அரண்மனையில் இருக்கக்கூடிய குதிரைகளுக்கு காவலாக ஒருவரை நியமித்தார்கள்.
இரவு வேளையில் குதிரைகளைப்பாதுகாப்பதுதான் அவரின் பணி. இரவு என்றதும் அந்தக் காவலாளிக்கு உறக்கம் வந்துவிடும்.
என்ன செய்வது உறங்கினால் குதிரைகள் திருட்டுப் போய்விடும். எனவே உறங்காமல் விழித்திருந்து குதிரைகளைப் பாதுகாப்பதற்கு உரிய உபாயத்தை அறிவதில் அந்தக் காவலாளி ஈடுபட்டார்.
தனக்குத் தெரிந்த ஒருவரிடம் சென்று, விழித்திருப்பதற்கு உபாயம் கேட்டார். அதற்கு அவர், இரவில் வானத்தில் தோன்றும் நட்சத் திரங்களை எண்ணிக் கொண்டிருந்தால் உறக்கம் உன்னை அணுகாது என்றார்.
குதிரைக் காவலாளியும் அவரின் ஆலோசனையை ஏற்று, வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களை எண்ணத் தொடங்கினார்.
அவ்வளவுதான் லயத்தில் இருந்த குதிரைகள் அத்தனையும் திருட்டுப் போய்விட்டன.
மறுநாள் செய்தி மன்னனுக்குச் செல்கிறது. மன்னன் காவலாளிக்கு மரண தண்டனை விதிக்கிறான்.
எதற்காக நித்திரை விழிக்கிறோம் என்பதை மறந்து, நித்திரை விழிப்பதற்காக வேலை செய்யத் தலைப்பட்டதால் வந்த வினை இது.
இதுபோன்றுதான் இன்றைய இலங்கையின் நிலைமையும் உள்ளது.
தமிழ் மக்களுக்கு உரிமை கொடுக்கக் கூடாது. இந்த நாட்டில் அவர்கள் இரண்டாம் தரப் பிரஜைகள் என்பதில் உறுதியாக இருந்த இலங்கையின் ஆட்சியாளர்கள் அதற்காக சில உபாயங்களையும் தந்திரங்களையும் வகுத்தார்கள்.
அதன்படி அவர்கள் இந்தியாவுடன் உறவு வைத்தார்கள். பின்னர் இந்தியா தம்மைக் கட்டுப்படுத்திவிடும் என்று பயந்த போது, இலங் கையில் சீனாவுக்கு இடம்கொடுத்தால்தான் இந்தியாவை மடக்கலாம் என்று நினைத்தார்கள்.
இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் இந்தி யாவை அனுசரிக்க வேண்டியதாயிற்று. கூடவே சீனாவையும் வெளியேற்ற முடியவில்லை.
ஆக, இப்போது இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் சொல்வதை இலங்கை கேட்கவேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
சீனாவை வெளியேற்றாவிட்டால் இந்தியா வின் கோபத்துக்கு ஆளாக வேண்டிவரும். கூடவே அமெரிக்காவும் இலங்கையை பகைத் துக் கொள்ளும். மாறாக சீனாவை வெளியே போ என்றால், செய்தது ஒப்பந்தம் என்று சீனா சர்வதேச சட்டவிவகாரங்களைக் காட்டி வெளி யேற முடியாது என்று கூறும்.
வெளியேறு என்று கூறிய பின்பு வெளியேற முடியாது என்று சீனா கூறுமாக இருந்தால், அது ஆக்கிரமிப்பு என்ற வகுதிக்குள் அடங்கி விடும். ஆக, இப்போது இலங்கையை இந்தியாவும் சீனாவும் பங்குபோடக் காத்திருக்கின்றன.
அட, தமிழனுக்கு சமஷ்டி கொடுத்தால் அது நாட்டுக்கு, பெளத்த சிங்களத்துக்கு ஆபத்து என்று நினைத்து இந்தியாவையும் சீனாவையும் நாட்டுக்குள் கொண்டுவர, அதுவே இன்று இலங்கைக்கு பேராபத்தாகி விட்டது.
இந்நிலையில் தமிழ் அரசியல் தலைமை யிடம் இராஜதந்திரம் இருந்தால் இந்திய மத்திய அரசைச் சந்தித்து நீங்கள் எல்லாம் செய்யுங்கள். நாங்கள் உங்கள் பக்கம் என்று ஒரு வார்த்தை கூறினால் போதும், தமிழர்கள் வென்று விடுவார்கள்.