போராடினால்தான் எதுவும் கிடைக்கும் என்றாயிற்று


எதுவும் தானாக நடக்கும் என்ற பேச்சுக்கே இந்த நாட்டில் இடமில்லாமல் போயிற்று.
அந்தளவுக்கு எல்லாவற்றுக்கும் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

தங்கள் சொந்த மண்ணில் குடியிருப்பதற்கு அனுமதியுங்கள் என்று மன்றாடியும் சரிவராத நிலையில்,
கேப்பாப்பிலவு மக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர். அவர்களின் தொடர் போராட்டம் அவர்களின் நிலத்தை மீட்பதற்கு வழிவகுப்பது மட்டுமன்றி, 

தமிழர் தாயகத்தில் எங்கெல்லாம் படையினர் தமிழ் மக்களின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனரோ அங்கெல்லாம் நில மீட்புப் போராட்டம் நடப்பதற்கும் வழிவகுத்துள்ளது.

நில மீட்புக்காக மட்டுமல்ல காணாமல்போன வர்களின் விவகாரம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்ற விடயங்களிலும் போராட்டம் நடத்தினால்தான் எதுவும் நடக்கும் என்றாயிற்று.

தமிழ் மக்களின் அரசியல் தலைமை எதுவும் செய்யாத நிலையில் தமிழ் மக்கள் தாமே தமக்குத் துணை என்பதாக களத்தில் இறங்கி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கேப்பாப்பிலவு மக்களின் தொடர் போராட்டம்; காரணமாக அவர்களின் நிலத்தை அவர்களிடம் ஒப்படைப்பதற்கு ஜனாதிபதி உத்தரவு வழங்கியதான செய்திகள் வெளிவந்தமை மனதுக்கு ஆறுதலைத் தருகிறது.

எனினும் காணி விடுவிக்கப்படுவதும் ஒரு பகுதி சிறுபகுதி என்றால் அதைவிட்ட அநியாயம் வேறு எதுவுமாக இருக்காது.

ஆக, மக்களின் சொந்த நிலத்தை முழுமையாக விடுவித்து அவர்களின் வாழ்வியலுக்கு உதவுவது அரசின் கடமை என்ற அடிப்படையில், நில விடுவிப்பு முழுமையாக இடம்பெற வேண்டும்.

கேப்பாப்பிலவு மக்கள் நடத்தி வரும் தொடர் போராட்டமே அந்த மக்களுக்கு அவர்களின் நிலத்தை மீட்டுக் கொடுக்கிறது. இதில் அரசியல் இலாபம் தேடுவதற்கு ஒரு சிலர் முற்படுவது மிகப்பெரும் அபத்தம்.

ஒரு மாத காலமாக கேப்பாப்பிலவு மக்கள் போராட்டம் நடத்திவரும் வேளையில், தாம் ஜனாதிபதியைச் சந்தித்ததால்தான் பிலவுக்குடியிருப்பு விடுவிக்கப்படுகிறது என்று தமிழ் அரசியல் தலைமை கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இருந்தும் அவ்வாறான கதைகள் அவிழ்த்துவிடப்பட்டால் அதன் பின்விளைவு மிக மோசமானதாக இருக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொண்டால் சரி.

இது ஒருபுறம் இருக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவுக்கு  ஆதரவு வழங்கிய தமிழ் அரசியல் தலைமை  ஆதரவுக்காக சில நிபந்தனைகளை  முன்மொழிந்து அதை அமுல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.

அந்த மகா தவறுக்குப் பின்னர் இப்போது ஐ.நா கூட்டத்தொடரில் கடும் நிபந்தனையுடன் காலஅவகாசம் வழங்கலாம் என்று சம்பந்தப் பெருமான் பரிந்துரை செய்துள்ளார்.

இஃது தமிழ் அரசியல் தலைமை விடும் மாபெரும் தவறாகும். என்ன செய்வது அரசுக்கு விசுவாசம்; தமிழர்களுக்கு எதிர் என்று தமிழ்த் தலைமை முடிவு செய்து விட்டது என்றால் இதைத் தவிர வேறெதுதான் நடக்கும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila