வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே அவர்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் போது வடக்கின் ஆளுநராக செயற்படுகிறார்.
கொழும்பு சென்றதும் பேரினவாத சிந்தனை கொண்ட அரசியல்வாதியாக மாறிவிடுவதைக் காண முடிகின்றது.
கொழும்பு சென்று அங்கு உரையாற்றும் போதெல்லாம் அவரின் உரைகள் தமிழ் மக்களுக்கு எதிரானதாக அமைந்திருப்பதைக் காணலாம்.
இவ்வாறான அவரின் போக்கு தமிழ் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
வடக்கு முதல்வரின் கருத்துக்கள் நல்லிணக்கத்தைப் பாதிப்பதாகக் குற்றஞ்சாட்டும் ஆளுநர் கூரே, ஆவா குழு தொடர்பில் வடக்கின் முதல்வர் மற்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியோர் முன் வைத்த கருத்துக்களை மறுதலித்துள்ளார்.
ஆவா குழு என்பது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவால் உருவாக்கப்பட்டது என்றும் அந்தக் குழு இராணுவத்தின் உதவியுடன் இயங்குவதாகவும் அமைச்சர் ராஜித சேனா ரட்ன வெளிப்படையாக கூறியுள்ளார்.
அதேநேரம் ஆவா குழு தொடர்பில் மேற்போந்த சந்தேகத்தை வடக்கின் முதல்வர் ஏலவே தெரிவித்திருந் தார்.
இந்நிலையிலேயே அதனை உறுதி செய்யும் வகையில் அமைச்சர் ராஜிதவின் கருத்தும் அமைந்திருந்தது.
இக்கருத்துக்களில் குற்றம் காணும் ஆளுநர் கூரே ஆவா குழுவுக்கும் இராணுவத்துக்கும் தொடர்பு இல்லை என மறுதலித்துள்ளார்.
இம்மறுதலிப்பின் மத்தியில் ஆவா குழுவுக்கும் கோத்தபாய ராஜபக்சவுக்கும் தொடர்பு இருந்ததா என்ற கேள்விக்கு அதை நான் அறியேன் என்பது ஆளுநரின் பதிலாக இருந்தது.
ஒருவிடயம் பற்றி தெளிவாக, உறுதியாக தெரி யாதவிடத்து அதுபற்றிப் பேசாமல் இருப்பதே நல்லது. அதைவிடுத்து அவசரப்பட்டு வடக்கின் முதல்வரின் கருத்துக்களால் நல்லிணக்கம் பாதிக்கப்படுகின்றது என ஆளுநர் கூறுவது எந்த வகையில் நியாயமானதாகும்?
நல்லிணக்கம் பற்றி பேசுவதற்கு ஆளுநர் பொருத்தமுடையவர். வடக்குக்கும் தெற்குக்கும் நல்லிணக் கத்தை ஏற்படுத்துவதில் ஆளுநரின் வகிபங்கு முக்கியமானது. அவ்வாறு நல்லிணக்கம் பற்றி ஆளுநர் பேசுவதாக இருந்தால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்குப் பலியானபோது அந்த மாணவர்களின் வீட்டுக்குச் சென்று அந்த மாணவர்களுக்கு ஆளுநர் அஞ்சலி செலுத்தியிருக்க வேண்டும்.
ஆனால் அதை அவர் செய்யவில்லை. மாறாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிங்கள - தமிழ் மாணவர்களிடையே மோதல் நடந்தபோது காயப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிங்கள மாணவர்களை ஆளுநர் கூரே ஓடோடிச் சென்று பார்வையிட்டு அவர்களின் நலன் விசாரித்தார்.
வடக்கின் ஆளுநர் ஒருவர் தன் அதிகார எல்லைக்குட்பட்ட பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தில் காயப்பட்ட மாணவர்களை பார்வையிடுவது நியாயமானதும் ஏற்புடையதும் என்றால், அதே பல்கலைக் கழகத்தில் படித்த - பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான மாணவர்களின் வீட்டுக்குச் சென்று தன் அனுதாபத்தைத் தெரிவிக்க மறந்தது ஏன்?
ஆக, காயப்பட்டவர்கள் சிங்கள மாணவர்கள். இறந்தவர்கள் தமிழ் மாணவர்கள். எனவே காயம டைந்தவர்கள் சிங்கள மாணவர்கள் என்பதால் அவர்களைச் சென்று பார்வையிட்ட வடக்கின் ஆளுநர் இறந்தது தமிழ் மாணவர்கள் என்பதால் அதுபற்றி அலட்டிக் கொள்ளவே இல்லை.
ஆக, நல்லிணக்கம் என்பது தனித்து வடக்கின் முதலமைச்சருக்கு மட்டும் உரியதன்று. மாறாக அது ஆளுநருக்கும் உரியது என்பது உணரப்பட வேண்டும். அப்போதுதான் நல்லிணக்கம் உருவாகும்.
அதேநேரம் நல்லிணக்கம் என்பது வெறும் வார்த்தையால் பேசுவதன்று. அது செயலில் காட்டப்பட வேண்டும் என்பதையும் ஆளுநர் அறிந்திருந்தால் அது நன்மை பயக்கும்.