சிறிலங்காவின் புதிய அரசியல் யாப்பு தமிழருக்கான சர்வரோக நிவாரணி!? பனங்காட்டான்

parliment_sl.jpg

எஞ்சியிருக்கும் தமிழரையும் ஒழித்துக் கட்டுவதற்காக அவர்களுக்கு விமோசனம் வழங்கத் தயாரென மகிந்த அறிவித்துள்ளார். அவரது அகராதியில் விமோசனம் என்பதன் அர்த்தம் தமிழர்களை மறுஉலகுக்கு அனுப்பி வைப்பதே.
இலங்கையில் இந்த மாதம் முதலாம் திகதி ஆங்காங்கே நடைபெற்ற மே தினக் கூட்டங்களின் முழக்கங்கள் தொடர்பான விமர்சனங்கள் ஏறுமாறாகவும், எதிர்கால எதிர்வுகூறலாகவும் எடுப்புத் தொடுப்புடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பித்தளை முலாம் பூசப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் தலைமையிலான நீலக்கட்சி இரண்டு அணியாகப் பிளவுபட்டு, தமக்குள் மோதிக் கொண்ட மிகப்பெரிய பகிரங்க நிகழ்வாகவும் மாறிக் கொண்டது இதிலுள்ள முக்கியம்.
நீலக் கட்சியின் முன்னாள் தலைவர் மகிந்தவும், இந்நாள் தலைவர் மைத்திரியும் தங்கள் இருப்பை நிலைநாட்டிக் கொள்ளவும் மக்களுக்கு எடுத்துக் காட்டவும் மே தின விழாவை நீயா நானா போட்டியாக்கிக் கொண்டனர்.
முன்னாள் தலைவர் மகிந்த கொழும்பின் காலிமுகத்திடலை தனது ஆதரவாளர்களால் நிறைத்து, மைத்திரி ஆட்சியைக் கலைப்பதற்கான முதற்படி இதுவென்று அறைகூவினார்.
அத்துடன் அவர் நிறுத்தவில்லை. எனது மசிரைக்கூட எவராலும் பிடுங்க முடியாது என்று ஊழல் விசாரணையைப் பார்த்து பகிரங்க சவாலும் விடுத்தார்.
2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் தலையில் சூட்டப்பட்டிருந்த முடி இறக்கப்பட்டு, பின்னர் தொகுதி மாறிப் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகிய இவர், இப்போது பறிபோன முடியை மறந்து மசிர்க் கணக்கு பார்ப்பது வேடிக்கையானது.
காலிமுகத்திடலை நிரப்ப பல கோடி ரூபாக்களை இவரது அணி அள்ளி வீசியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மறுபுறத்தில், மைத்திரிபால சிறிசேனவில் தலைமையிலான நீல அணி கண்டியில் தனது மே தினத்தை நடத்தியது. காலிமுகத்திடலுக்கு நிகரான மக்கள் கூட்டமென்றே செய்திகள் சொல்லுகின்றன.
ஒரே கட்சி இரண்டாகப் பிளவுபட்டு, தலைகளின் எண்ணிக்கையில் அரசியல் கணக்கு பார்த்துக் கொண்டிருக்க, ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் வழக்கமான இடத்தில் தனது பலத்தைத் தனித்துக் காட்டியது.
ஆளும் தரப்புடன் ஒட்டி உறவாடியவாறு எதிர்க் கட்சி என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அம்பாறையில் ஆலையடிவேம்பு என்ற இடத்தில் தனது மே தின நிகழ்வை நிகழ்த்தியது.
யாழ்ப்பாணம், வன்னி, திருமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதான தமிழ் நகரங்களில் மக்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால், அந்தப் பக்கங்களை எட்டிப் பார்க்க முடியாத அச்சம் காரணத்தால் கூட்டமைப்பினர் அம்பாறையைத் தெரிந்தெடுத்ததாக சொல்லப்படுகிறது.
வடக்கிலோ கிழக்கிலோ மே தின விழாவை இவர்கள் நடத்த முயன்றிருந்தால், துண்டைக் காணோம் துணியைக் காணோமென இவர்கள் ஓடித் தப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்குமென மாகாண சபை உறுப்பினர் ஒருவர் விமர்சித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரியில் மே தின விழாவை நடத்தினர். கூட்டமைப்பின் இன்றைய போக்கு இங்கு தாராளமாக விமர்சிக்கப்பட்டது.
இதற்கப்பால், ஜே.வி.பி. மற்றும் சில தொழிற்சங்கங்கள் என்பன தத்தம் பாணியில் இந்நாளைக் கொண்டாடினர். இவர்கள் எல்லோருமே மே தினம் என்பது தொழிலாளர் தினம் என்பதை மறந்து, அரசியல்வாதிகள் தினம் என்பதுபோல நினைத்து தொழிலாளர் நலன்கள் தவிர்த்த மற்றைய அனைத்தையும் பேசி முடித்தனர்.
சகல மே தினக் கூட்டங்களிலும் மறவாது பேசப்பட்ட ஒரு விடயம் தமிழர் பிரச்சனை அல்லது தமிழ் மக்களின் அபிலாசைகள் என்பது.
