சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் எங்கே போவது? ‘பாதுகாவலன்’ வாரஏட்டின் ஆசியர் தலையங்கம்


புதிய அரசியல் யாப்பு தேவையில்லையென மகாநாயக்க தேரர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதை விமர்சித்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் கத்தோலிக்க திருச்சபையின் ‘பாதுகாவலன்’ வாரஏடு ஆசியர் தலையங்கம் ஒன்றை எழுதியுள்ளது. ‘சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் எங்கே போவது?’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்த ஆசிரியர் தலையங்கத்தில் மகாநாயக்க தேரர்களிடமே நாட்டை ஒப்படைத்து விடுங்கள் என கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கம் முழுமையாக கீழே தரப்பட்டுள்ளது. சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் எங்கே போவது 1920இல் இனப்பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் பௌத்தகுருமாரின் ஆதிக்கம் இலங்கை அரசியலில் கூடுதலாகவுள்ளது. பௌத்த சமயத்துக்கு அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் அதன் வெளிப்பாடாகும். முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்டி.பண்டாரநாயக்கா சுட்டுக்கொல்லப்பட்டதன்  பின்னரான நிலையிலும் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு ஜனாதிபதியும் பிரதமரும் பௌத்த பிக்குகளின் ஆசியை பெறுகின்றனர். அது அவர்களுடைய சமயப்பண்பு.
ஆனால் பௌத்த பிக்குகளிடம் ஆலோசணையை பெற்று ஆட்சி நடத்துவது அல்லது பௌத்த குருமாரை திருப்திப்படுத்தி ஆட்சிபுரிவது ஏனைய சமூகங்களின் அரசியல் பொருளாதார, கலாச்சார உரிமைகளின் நிலைமை பற்றிய அச்சம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது. 2015இல் நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்ற காலம் முதல் பிக்குமாரின் கருத்து வெளிப்பாடுகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தன.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை மாற்றி நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வந்ததில் அனைவருக்கும் பெரும் பங்குண்டு. ஆனாலும் நல்லாட்சி அரசாங்கமும் எங்களை ஏமாற்றும் என்றுதான் வடக்கு கிழக்கு தமிழர்களில் பெரும்பான்மையோர் கருதினர். இருந்தாலும் விரும்பியோ விரும்பாமலோ சில நம்பிக்கை அடிப்படையில் மக்களில் கணிசமான பகுதியினர் வாக்களித்தனர்.
ஆனால் இரண்டு ஆண்டுகள் சென்ற பின்னரும் கூட மாற்றங்கள் எதனையும் காண முடியவில்லை. புதிய அரசியல் யாப்பின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு வரும் என்று சொன்னார்கள். ஆனால் அந்த யாப்பிலும் இனப்பிரச்சினை தீர்வு பற்றிய விடயங்கள் எதுவும் இல்லையென கூறப்பட்டது. இருந்தாலும் தமிழரசுக் கட்சியின் மூத்த சட்டவல்லுநர்கள் சிலர் இந்த புதிய யாப்பின் மூலமாக குறைந்தபட்சத் அதிகார பரவலாக்கம் ஏற்படும் என நம்பிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புதிய அரசியல் யாப்பு தேவையில்லை என்றும் திருத்தங்கள் கூட செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லையெனவும் மாகாநாயக்க தேரர்கள் கூறியுள்ளனர். ஆகவே மாகாநாயக்க தேரர்கள் கூறியது அவர்களின் கருத்தா அல்லது அரசாங்கம் அவர்கள் மூலமாக எங்களுக்கு சொல்லி அனுப்பிய செய்தியா? பொதுவாகவே மாகாநாயக்க தேரர்கள் சொன்னால் அதனை அரசாங்கம் கேட்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் ஒன்றும் உள்ளது.
இலங்கையின் வரலாறும் அதுதான். இந்த நிலையில் 70 ஆண்டுகால அரசியல் உரிமை போராட்டம் நடத்திய சமூகம் ஒன்றின் நிலைமை என்ன? கத்தோலிக்க திருச்சபை இனப்பிரச்சினை நீதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றது. வடக்கு கிழக்கு இணைந்த சுயாநிர்ணய உரிமையுடன் கூடிய கூட்டாச்சி ஒன்றுதான் சரியான தீ;ர்வு என்பது பொதுவான நிலைப்பாடு. இந்த நிலையில் மகாநாயக்க தேரர்களின் மேற்படி கருத்தை அரசாங்கம் ஏற்குமா? அப்படியானால் யுத்தத்தை அழிப்பதற்கு காரணமாக இருந்த இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் நிலைப்பாடு என்ன? யுத்த அழிவுகளுடன் தமிழர்களின் அரசியல் உரிமைக் கோரிக்கைகளும் புதைக்கப்பட்டுள்ளதா என்பதை இந்த நாடுகள் பகிரங்கமாகக் கூற வேண்டும்.
அதிகாரப் பங்கீட்டைத்தான் தமிழர்கள் கோரினார்கள் அதிகாரப் பகிர்வையல்ல. ஆனால் எதுவுமே இல்லாத புதிய அரசியல் யாப்புக்கு இத்தனை எதிர்ப்பு என்றால் சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் எங்கே போவது?
மாகாநாயக்க தேரர்களின் கருத்துச் சொல்லும் உரிமையை மறுக்க முடியாது. ஆனால் தேரர்களின் மேற்படி கருத்தை அரசாங்கம் ஏற்றுக் கொண்டால் மக்கள் பிரதிநிதிகள் என்று யாரும் பதவி வகிக்க வேண்டிய அவசியம் இல்லை? மாகாநாயக்க தேரர்களிடமே நாட்டை ஒப்டைத்து விடலாம்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila