வடக்கினில் நடைபெறுகின்ற நிகழ்வுகளிற்கு மாணவர்களை ஆள்பிடித்து எண்ணிக்கை காண்பிப்பதில் கல்வி அதிகாரிகள் தொடர்ந்தும் மும்முரமாக உள்ளனர்.அண்மையினில் யாழ்ப்பாணத்திற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரி வருகை தந்திருந்த வேளை ஆட்தொகையினை காண்பிக்க கல்வி இராஜாங்க அமைச்சர் இராதகிருஸ்ணனின் பணிப்பில் 300 பாடசாலைகளினில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தருவிக்கப்பட்டிருந்தனர்.ஆயினும் மழை காரணமாக இந்துக்கல்லூரி மைதானத்தினில் நடைபெற ஏற்பாடாகியிருந்த நிகழ்வு உள்மண்டபத்திற்கு மாற்றப்பட்டத்திருந்தது.
இந்நிலையினில் மைத்திரி வருகை தந்ததும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அதே போன்று நேற்றைய தினம் வவுனியாவினில் நடைபெற்ற நிகழ்வு மண்டபத்தில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிப்பதாக கூறி முன்னூறுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தூர பிரதேசங்களில் இருந்தும் ஜனாதிபதியினால் கௌரவிப்பினை பெற்றுகொள்வதற்காக பிள்ளைகளை கல்வி அதிகாரிகளது பணிப்பினையடுத்து அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் வந்திருந்தார்கள். ஆனால் முதல் இடங்களை பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே கௌரவிப்பு வழங்கி வைக்கப்பட்டது. ஏனைய மாணவர்கள் கண்டுகொள்ளப்படாததால் மிகுந்த ஏமாற்றத்துடன் வீடு திரும்பியிருந்தனர்.பெற்றோர் பிள்ளைகளுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி அழைத்து சென்றிருந்ததுடன் அரச அதிபர் மற்றும் உத்தியோகத்தர்களை கடுமையாக சாடியிருந்தனர்.
ஜனாதிபதி ,பிரதமரது விஜயத்தின் போது ஆட்களை அழைத்துவந்து எண்ணிக்கை காண்பிக்க அரசு அதிகாரிகள் செய்யும் அடாவடிகளால் பெருமளவு பணம்,நேரத்தை செலவளித்து மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவதை வடமாகாண கல்வி அமைச்சர் கண்டுகொள்வதில்லையாவென்ற கேள்வி எழுந்துள்ளது.