பொறுத்திருக்கவேண்டிய அவசியம் கிடையாது! உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள்: சுமந்திரன்

காணாமல்போனோர் அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று அரசிடம் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளது பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
போரின்போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதை உடனடியாக அரசு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்குத் தெரிவிக்கவேண்டும் என்று வலியுறுத்தியும், காணாமல்போனோர் அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு எட்டு மாதங்கள் கடந்து.
அதனை நடைமுறைப்படுத்த அரசு இன்னமும் நடவடிக்கை எடுக்காது அசமந்தப்போக்கில் செயற்படுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டியும் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் ஒன்றியத்தினர் நேற்று மகஜர் கையளித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இல்லாத காரணத்தால் அவர் சார்பில் அந்த மகஜரை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பெற்றுக்கொண்டார். இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

"காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கான சட்டமூலம் கடந்த ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் சட்டமூலத்திலுள்ள பல குறைபாடுகளை நிவர்த்திசெய்து சட்டமூலத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சி பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.
வாக்கெடுப்பின்றி சட்டமூலம் அனைத்துத் தரப்பின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டும் இன்றுவரை சட்டமூலம் நடைமுறைக்குக் கொண்டுவரப்படாமை துரதிஷ்டவசமானது. இந்தச் சட்டமூலத்தை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவரும்படி பல தடவைகள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தியிருந்தார்.

எனினும், காணாமல்போனோர் சட்டமூலத்தில் திருத்தம் கொண்டுவரப்படவேண்டியுள்ளது; அதன்பின்னர்தான் சட்டமூலத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவோம் என்று ஜனாதிபதி எங்களுக்கு வாக்குறுதியளித்திருந்தார்.
ஆனால், கூட்டமைப்பின் நிலைப்பாடானது சட்டமூலத்தில் எவ்வேளையிலும் திருத்தங்களை மேற்கொள்ளலாம். திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்பதற்காக சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தாமல் இருக்கமுடியாது. இதனை திட்டவட்டமாக ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.

இந்தச் சட்டமூலம் எந்த அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்ற நடைமுறையை ஜனாதிபதி இன்னமும் தீர்மானிக்கவில்லை. பிரதமர் இந்த விடயத்தைப் பொறுப்பேற்பதாக சில மாதங்களுக்கு முன்னர் எங்களிடம் கூறியிருந்தார். ஆனால், அவரும் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் காணாமல்போனோர் சட்டமூலத்தை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

காணாமல்போனோர் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசு கூறும் திருத்தங்கள் தற்போது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. குறித்த திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் சட்டமூலத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
எனினும், திருத்தங்கள் மேற்கொள்ளும்வரை பொறுத்திருக்கவேண்டிய அவசியம் கிடையாது. சட்டமூலமொன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருப்பின் அந்தச் சட்டமூலத்தை நிர்வகிப்பது எவர் என்று ஜனாதிபதி உடனடியாக வர்த்தமானியில் பிரசுரிக்கவேண்டும்.

உடனடியாக காணாமல்போனோர் அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று நாங்கள் அரசுக்குப் பகிரங்கக் கோரிக்கை விடுக்கின்றோம்'' - என்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila