இராணுவத்தினரும் கடற்படையினரும் முல்லைத்தீவு மீன்பிடித்தொழிலில் பாரம்பரியமாக ஈடுபட்டுள்ள தமிழ் மக்கள் மீது இடையூறுகளுக்கும் இன்னல்களுக்குந்தற்போது உட்படுத்தி வருகின்றார்கள்.இது நிறுத்தப்படவேண்டுமென கோரியுள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.
இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் அங்கு பல ஏக்கர் நிலங்களை வைத்துக்கொண்டிருப்பதற்கு எந்த விதமான தார்மீக உரித்தும் இல்லை. பாதுகாப்பு என்ற போர்வையில் மக்களின் பாரம்பரிய வாழ்வாதாரங்களில் அவர்கள் கை வைத்து வருகின்றார்கள். தெற்கிலிருந்து சிங்கள மக்களைக் கூட்டி வந்து எமது மக்களுக்குக் கிடைக்க வேண்டிய வளங்களை அவர்கள் சூறையாடிச் செல்ல உதவிபுரிகின்றார்களெனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முல்லைத்தீவுமாவட்டத்தில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்ட தீர்மானத்திற்கு அமைய மீன்பிடித்துறை சார்பான மேலதிக கலந்துரையாடல் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மீனவ சங்கங்களின் சமாசங்களின் தலைவர் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பாரம்பரியமாகப் பாவித்து வந்த மீன்பிடி பாடுகளை மாகாணத்திற்கு வெளியிலிருந்து வரும் சிலருக்கு கையளிப்பதற்கு மத்திய அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் பிரதேச ரீதியாக கொக்குளாய், நாயாறு, நந்திக்கடல் போன்ற பல இடங்களில் கடற்படையினரின் அல்லது இராணுவத்தினரின் தலையீட்டால் மக்கள் படும் இன்னல்கள் தொடர்பினில் அரசுடன் பேச வேண்டியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.