யாரிடம் சொல்வோம் இறைவா! யாரிடம் சொல்வோம் நாம் படும் வேதனையை யாரிடம் சொல்வோம் இறைவா! இந்தப் பாடல் வரிகளே எம் இதய முகாரி யாய் ஒலிக்கிறது.
நேற்றைய தினம் மண்டைதீவு சிறுத்தீவுக் கடல் பரப்பில் ஆறு மாணவர்களை பலி கொடுத்துவிட்டு யாழ்ப்பாண மண் கதறி அழுகிறது.
பெற்று வளர்த்து பெரும் கனவோடு காத்திருந்த வேளை ஒரு கணப்பொழுதில் ஆறு மாணவர்களை கடலில் பலி கொடுத்தோம் என்றால், யார் மனம்தான் ஆறும்.
ஓ! இறைவா! எங்களுக்கு நல்ல செய்தி ஏதும் கிடைக்காமல் தடுப்பதுதான் உன் விருப்பமா?
முன்பு போரில் கொடுத்துத் தீர்த்தோம். இப் போது வாகன விபத்தில் பலி; புகையிரதம் மோதி உயிரிழப்பு; வாழவிருப்பின்றி உயிர் மாய்ப்பு; புற்றுநோய் எனும் கொடும் நோயால் இளம்தாய் இறப்பு இப்படியே இழப்புகளைச் சுமந்து சுமந்து தாங்கமுடியாமல் தள்ளாடும் தைரியம் மட்டுமே எங்களிடம் மிச்சம் என்றி ருக்கும் போது,
மண்டைதீவு சிறுத்தீவுக் கடற்பரப்பில் ஆறு மாணவர்கள் ஒரு கணப்பொழுதில் உயிரிழந்தனர். அவர்களின் உடலங்கள் யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டது என்ற செய்தியை ஜீரணிப்பதென்பது ஒருபோதும் முடியாத விடயம். இதைத் தாங்கிக் கொள்ள யாராலும் இயலாது.
பிரபல்யமான பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள் யாருமற்ற சூழலில் படகெடுத்து கடலில் இறங்கி... ஏன்தான் இப்படியயல்லாம் நடக்கிறது.
என்னைப் பெற்றவள், என் தந்தை, என் சகோதரர்கள், என் உறவுகள், என் பாடசாலை, என் மாணவத் தோழர்கள், என் எதிர்காலம் இவையாவுமே எங்கள் மாணவர்களிடம் - இளைஞர்களிடம் வலுக்குறைந்து போவது ஏன்? என்பதுதான் தெரியவில்லை.
நான் இல்லை என்றால் என் தாய்க்கும் தந்தைக்கும் இந்த உலகம் இருளாகிப் போகு மல்லோ என்று நினைக்க முடியாத அளவில் தான் எங்கள் பிள்ளைகளை நாம் உருவாக்கி வருகிறோமா? அல்லது அன்பு, பாசம், நட்பு இவை எல்லாவற்றையும் நாம் இழந்து ஆளரவம் அற்ற இடங்களைத் தேடி அங்கு சென்று கூடியிருந்து ஒரு குறுகிய வட்டத்துக்குள் எங்கள் ஆன்மாவை அடக்கி விடுகிறோமா? எதுவும் தெரியவில்லை.
யுத்தங்கள், இடப்பெயர்வுகள், உணவுத் தட்டுப்பாடு, மருந்துத் தட்டுப்பாடு இவற்றின் போதெல்லாம் கட்டிக்காத்து பக்குவமாக வளர்த்து விட்ட போது... இப்படியயாரு அனர்த்தம் என்றால், கடவுளே! இப்படியயாரு துன்பம் வேண்டாம். இழப்பு வேண்டாம்.
ஓ! தமிழ் உறவுகளே கையடக்கத் தொலை பேசி, தொலைக்காட்சி, இணையம், முகநூல் இவற்றின் கண்டுபிடிப்பில் எந்தப் பங்கும் வகியா நாம் அதிலேயே எங்கள் வாழ்வை புதைத்து அடுத்தவர், அயலவர், உறவினர் என்று எதனையும் திரும்பிப்பாராமல் எல்லாவற்றையும் பறிகொடுத்து வருகிறோமே இனியேனும் சிந்திக்கிலோமோ!
ஓ! நாம் எல்லோரும் தனியாள்களாய் வாழப் பழகி அது பிடித்தும் கொண்டதால், எங்கள் பிள்ளைகள் ஓர் உலகம் உருவாக்கி அதில் தங்களை மறந்து எங்களை கண்ணீரில் மிதக்க வைக்கின்றனர்.
இதற்கெல்லாம் ஒரு முடிவு காண வேண்டாமோ சர்வேசா!