ஜனாதிபதி மேற்கொள்ளும் கடும் நடவடிக்கை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வார அமைச்சரவைக் கூட்டத்தின் போது மிக முக்கியமானதொரு பத்திரத்தை சமர்ப்பித்து அதனை கட்டாயமாக அங்கீகரித்து உடனடியாக அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்.
தேர்தலொன்றில் போட்டியிட முன்வரும் வேட்பாளர் ஒருவர் செலவிடக் கூடிய பணத் தொகையை மட்டுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். இதன் பின்புலத்தை மிக ஆழமாக கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
ஒரு வேட்பாளர் தனது தேர்தல் பிரசாரத்துக்காகவும், வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்வதற்காகவும் முறைகேடாக பணத்தை அள்ளிக் கொட்டுவதை கடந்த காலத்தில் நன்கு அவதானிக்க முடிந்துள்ளது. இவ்வாறு பணத்தை கட்டுக்கட்டாக விரயம் செய்வதை தடுப்பதே ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
அத்துடன் ஒரு வேட்பாளர் செலவிடக்கூடிய பணம் எவ்வளவு? அந்தப் பணம் எந்த வழியில் பெறப்பட்டவை என்பன உள்ளிட்ட வரவு செலவு விபரங்களை வேட்புமனு தாக்கல் செய்யப்படும் போது அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் நிறையவே விடயங்களை மூடிமறைப்பவர்களாவர். தமது வருமானம் தொடர்பான விபரங்களை அரசுக்கு தெரியப்படுத்துவதில் நிறையவே முறைகேடாக நடந்து கொள்கின்றனர்.
இவ்வாறான மக்கள் பிரதிநிதிகள் குறித்து கடந்த காலத்தில் நிறையவே முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இறுதியாக நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் தமது செலவு விபரங்களை இன்றளவும் சமர்ப்பிக்கவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் பகிரங்கமாகவே தெரிவித்திருக்கிறார்.
சில வேட்பாளர்கள் தவறான கணக்குகளைக் காட்டி அறிக்கை சமர்ப்பித்திருப்பது கடந்த பல தேர்தல்களிலும் கண்டறியப்பட்டுள்ளது.
இப்படியான நேர்மையில்லாத அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு எப்படி ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்க முடியும்? சுதந்திரமான தேர்தலை எதிர்பார்க்க முடியும்?
ஜனாதிபதியின் இந்த யோசனையின் மூலம் தேர்தல் முறைகேடுகள் பலவற்றுக்கு தீர்வு தேடிக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கலாம். இதில் மிக முக்கியமானது தேர்தல் பின்னணியில் செலவிடப்படும், பரிமாறப்படும் பணம் தொடர்பானவையாகும்.
மக்கள் விருப்புக்கு மாறாக வாக்குகளை கொள்ளையடித்து அதிகாரத்தை பெற்றுக்கொளளும் அரசியல்வாதியிடமிருந்து எவ்வாறு நேர்மையான சேவையை எதிர்பார்க்க முடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.
எமது நாட்டின் இன்றைய ஜனநாயக தேர்தல் முறை காரணமாக ஏழை வேட்பாளர் கூட குறுகிய காலத்துக்குள் பெரும் பணக்காரனாகி விடுகின்றார். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டும், சட்ட விரோதமான வகையிலும் பணத்தை ஈட்டிக்கொள்கின்றனர்.
அதுமட்டுமல்ல, அந்தப் பணம் எந்த வகையில் வந்தது என்பதை வெளியிடவும் தவறுகின்றனர். சிலரது விடயங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டால அதிலிருந்து மீள்வதற்கு பணத்தை அள்ளிக்கொட்டுகின்றனர்.
இலங்கையின் கடந்த கால தேர்தல்களை எடுத்துக் கொண்டால் அத்தேர்தல்களுக்காக மறைந்த தலைவர்கள் தமது சொத்துக்களை, காணி, பூமிகளை விற்ற வரலாற்றை நிறையவே பார்க்க முடிகிறது.
இன்றைய தேர்தல் முறையால் நேர்மையான எவரும் மக்கள் பிரதிநிதிகளாக வரவே முடியாது.
உண்மையான அரசியல்வாதி எதிர்கொள்ளும் சவால்கள் ஒன்றிரண்டல்ல. இதனை ஜனநாயக அரசியல் நெறிமுறைகளை கொச்சைப்படுத்தும் ஒரு காரியமாகவே நோக்க வேண்டியுள்ளது.
நியாயமான, நேர்மையான தேர்தலையும், நேர்மையான பிரதிநிதிகளையுமே நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஜனநாயக ஆளுமை சாக்கடை அரசியலால் அபகீரத்திக்குள்ளாகி உள்ளது.
சுதந்திரத்துக்குப் பின்னரான ஒன்றிரண்டு தேர்தல்கள் மட்டுமே நேர்மையாக நடத்தப்பட்டுள்ளன. ஏனைய அனைத்துத் தேர்தல்களும் முறைகேடானவையாகவே நோக்க வேண்டியுள்ளது.
தேர்தல் பிரசாரங்களுக்காக சிலர் கோடிக்கணக்கான பணத்தை அள்ளிக்கொட்டி அதனால் கைகளை சுட்டுக்கொண்ட வரலாறும் இலங்கை அரசியலில் காணக்கூடியதாக உள்ளது. நல்லெண்ணத்துடன் அரசியல் பிரவேசம் செய்வோர் இறுதியில் வாழ்க்கை கசந்து போன நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய பலவிதமான முறைகேடுகளையும் கவனத்தில் எடுத்து ஜனநாயக அரசியலை தூய்மைப்படுத்த வேண்டிய அவசியம் உருவாகி இருப்பதனை உணர்ந்தே ஜனாதிபதித் தேர்தல் முறை மாற்றத்தோடு தேர்தலில் போட்டியிட முன்வரும் வேட்பாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோரின் கரங்கள் சுத்தமானவையாகவும் மாசுபடாதவையாகவும் இருப்பதை உறுதி செய்யும் பொருட்டே மேற்படி யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்து அங்கீகரிக்கச் செய்திருக்கிறார்.
இதுநேர்மையான அரசியலை விரும்பும் ஜனநாயக விழுமியங்களை மதிக்கும் அனைவராலும் வரவேற்கப்படக் கூடியதொன்றாகும்.
அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டு எழுத்தாவணமாகப் பதிவாவதால் மட்டும் ஜனாதிபதியின் இந்த யோசனை வெற்றி பெறப் போவதில்லை.
கட்டாய நடைமுறைக்கான செயற்பாடுகள் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் தளைக்க முடியும், சுதந்திரமான தேர்தலை எதிர்பார்க்க முடியும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila