புதுக்குடியிருப்பில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட வீடுகளில் உடனடியாகக் குடியமர முடியாதவாறு அவை உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இதனால் கோபமடைந்த மக்கள், இராணுவம் செய்த வேலை சரியா? இவர்களிடம் மனிதாபிமானத்தை நாம் எதிர்பார்க்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
புதுக்குடியிருப்புப் பிரதேச செயலத்துக்கு முன்னால் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி கடந்த ஒரு மாத காலமாக தகரக் கொட்டகை அமைத்து தொடர் அறவழி போராட்டத்தையும், சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தையும், நடத்திய மக்கள் நேற்று அவர்களது காணிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்தே அவர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
சமையல் அறையில் உள்ள அடுப்புகள் இடிக்கப்பட்டிருந்தன. கதவு நிலைகள் உடைத்துக் கழற்றப்பட்டிருந்தன. வீடுகள் உடனடியாகக் குடியமர முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டிருந்தன.
பலத்த எதிர்பார்ப்போடு சென்ற மக்கள் இவ்வாறான செயற்பாடுகளைக் கண்டு ஆத்திரம் அடைந்த நிலையில், "இராணுவம் செய்த வேலை நியாயமானதா? இவர்களிடம் நாம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியுமா?" எனக் கேள்வி எழுப்பினர்.