எந்தப் பிரச்சினையையும் தீர்க்கவே முடியாத அளவுக்குத்தான் இலங்கை நாடு உள்ளது. பிரச்சினைமயமாகியே உள்ளது இலங்கை நாடு.
இந்தப் பிரச்சினைகளையெல்லாம் தீர்க்க வேண்டும் என்று மக்கள்தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தீர்க்கப்படாத பல பிரச்சினைகளுக்காக மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். நியாயம் கோரிப் போராடுகிறார்கள்.
இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது, அரசியற் கைதிகளின் வழக்கு விசாரணைக்கான இடத்தை மாற்றக் கோரி பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் வடக்குக் கிழக்கில் நடக்கிறது. இன்னொரு தொகுதி மாணவர்கள் கொழும்பில் சைற்றத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அரசியற் கைதிகள் உண்ணாவிரதமிருக்கிறார்கள். தொழிலாளர்கள் கோரிக்கைகளோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படியெல்லாம் போராட்டங்கள் நடந்தாலும் எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்படுவதாக இல்லை.
ஆகவே, நாட்டிலுள்ள பிரச்சினைகளையெல்லாம் தீர்க்க வேண்டும் என்று சிந்திப்பதும் அதற்காகப் போராடுவதும் மக்களே தவிர, தலைவர்களும் அரசியல்வாதிகளும் அல்ல. அல்லது நாட்டின் தொழிலதிபர்களும் அதிகாரிகளும் மதத் தலைவர்களும் அறிஞர்களுமில்லை. இவர்களெல்லாம் பிரச்சினைகளை வளர்க்கின்றவர்களாகவே இருக்கிறார்கள். அல்லது அவற்றை இழுத்தடிக்கிறவர்களாக உள்ளனர். அல்லது அவற்றை மூடிமறைக்க முயற்சிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.
குறைந்த பட்சம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவுவது கூட இல்லை. இவ்வளவுக்கும் இவர்களே பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய அதிகாரக் கட்டமைப்பையும் வளங்களையும் வாய்ப்புகளையும் வைத்திருக்கிறார்கள். இவற்றை வைத்திருப்பதால், பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பும் இவர்களுடையதே. ஆனால், எந்தப் பிரச்சினையையும் இவர்கள் தீர்க்க முயற்சிப்பதில்லை. பதிலாக அவற்றை மேலும் விரிவாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.
மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி சிக்கல், சிரமம், பிரச்சினை என்ற சுழிக்காற்றுக்குள் தள்ளி விட்டு, தங்களின் அதிகாரத்தைத் தொடர்ந்தும் தக்க வைப்பதே இவர்களின் நோக்கமாகும். இதுவே வர்க்க ரீதியான ஒற்றுமையாக இவர்களுக்கிடையில் உள்ளது.
ஆனால், ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால் அதனுடைய திட்டமிடல் அவசியம். அந்தத் திட்டமிடலில் முதலில் கவனிக்க வேண்டியது, அந்த நாட்டின் அரசியலானது பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறிமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதையே. அந்த அரசியலானது, ஜனநாயக வலுக்கொண்ட அரசியலமைப்பையும் சிறந்த பொருளாதாரக் கொள்கையையும் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக மக்களுடைய நல்வாழ்க்கையை மையப்படுத்திய பொருளாதாரக் கொள்கை. இவற்றினால்தான் பிரச்சினைகளைச் சரியான முறையில் தீர்த்து வைக்க முடியும்.
பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய நியாயமான அரசியலமைப்பும் சிறப்பான பொருளாதாரக் கொள்கையும் இருக்குமானால், பிரச்சினைகளே இருக்காது என்பதையும் கவனிக்க வேண்டும். இவ்வாறிருந்தால் வளர்ச்சி இயல்பாகவே ஏற்படும். பிரச்சினைகள் தொடர்ந்தும் இருக்கிறது என்றால், அரசியலமைப்பிலும் பொருளாதாரக் கொள்கையிலும் பிரச்சினை இருக்கிறது, தவறுள்ளது என்றே அர்த்தமாகும்.
இலங்கையின் இனப்பிரச்சினை தொடக்கம் பொருளாதார ரீதியிலான பிரச்சினைகள் வரை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம், அரசியலமைப்பில் உள்ள தவறும் தவறான பொருளாதாரக் கொள்கையுமாகும். இதையே ஒவ்வொரு ஆட்சியாளரும் திருத்தம் செய்கிறோம். மாற்றம் செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு பதவிக்கு வருகிறார்கள். பிறகு இதே தவறுகளைத் திருத்தம் செய்யாமல், மாற்றம் செய்ய விரும்பாமல், அவ்வளவு தவறுகளையும் ஆட்சி செய்கிறார்கள். தவறுகளை ஆட்சி செய்தல் என்பது தவறான ஆட்சியாகவே அமையும். என்றபடியால்தான், சுதந்திரத்துக்குப் பிந்திய எழுபது ஆண்டு கால இலங்கையின் வரலாறு குருதியிலும் கண்ணீரிலும் தோய்ந்திருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களைப் பலியிட்ட ஆட்சியின் வரலாற்றைப் பெருமிதமாகக் கொண்ட மக்கள் நாம் என ஒவ்வொரு இலங்கையரும் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். இவ்வளவுக்கும் இந்த ஆட்சியாளர்களைத் தெரிவு செய்து அதிகாரத்தில் அமர்த்தியவர்கள் மக்களாகிய நாமே. அத்தனை ஆட்சியும் தேர்தல் முறையின் மூலமே அமைக்கப்பட்டது. ஆகவே ஜனநாயக ரீதியான ஆட்சியில் நடந்த கொலைகளும் பலிகளும் கண்ணீரும் துயரமும் அலைச்சலும் அவலமும் இது எனலாம்.
