உள்ளூராட்சி சபை தேர்தலிற்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளிற்கிடையிலான இன்றைய சந்திப்பும் தோல்வியில் முடிந்துள்ளது. இதனையடுத்து, வரும் உள்ளூராட்சிசபை தேர்தலில்போட்டியிடுவதில்லையென்ற முடிவை ரெலோவும், புளொட்டும் எடுக்கலாமென தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழரசுக்கட்சியின் எதேச்சாதிகார போக்கால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் மட்டக்களப்பு, முல்லைத்தீவு மாவட்டங்களின் பங்கீடு தொடர்பாக இறுதி முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும், அதில் விட்டுக்கொடுத்து செயற்பட தமிழரசுக்கட்சி தயாராக இருக்கவில்லை. “வெற்றிபெறும் வேட்பாளர்களை நாங்கள்தான் நிறுத்த முடியும்“ என மாவை சேனாதிராசா தெரிவித்ததன் பின்னர் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டதாக தெரியவருகிறது.
புளொட், ரெலோ இரண்டின் அவசரக்கலந்துரையாடல் இன்றிரவு நடக்கிறது. ரெலோ இன்றிரவே தனது நிலைப்பாட்டை வவுனியாவில் அறிவிக்குமென தெரிகிறது. இதனிடையே ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன், ஆனந்தசங்கரியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கான முனைப்பில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் ரெலோ, புளொட் ஆகிய இரு கட்சிகளும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினால் உதயசூரியனில் கரம் கோர்க்க வாய்ப்புள்ளது என்கின்றனர் நோக்கர்கள்..