
கியூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. காஸ்ட்ரோ ஒரு பிறவி புரட்சியாளர். கியூபாவில் புரட்சி மூலம் 1959-ல் ஆட்சி அதிகாரத்தை ஃபிடல் காஸ்ட்ரோ கைப்பற்றினார்.
இத்தனைக்கும் அவர் மாபெரும் பண்ணையார் குடும்பத்தின் வாரிசாகப் பிறந்தவர். ஆனால் சொத்து சுகங்களைத் தூக்கிப் போட்டுவிட்டுத் துப்பாக்கி ஏந்தி, காட்டுக்குள் போனவர் அவர்.
கியூபா ஒரு கம்யூனிச தேசமாக உயிர்த்திருப்பதற்கும், இந்த வினாடி வரை அமெரிக்காவால் அசைத்துப் பார்க்க முடியாத இரும்புக் கோட்டையாகத் திகழ்வதற்கும் ஒரே காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. உடல்நலக்குறைவு காரணமாக 2006-ம் ஆண்டு, அதிபர் பதவியில் இருந்து விலகிய பிடல் காஸ்ட்ரோ தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோவுக்கு அந்தப் பொறுப்பை வழங்கினார்.
அமெரிக்க கண்டத்தில் கம்யூனிச ஆட்சி நடைபெறும் ஒரே நாடு கியூபா என்பது குறிப்பிடத்தக்கது. ஃபிடல் காஸ்ட்ரோ இல்லையென்றால், கியூபா அமெரிக்காவின் ஒரு மாநிலமாகவே இருந்திருக்கும்.