வெள்ளை வாகனத்தால் கடத்தப்பட்டவர்களில் இருந்து, சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டடோரும் போரின் இறுதிக் கணங்களில் குடும்பங்களின் முன்னிலையில், இலங்கை இராணுவத்தால் விடுக்கப்பட்ட பகிரங்க அறிவிப்புக்கு அமைய அவர்களிடம் அமைதியாக கையளிக்கப்பட்ட எமது உறவுகள் வரை பலர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.
இலங்கை இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டோர் இலங்கை அரசால் காணாமல் ஆக்கப்பட்டவர்களாவர்.ஆனால், இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பதிலை முன்வைக்கத் தயாரில்லை.
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியும், முன்னாள் ஜனாதிபதிகளும் காணாமற் போனோர் குறித்த விடயத்தில் நேரடிப் பொறுப்பாளிகள். ஏனென்றால் நிறைவேற்று அதிகாரங்களை தமது கைகளில் வைத்திருந்தவர்கள், வைத்திருப்பவர்கள்.
இலங்கையின் ஜனாதிபதியே முப்படைகளின் தளபதி என்ற வகையில் இராணுவத்தின், காவற்படையின், ஊர்காவற்படையின், துணை இராணுவக்குழுக்களின் மற்றும் இந்தக்குழுக்களால் இயக்கப்படும் அடையாளம் தெரியாத குழுக்களாக இயங்கிய வெள்ளை வாகனக் கும்பல்களின் நடவடிக்கைகளுக்கும் இராணுவத்தின் தளபதியாகவும், ஒட்டுமொத்த நிறைவேற்று அதிகாரத்தின் அறுதியான பொறுப்பாளியாகவும் பொறுப்புக் கூறவேண்டியவராக ஜனாதிபதி அமைகிறார்.
இலங்கை அரசும் அதன் ஜனாதிபதியும் அரச படைகளும் ஒட்டுமொத்த அரச இயந்திரமும் தமிழர்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தில் ஈடுபட்டுவந்திருக்கிறார்கள்.
இந்த அரச பயங்கரவாதம் ஓர் இன அழிப்புப் போரை நடாத்தியிருக்கிறது என்பது எந்தவிதமான ஐயத்திற்கும் அப்பாற்பட்ட உண்மை.
இதனால் தான் இலங்கை அரசு இன்றும் மூடி மறைக்க முற்படுகின்ற பூதாகாரமான இந்தப் பிரச்சனைக்கு சரியான சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட தீர்வை வழங்கத் திராணியற்றவர்களாக அவர்களும் சேர்ந்து மூடி மறைப்பு, இழுத்தடிப்பு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
குற்றங்களுக்கு மட்டும் போர்க்குற்றம் என்று சொல்லைப் பயன்படுத்த முன்வந்த சர்வதேச சமூகம் இன்னும் சிறையில் வாடும் எமது கைதிகளைப் போர்க்கைதிகளாகப் பார்க்க மறுக்கிறதென்றால், சர்வதேச சட்டங்களிலும் அடிப்படையான குறைபாடுகள் இருக்கின்றதென்பதையே அது காட்டுகிறது.
ஆகவே, காணாமற் போகச் செய்யப்பட்டோருக்கான போராட்டம் என்பது சர்வதேச அநீதிக்கு எதிரான போராட்டமாகும். அரச பயங்கரவாதத்திற்கு எதிரான அரசியற் போராட்டம் ஆகும். தமிழ் என்ற அடையாளத்தைக் கைவிட்டு இந்தப் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட முடியாது. அது காணாமல் ஆக்கப்பட்ட உயிர்களுக்கு நாம் செய்யும் துரோகம் ஆகிவிடும்.
சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் என்று தம்மைக் கூறிக்கொண்டு, பல நாடுகளின் அரசுகளின் மறைமுகமான நிதியோடு கையாளப்படுகின்ற அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு வேலைபார்க்கின்ற ஒரு தொழில் துறையாகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரம் மாற்றப்பட்டிருக்கிறது கவலைக்குரியது. இது பல புதிய கேள்விகளை எழுப்புகிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் இன்று நல்லிணக்கக் குழுவை இலங்கை அரசு சார்பாக இயக்குகிறார். இவரின் ஆட்சிக்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும், குறிப்பாக செம்மணி, மன்னார் மனிதப் புதைகுழிகளில் தம் உறவுகள் கொல்லப்பட்டார்களா என்று இன்றும் அங்கலாய்க்கும் எமது உறவுகளுக்கு எந்தப் பதிலையும் அவர் சொல்வதற்குத் தயாராக இல்லை. மனிதப் புதைகுழிகளில் பலியானவர்களை அடையாளப்படுத்துவதற்கு இதுவரையும் இவர் எதையும் செய்யவில்லை.
ஒரு முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் மட்டுமல்ல, தனது கணவனைத் துப்பாக்கி ரவைகளுக்குப் பலிகொடுத்த ஒரு சிங்களப் பெண்ணுக்கு தனது கணவனை இலங்கை இராணுவத்திடம் கையளித்துவிட்டு இன்னும் தேடிக்கொண்டிருக்கு ஒரு தமிழ்ப் பெண்ணாகவும் அவருக்கு நான் சொல்லவிரும்புகின்ற செய்தியும் இதுவே.
உண்மையில் நல்லிணக்கத்தை நாடுவதாக இலங்கை அரசு இனியாவது மாறவேண்டும் என்று விரும்பினால், தற்கால அல்லது முன்னாள் அரச தலைவர்கள் அவ்வாறு தாம் முன்மாதிரியாக மாறவேண்டும் என்று உண்மையாக விரும்பினால், இங்கே நடாத்தப்பட்ட இன அழிப்புப் போரை மனிதாபிமான யுத்தம் என்று வருணிப்பதற்குப் பதிலாக, இங்கே தமிழர்கள் நடாத்தியது ஒரு விடுதலைப் போராட்டம், அதிலே பங்கேற்றவர்கள் அனைவரும் விடுதலைப் போராளிகள் என்று எதுவிதமான கூச்சமும் இல்லாமல் அங்கீகரிக்கவேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டோர் பயங்கரவாதிகள் அல்ல என்ற நிலையில் இருந்தே காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளாகிய நங்கள் நல்லிணக்கத்தை ஆரம்பிக்க முடியும்.
இலங்கைத் தீவில் நடந்ததைப் போன்று உங்கள் நாடுகளில் நடந்ததாகி விடுதலைப் போராட்டங்கள் என்றும் , விடுதலைப் போராளிகள் என்றும் அங்கீகரித்து உங்கள் நாடுகளில் நீங்கள் கடைபிடிக்கும் நல்லிணக்கத்தை இலங்கை அரசுக்குப் போதிக்காமல் மாறாக எங்களை மாறுங்கள் என்று நிர்பந்திப்பவர்களுக்கும் இதையே நங்கள் சொல்ல முடியும்.
ஆளவே சிவில் சமூகமாக இருப்பினும், தனி மனித சுதந்திரத்தைப் பற்றி பேசுபவர்களாக இருப்பினும் , சர்வதேச சட்டங்களை பற்றி பேசுபவர்காளாக இருப்பினும், மனித உரிமை என்பது கூட்டு உரிமை என்பதையும் அந்தக் கூட்டு வறுமையில் சமத்துவம் எவ்வாறு முக்கியமானது என்பதையும் அங்கீகரித்தவாறு முன்னோக்கிச் செல்லாத தயாராக வேண்டும்.