சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்த போது இளைஞன் ஒருவர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பொலிஸாரில், பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 6 பொலிஸாரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், குற்றவாளிகளுக்கு தலா 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததுடன் 2 பொலிஸாரை வழக்கில் இருந்து விடு தலை செய்துள்ளார்.
குறித்த குற்றவாளிகள் 6 பேரும் தலா 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்த வேண்டும் என்றும் தண்டப்பணம் செலுத்த தவறின் ஒரு வருட கடூழிய சிறை அனுபவிக்க வேண்டும் என்றும், தலா 2 லட்சம் ரூபாய் நஷ்டயீட்டினை உயிரிழந்த சுமணனின் இரத்த உறவினருக்கு செலுத்த வேண்டும் என்றும் செலுத்த தவறின் ஒரு வருட கடூழிய சிறை தண்டனை எனவும் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் இருந்த சிறீஸ்கந்தராசா சுமணன் என்ற இளைஞர் உயிரிழந்திருந்தார். அவரது உடல் கிளிநொச்சி பகுதியில் உள்ள குளத்தில் மீட்கப்பட்டிருந்தது.
குறித்த வழக்கில் சித்திரவதை சட்டத்தின் கீழ் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அக் காலப்பகுதியில் கடமையாற்றிய 8 பொலிஸாருக்கு எதிராக, சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றச்சாட்டு பத்திரம் யாழ்.மேல் நீதிமன்றில் கடந்த வருடம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வகையில் முதலாம் எதிரியாக திசாநாயக்க முதியான்சலாகே சந்தக்க நிசாந்த பிரிய பண்டார 2 ஆம் எதிரி ஞானலிங்கம் மயூரன், 3ஆம் எதிரி பத்திநாதன் தேவதயாளன், 4ஆம் எதிரி ராஜபக்ச முதியான்சலாகே சஞ்சீவ ராஜபக்ச, 5 ஆம் எதிரி கோன் கலகே ஜயந்த, 6 ஆம் எதிரி வீரசிங்க தொரயலாகே ஹேமச்சந்திர வீரசிங்க, 7ஆம் எதிரி விஜயரட்னம் கோபிகிருஷ்ணன், 8 ஆம் எதிரி முனுகொட ஹேவகே விஜேசிங்க ஆகிய எட்டு பொலிஸார் இந்த வழக்கில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டு தொடர் விசாரணை இடம்பெற்றது
நேற்றைய தினம் பிரதி மன்றாதிபதி மற்றும் எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகளின் தொகுப்புரைகள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து நீதிபதியால் உடனடியாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதி தனது தீர்ப்பில் மேலும் தெரிவிக்கையில்,
வழக்கு தொடுநர் தரப்பில் முக்கிய சாட்சிகளாக 2 சிவிலியன்களின் சாட்சியம், பொலிஸாரின் பதிவுப்புத்தக சாட்சியம், மருத்துவசாட்சி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் சாட்சியங்கள் வாக்குமூலம் அளிக்கப் பட்டது.
கடும் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சுமணன் என்பவர் சித்திரவதை செய்யப்பட்டு கிளிநொச்சியில் மரணமானது இவ் வழக்கின் சாராம்சம், பிரதிமன்றாதிபதி தனது வழக்கை நியாயமான சந்தேகத்துக்கப்பால் நிரூபித்துள்ளதாக தெரிவித்தார். ஏதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் வழக்கில் குறைபாடுகள் முரண்பாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டியிருந்தனர்.
சுரேஷ் என்ற சந்தேக நபரின் சாட்சியத்தில் சுமணன் எவ்வாறு சித்திரவதைக்குட்படுத்தப்பட்டார் என்று முன்வைக்கப்பட்டது.
நீதிமன்றை பொறுத்தவரையில் மருத்துவ சாட்சியம் முக்கியமானது. குறித்த நபருக்கு 6 வெளிக்காயங்களும் 11 உட்காயங்களும் இருப்பதாக சட்டவைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். அவை 2 நாட்களுக்குள் ஏற்படுத்தப்பட்டதாக சாட்சியம் அளித்துள்ளார்.