போர்க்குற்ற விசாரணை, பொறுப்புக் கூறல், சர்வதேச பங்கேற்பு என்பவைகளை வசதி கருதி மறந்து போனவையாக இவர்கள் மாற்றி விட்டனர்.
மசிரை எண்ணிப் பார்த்த மகிந்த தமிழ் மக்களை விளித்துக் கூறியது சுவாரசியமானது.
தமது தலைமையிலான ஆட்சி ஏற்பட்டால் மட்டுமே தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்குமென்று நெஞ்சை நிமிர்த்தி தலையை உயர்த்தி இவர் கூறியுள்ளார்.
இவரது ஒரு தசாப்தத்துக்கும் மேலான ஜனாதிபதி ஆட்சியில் தமிழ் மக்கள் சந்தித்த அவலங்களையும் அவர்கள் எவ்வாறு அழித்தொழிக்கப்பட்டார்கள் என்பதையும் நினைவுபடுத்த வேண்டிய தேவையில்லை.
மனித குலத்துக்கெதிரான செயற்பாடுகளின் மொத்த உருவமே மகிந்த என்பதாற்தான், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவரை அவரது கூண்டோடு வீட்டுக்கு தமிழர்கள் அனுப்பினர் என்பது வரலாற்றுப் பதிவு.
எஞ்சியிருக்கும் தமிழரையும் ஒழித்துக் கட்டுவதற்காக அவர்களுக்கு விமோசனம் வழங்கத் தயாரென மகிந்த அறிவித்துள்ளார். அவரது அகராதியில் விமோசனம் என்பதன் அர்த்தம் தமிழர்களை மறுஉலகுக்கு அனுப்பி வைப்பதே.
பிரதமர் ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றுகையில் ஒற்றையாட்சிக்கு எந்தப் பாதகமும் ஏற்படாத அதிகாரப் பகிர்வையே புதிய அரசியல் யாப்பினூடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
இவர் கூறும் ஒற்றையாட்சி என்பது, சிங்கள பௌத்த ஏகாதிபத்திய ஆட்சி என்பதை நாம் புரிந்து கொண்டால் போதும்.
இன்றைய அரசின் சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக கருத்து வெளியிடுகையில், இது முதலில் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு அனுப்பி வைக்கப்படுமென்றும், அதன்பின்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படுமென்றும் தெரிவித்துள்ளார்.
சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பாக தெரிவித்த கருத்து வேறுவிதமானது.
புதிய அரசியல் அமைப்பு முதலில் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு வாக்குகளால் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்.
மகிந்த தரப்பிலான கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் 43 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை எதிர்த்தே வாக்களிப்பர். இந்நிலையில் இங்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்குமா என்பது கேள்விக்குறி.
மகிந்தவை போரின் வெற்றி நாயகன் எனத் துதிக்கும் சிங்கள மகாஜனங்கள் இதனை ஆதரிக்க மாட்டார்கள் என்பதால் சர்வஜன வாக்கெடுப்பு வெற்றி பெறுமா என்பது சந்தேகத்துக்குரியது.
ஆனால், இரண்டிலும் வெற்றி பெற முடியுமென மைத்திரிபால சிறிசேன நம்புவதுபோலவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நம்புகிறது.
இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் இனப்பிரச்சனைக்கு அடுத்த இரண்டு வாரத்துக்குள் தீர்வு தெரியவருமென்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆலையடிவேம்பு மே தின நிகழ்வில் உரையாற்றுகையில் கூறியுள்ளார்.
2016 இறுதிக்குள் தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு வருமென கடந்தாண்டு முழுவதும் சம்பந்தன் கூறி வந்ததை இவ்வேளை நினைவிற் கொள்வது நல்லது.
நடந்தது என்ன? எனது நம்பிக்கையை மட்டுமே சொன்னேன் என்று கூறி பின்னர் அவர் மழுப்பியதுதான் மிச்சம்.
வரப்போவது புதிய அரசியல் யாப்பா? ஆல்லது அரசியல் யாப்பில் திருத்தமா என்பதுகூட எவருக்கும் இன்னமும் தெரியவில்லை.
இதற்கான வழிகாட்டல் குழு தனது இடைக்கால அறிக்கையை அரசியல் நிர்ணய சபையிடம் கையளித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் எதனையும் உத்தியோகபூர்வமாக தெரிவிக்க ஒருவருமே தயாரில்லை.
சுயநிர்ணய அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்கிலே ஏற்படுத்தப்படும் கூட்டாட்சி முறைமைக்கு முழுமையான அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் விதமான, அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படும் அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டுமென்ற கூட்டமைப்பின் மே தினத் தீர்மானம்கூட இன்னொரு நம்பிக்கையின் அடிப்படையின் வெளிப்பாடுதான்.
ஆனால், புதிய அரசியல் யாப்பு தமிழர் பிரச்சனைக்கான சர்வரோக நிவாரணி என்பதுபோல படம் காட்டப்படுகிறது.
கிழிந்துபோன முகப்புத் திரைக்கு பின்னால் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த நாடகம் மேடையேறும்?
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila