கொழும்பு கொலன்னாவில் குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர் என்ற துயரச் செய்தி நெருடலைத் தந்துள்ளது.
அனர்த்த மரணங்கள் எங்கு நடந்தாலும் அவை மனிதர்களைப் பாதிக்கவே செய்யும்.
அந்த வகையில் கொலன்னாவில் உள்ள நம் சிங்கள சகோதரர்களின் குடியிருப்புக்கள் மீது குப்பைமேடு சரிந்ததில் நூறு பேரளவில் காணாமல்போயுள்ளனர் என்றும் நேற்றுவரை முப்பத்திரண்டு பேரின் சடலம் மீட்கப்பட்டது என்ற செய்திகளும் தமிழ் மக்களை கடுமையாக வேதனைப்படுத்தியுள்ளது.
இழப்புகளின் துயரோடு வாழ்பவர்கள் தமிழர்கள். போர்க்களத்தில் சிக்குண்டு உயிரிழந்த தம் உறவுகளை இன்று வரை நினைந்து கண்ணீர் விடுகின்ற மக்களுக்கு; காணாமல்போனவர்களைத் தேடி இன்று வருவார், நாளை வருவார், என் மரணத்திற்கு முன்பாக வந்து விடுவார் என்று சதா ஏங்கும் தமிழ் மக்களுக்கு கொலன்னாவையில் நடந்த அனர்த்தம் மிகுந்த வேதனையைத் தரவே செய்யும்.
நெக்குண்டு நெகிழ்ந்துபோன மனம் என்பதால், கொலன்னாவ இழப்பை எங்களின் இழப்பாக பார்க்கும்போது கன்னத்தின் ஓரங்கள் நனைந்து கொள்கின்றன.
ஏழை மக்கள் என்பதால் அவர்களுடன் குப்பை மேடும் சேட்டை விட்டுப்பார்த்துள்ளது போலும். என்ன செய்வது! ஆசியாவின் ஆச்சரியம் என்கிறார் ஒருவர். இலங்கையில் இப்போது நடப்பது நல்லாட்சி என்கிறார் இன்னும் சிலர்.
ஆனால் நிலைமை கொலன்னாவில் கொட்டப்பட்ட குப்பை மேடு சரிந்து, ஏழை மக்களின் வீடுகளுக்கு மேல் வீழ்ந்து மூடியதால் நூறுபேரளவில் காணாமல் போயுள்ளனர் என்பதாக இருக்கிறது.
ஏழை மக்களின் நலன்பற்றி இந்த நாட்டில் யாரும் சிந்திக்காததால் மலையகத்தில் நடந்த மண் சரிவு பலரைக் காவு கொண்டது.
இப்போது கொலன்னாவையில் குப்பைமேடு ஏழை மக்களின் உயிரைப் பதம் பார்த்துள்ளது. இந்த அக்கிரமங்கள் தொடர்ந்து செல்கிறதேயன்றி அதைத் தடுப்பார் இல்லை என்பதாக நிலைமை நீள்கிறது.
இலங்கை பெளத்த சிங்கள நாடு என்பதாகக் கொண்ட பேரினவாதம் யுத்தம் நடத்தாமலே இலங்கையில் மக்களைக் கொன்று குவிக்கிறது.
ஆம், தமிழ் மக்களை கொன்றொழிப்பதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களில் ஆயுதக் கொள்வனவைச் செய்து போர் நடத்தி தமிழினத்தை சங்காரம் செய்ததன் காரணமாக, இந்த நாட்டின் ஏழை மக்களுக்கு அரசாங்கங்களால் எந்த உதவியையும் செய்ய முடியவில்லை.
கொலன்னாவையில் குப்பை மேட்டுக்கு அண்மித்த தாழ் நிலங்களில் குடியிருக்கின்ற மக்களை வேறு இடங்களில் குடி அமருமாறு ஏலவே அறிவித்தல் விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஏழை மக்கள் என்பதால்தான் அவர்களின் இருப்பிடம் சேரிப்பகுதியாக உள்ளது. அந்த மக்களை காப்பாற்ற வேண்டுமானால் பாதுகாப்பான இடத்தில் வீடமைத்து அந்த மக்களிடம் திறப்பைக் கொடுத்து, இதோ உங்களுக்கான வீடுகள், நீங்கள் அங்கு மகிழ்வாக இருங்கள் என்று சொல்வது தான் அரசுக்கு அழகு. இதைவிட்டு வேறு இடத்தில் இருங்கள் என்றால் ஏழை மக்கள் என்ன செய்ய முடியும்?
ஆக, பணத்தைச் செலவிட்டு ஆயுதம் வாங்கி தமிழ் மக்களைக் கொன்றவர்கள் ஆயுதக் கொள்வனவால் நிதி விரயமாகி ஏழை மக்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது போய், ஏழைச் சிங்கள மக்களையும் இப்போது கொல்கிறார்கள் என்பதே உண்மை.
என்ன செய்வது! ஏழைகள் என்றால் இலங்கையில் இனவேறுபாடின்றி மண்ணும் குப்பைமேடும் சேட்டைவிடவே செய்யும் என்பது தான் நிதர்சனமாக உள்ளது.