தமிழர் தாயகத்தில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்வதாக வடகிழக்கு ஊடக அமைப்புக்கள் ஜநாவில் அம்பலப்படுத்தியுள்ளன. ஜநாவிற்கு விஜயம் செய்த வடகிழக்கு ஊடக அமைப்புக்களின் பிரதிநிதியொருவர் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு மஹிந்த ஆட்சியிலிருந்து தற்போதைய நல்லாட்சி அரசு எனச்சொல்லப்படுகின்ற ரணில் – மைத்திரி அரசிலும் எவ்வாறு தொடர்கின்றதென்பதையும் அம்பலப்படுத்தியிருந்தார்.
சிங்களவர்கள் எவருமேயற்ற கொக்கிளாயில் முன்னெடுக்கப்படும் விகாரை நிர்மாண வேலைகள் மற்றும் மணலாற்றில் முன்னெடுக்கப்படும் குடியேற்றங்கள், நாயாறு முதல் முகத்துவாரம் வரையான கரையோர ஆக்கிரமிப்பு உள்ளிட்ட சிங்கள பௌத்த மயமாக்கல் தொடர்பில் புள்ளிவிபரங்களுடன் அம்பலப்படுத்தியதுடன் யாழ்.ஊடக அமையத்தினால் வெளியிடப்பட்ட இருள் இதயபூமி ஆவணப்படத்தின் மூலம் சான்றாதாரங்களையும் முன்வைத்திருந்தார்.
கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு என்பதை பேசினால் சர்வதேச தரப்புக்கள் வெறுப்பினை சந்திக்கவேண்டுமென்ற பிரச்சாரங்கள் மத்தியிலும் சிலர் அடக்கி வாசிக்க கட்டமைக்கப்பட்ட இன அழிப்புத்தான் நடந்தது தற்போதும் நடந்து கொண்டிருக்கின்றதென்பதையும் ஊடக அமைப்புக்களது பிரதிநிதியொருவர் தெளிவுபடுத்தியிருந்தார்.
குறிப்பாக இலங்கையில் ஆட்சி மாற்றத்தை செயற்படுத்திய தொழிற்சங்கப்பிரதிநிதிகள், சர்வதேச நாடுகளது ஜநா பிரதிநிதிகள் மத்தியில் இச்சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டமை அனைத்து தரப்புக்களாலும் கவனிக்கப்பட்டிருந்தது.
பெரும்பாலும் வடக்கிலிருந்து வரும் சிலர் ஜநாவிலும் சின்னமேளம் ஆடுவதாக விமர்சித்த மனித உரிமை ஆர்வலர் ஒருவர் வெறும் உணர்ச்சிப்பேச்சுக்களால் ஆட்களற்ற கடையில் இத்தகையோர் தேனீர் ஆற்றிக்கொண்டிருப்பதாக நையாண்டி செய்திருந்தார். ஆனால் தாயகம் திரும்பி தாங்கள் மலைகளை புரட்டிப்போட்டுள்ளதாக சொல்லப்போவதை போராடும் மக்கள் நம்பி ஏமாறப்போகின்றார்களா என்பதையும் அவர் கேள்விக்குட்படுத்தியிருந்தார்.