திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை பகுதியில் உள்ள சிறிமாவோ பண்டார நாயக்காவினால் 1972 ஆண்டு விவசாயம் செய்வதற்காக வழங்கப்பட்ட மூதூர் கல் மலையினை அண்டிய காணியை விட்டு வெளியேறுமாறு மூதூர் வனஜீவராசிகள் அதிகாரிகள் அச்சுறுத்துவதாக மூதூர் சந்தனவெட்டையில் குடியிருக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே வேளை இந்த சந்தனவெட்டைப் பகுதியில் தாங்கள் 1972 ஆண்டு காலப்பகுதியில் விவசாயம் செய்து குடியிருந்ததாகவும், யுத்தம் நிலவிய 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்விடத்தை விட்டு இடம் பெயர்ந்து மூதூர் நகர் பகுதிக்குச் சென்று வாழ்ந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் 2009, 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து இற்றைவரை சோளம், நிலக்கடலை போன்ற பயிர்களை செய்து வருகின்றோம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை (8) வருகை தந்த மூதூர் வனஜீவராசிகள் அதிகாரிகள் இவ்விடத்தில் பயிர் செய்ய வேண்டாம் என்றும், வெளியேறிச் செல்லுமாறும் அச்சுறுத்தியதோடு மூன்று விவசாயிகளை கைது செய்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அதேதே வேளை சந்தனவெட்டை பகுதியானது மூதூர் மலையடிவாரத்தை அண்டிய பகுதியாக இருக்கின்றது. இம்மலையில் கல் உடைக்கின்ற வெளியூர்களை சேர்ந்த ஒப்பந்தக்காரர்கள், கற்களை ஏற்றி இறக்குவதற்கு தங்களை வெளியேற்றினால்தான் இலகுவாக இருக்கும் என்பதும் ஒரு காரணமெனவும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த காணி விடயத்தில் உரிய நடவடிக்கை மேற் கொண்டு தமது காணிகளை பாதுகாத்துத் தருமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.