2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னதாக ஜனவரி 7 ஆம் திகதி அபிவிருத்தித் திட்டமொன்றிற்காக விநியோகிக்கப்பட்ட காசோலை தொடர்பில் முழுமையான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கல்கமுவ பகுதியில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு இன்று உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதி தேர்தல் நடவடிக்கைகளில் அனைவரும் மும்முரமாக ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில், மறுபுறத்தில் பல கோடி ரூபா பெறுமதியான காசோலையொன்று கிங் கங்கை திட்டத்திற்காக வரையப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த பணத்திற்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் கடந்த காலத்தில் சர்ச்சை ஏற்பட்டிருந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதுதொடர்பாக தாம் தகவல் வெளியிட்டபோது, அதனை ஆட்சேபித்த சிலர், அவ்வாறு மோசடி இடம்பெற்றிருப்பின் அதுகுறித்து விசாரணை செய்யுமாறு சவால் விடுத்ததாகவும் ஜனாதிபதி நினைவூட்டினார்.
அந்த மோசடி தொடர்பில் தற்போது முழுமையான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கிங் – நில்வலா திட்டத்திற்காக அந்த காலப்பகுதியில் திறைசேரியினால் விநியோகிக்கப்பட்ட பணத்திற்கு என்ன நேர்ந்தது, யாரிடம் இருக்கின்றது என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் சில நாட்களில் பகிரங்கப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.