நாங்கள் எவரின் பின்புலனில் செயற்படவில்லை, தேசத்துக்காக உயிர் நீத்த எங்களது தாயாரையும் எம்மையும் அவமானப்படுத்துவதை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என அன்னைபூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார்.
அன்னை பூபதியின் நினைவு தின நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகள் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் நினைவு தூபியில் அரசியல் கட்சிகளோ அல்லது வேறு அமைப்புகளோ நினைவு தின நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது.
இந்த முடிவினை நாங்கள் நான்கு பிள்ளைகளும் சுயமாக எடுத்துள்ளோம். பொதுமக்கள் மற்றும் பிள்ளைகளாகிய நாங்கள் ஒன்றிணைந்து நாளை 19 ஆம் திகதி நினைவு தினத்தை அனுஷ்டிக்கவுள்ளோம்.
தேசத்தின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த எமது தாயாரான அன்னை பூபதியின் 29 ஆண்டு நினைவு தினத்தின்போது நிகழ்வுகள் நடத்திய அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகளை இதுவரையிலும் நிறைவேற்றவில்லை.
எமது தாயாரின் வரலாறு தெரியாது, எமது தாயாரையும் அவமானப்படுத்தியுள்ளதுடன் வெளிநாடுகளில் இருந்து நிதியினைப் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே இந்த வருடம் அரசியல்வாதிகளோ, வேறு அமைப்புக்களின் சார்பாக நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு எதிராக காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளோம்.
தாயாரின் பெயரை பயன்படுத்தி தேசத்தின் வேர்கள் என்ற அமைப்பு கால்பந்தாட்ட போட்டிகளை நடத்தி வருகின்றது இதனை தடைசெய்ய இதற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த போதும் விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய வீரர்களின் நன்மை கருதி இறுதிநாள் விளையாட்டுப் போட்டிக்கு அனுமதியளித்துள்ளோம்.
நாளை இடம்பெறும் நினைவு தினத்தில் அனைவரும் அஞ்சலி செலுத்தலாம். ஆனால் அஞ்சலி செலுத்திவிட்டு உரையாற்றுவதையோ அல்லது நிகழ்வுகளை நடத்தவோ அனுமதிக்க முடியாது எனவும் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார்.