25ஆம் திகதி கைது செய்யப்பட்ட நபர் சட்டத்தின்படி 24 மணித்தியாலத்துக்குள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் குறித்த நபர் சட்டத்துக்கு முரணான தடுப்பு காவலில் இருந்துள்ளார். சுமணனுடன் கைது செய்யப்பட்ட ஏனைய 4 பேரும் 26ஆம் திகதி நீதிமன்றில் முற்படு த்தப்பட்டுள்ளனர் சுமணன் முற்படுத்தப்படவில்லை. அவர் தொடர்பான எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
சுமணன் மரணம் அடைந்த பின்னர் தான் 27ஆம் திகதி முதன்முறையாக சுமணனை பற்றி அறிக்கை எழுதப்பட்டுள்ளது. பொலிஸாரின் பாதுகாப்பில் இருக்கும் போதே குறித்த மரணமும் நிகழ்ந்துள்ளது. இவை அனைத்தும் பொலிஸாரின் எழுத்து மூல ஆவணத்தில் இருந்து நிரூபணமாகியுள்ளது.
பிரதி மன்றாதிபதி 1ஆம் 2ஆம் ,4ஆம், 5ஆம், 6ஆம், 7ஆம் எதிரிகளுக்கு எதிராக நியாயமான சந்தேகத்துக்கப்பால் குற்றச்சாட் டுக்களை எண்பித்துள்ளார்.
3ஆம் எதிரி தொடர்பில் வழக்கு தொடுநர் தரப்பு நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் அவரின் குற்றச்சாட்டை எண்பிக்காததால் அவரை இவ் வழக்கில் இருந்து விடுதலை செய்து மன்று தீர்ப்பளிக்கிறது.
அதே போன்று 8ஆம் எதிரி சாரதியாக கடமையாற்றியுள்ளார். அவர் மேல் சாதாரண சந்தேகம் காணப்படுவதாலும் நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் அவரின் குற்றச்சாட்டை எண்பிக்காததால் அவரை இவ் வழக்கில் இருந்து விடுதலை செய்து மன்று தீர்ப்பளிக்கிறது.
ஏதிரிகள் 6 பேரும் தமது கூட்;டு வாக்கு மூலத்தில் பெரும்பாலான பகுதியை ஒப்புறுதி செய்திருந்தும் சித்திரவதை செய்ததை மட்டும் மறுத்துள்ளனர். அதை மன்று ஆய்வு செய்தபோது அவை நம்பகத்தன்மையற்ற வாக்குமூலம் என மன்று தீர்ப்பளிக்கிறது.
தடுப்பு காவலில் இருந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டிருந்தால் அதற்கு பொறுப்பதிகாரியும் அவருடன் இணைந்திருந்தவர்களும் பொறுப்புக்கூற வேண்டும். எனவே தடுப்புக்காவலில் இருந்தபோது சுமன் காயமடைந்துள்ளார்.
அதனை ஒப்புறுதி செய்யும் வகையில் 3 ஆம் சாட்சி அமைந்துள்ளது. அத்துடன் பொலிஸாருடைய ஆவணங்கள் பதிவேடுகளில் இருந்து இவர்கள் தான் இக் குற்றத்தை புரிந்துள்ளார்கள் என நியாயமான சந்தேகத்துக்கப்பால் எண்பிக்கப்பட்டுள்ளது.
இது மனித நேயத்துக்கு எதிரான குற்றம், அவசர கால சட்டத்தின் போதோ யுத்த நிலைமையிலோ, அமைதியான சூழ்நிலையின் போதோ சித்திரவதை செய்ய முடியாது. எனவே சட்டமா அதிபரால் எதிரிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட சித்திரவதைக் குற்றச்சாட் டில் 6 எதிரிகளும் குற்றவாளிகள் என மன்று தீர்ப்பளிக்கிறது என தெரிவித்தார்.