துரையாடல் நேற்யை தினம் யாழ் மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சாள்ஸ் நிர்மலநாதன எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது பிரதேசத்தில் யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் ஆகின்றன. ஆனால் யுத்தத்தால் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் மனைவி பிள்ளைகளை சட்ட ஒழுங்கு அமைச்சுக்கு கீழ் உள்ள புலனாய்வுப்பிரிவினர் தற்போதும் அவர்களுடைய வீடுகளுக்கு சென்று அவர்களின் நாளாந்த கடமைகளை கூட செய்ய விடாமல் இடையூறு விளைவித்த வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக கணவனை இழந்த பெண்களை திட்டமிட்டு புலனாய்வு என்ற ரீதியில் துன்புறுத்துகிறார்கள். இது தற்போதுள்ள ஆட்சிக்கு ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். பெண்களை நிம்மதியாக வாழ விடவேண்டும்.
இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் நேரடியாக தனது கவனத்தில் எடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் எமது மாகாணத்தில் பல பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். அவர்களை பொலிஸ் சேவையில் உள்வாங்க வேண்டும்.
சட்ட ஒழுங்கு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைவருக்கும் பொதுவான தாக அமைய வேண்டும். ஆனால் பக்கச்சார்பாக பல விடயங்கள் நடைபெற்று வருகின்றன.
அதாவது அண்மையில் மன் னார் மாவட்டத்தில் தங்கக்கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர் ஆனால் நீதிமன்றில் முற்படுத்தாமல் அடுத்த நாளே விடுதலை செய்துள்ளனர்.
இவ்வாறான பக்கச்சார்புடைய அரசியல் தலையீடுடைய செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் மேலும் தெரிவித்தார்.