ஒட்டுமொத்தமாகவே நாடு இன்று எந்தப் பிரச்சினைக்கும் எத்தகைய தீர்வையும் காண முடியாத அளவுக்குப் பிரச்சினைகளின் காடாக மாறியுள்ளது. பிரச்சினைகளின் காட்டில் அவலமும் துயரமும் நிம்மதியின்மையுமே நிறைந்திருக்கும். இலங்கை இன்று அப்படித்தான் உள்ளது. இது 75 ஆண்டுகால அவலம். 75 ஆண்டுகாலத் துயரம்.
சுதந்திரமடைந்த போதிருந்த சுயாதீனத் தன்மையை விட இப்பொழுதான் நாடு அதிகமதிகம் சுயாதீனத்தையும் சுயத்தையும் இழந்திருக்கிறது. இன்று நாடு ஏகப்பட்ட சர்வதேச நாடுகளின் (போட்டியாளர்களின்) போட்டிக்கான களமாகியுள்ளது. சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுப்பதற்கும் கண்டனம் செய்வதற்கும் காலக்கெடு விதிப்பதற்கும் எச்சரிப்பதற்கும் இடமளித்துள்ளது.
ஆகவேதான் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாமல் இன்று நாடு இருக்கிறது.
ஆனால், எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். அப்படித் தீர்த்தே ஆக வேண்டும். அவற்றிற்குரிய பொறிமுறை வகுக்கப்பட்டால், எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியும். மனித ஆற்றிலின் முன்னால் இவையெல்லாம் இலகுவானவை.
இன்று அரசியலமைப்புத்திருத்தம் கூட வார்த்தைகளுக்குள் சிக்கிக் கிடக்கிறது.
”நாட்டிலுள்ள பிரச்சினைகளையெல்லாம் கூட்டாக இணைந்து தீர்க்கப் போகிறோம்” என்றே இன்றைய ஆட்சி உருவாக்கப்பட்டது. எதிரும் புதிருமான கட்சிகளும் தலைமைகளும் இன்று ஒருமுகப்பட்டிருப்பதும் இதற்கென்றே கூறப்படுகிறது. ஆனால், ஆட்சியைப் பொறுப்பேற்றுள்ள இன்றைய ஆட்சியாளர்கள் இதுவரையில் என்னென்ன பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்கிறார்கள்? ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. பலமான எதிர்த்தரப்பே இல்லாத நிலையில் முக்கால்வாசிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்திருக்க முடியும். ஆனால், அப்படி எதுவும் நடந்ததா?
பதிலாக பிரச்சினைகளின் தீர்வுக்காக மக்கள் போராடும் போது, அவற்றைப் பார்த்து, “நீங்கள் போராடுவதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. இன்று நீங்கள் உங்கள் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுவதைப்போன்ற வாய்ப்பு முன்னைய ஆட்சியில் இருந்ததா?” என்று அரச முக்கியஸ்தர்கள் கேட்கிறார்கள்.
பிரச்சினைகளின் தீவிரத்தினால் போராட முன்வந்திருக்கும் மக்களுக்குத் தீர்வைக் கொடுப்பதே தேவையானது. பதிலாக நீங்கள் போராடுவதற்கு, உங்கள் குரலை உயர்த்துவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறதே. இது போதாதா என்று கேட்பது எந்த வகையில் நியாயம்? இவ்வாறான பதில் போராடும் மக்களுக்குத் தீர்வாகுமா?
உண்மையில் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முதலாவது வழி அறமாகும். மக்களின் முன்னால் நிற்கிறோம் என்ற விசுவாசமான மனம் உள்ளவரிடம் இந்த அறத்தைக் காணலாம். இது ஜனநாயகத்தின் யுகம். ஜனநாயகத்தின் அடிப்படையே அனைவருக்கும் பொதுவான அறமாகும். அந்த அறம் சரியாக இருக்குமானால், பிரச்சினைகள் இல்லாது ஒழிந்து போகும். ஜனநாயகச் செழுமையில் அனைவருக்கும் கிடைப்பது உரிமையே. அது அனைத்து உரிமைகளுமாகும். அனைத்து உரிமைகளும் கிடைக்கும்போது பிரச்சினைகள் இல்லாது போகின்றன.