அத்தோடு, நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்பது குற்றவியல் செயற்பாடுகளுக்கான போர்வையாக இருக்கக் கூடாதென்றும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையில், அண்மைய நாடாளுமன்ற அமர்வுகள் கடும் அமளி துமளியில் முடிவடைந்தன. அது தொடர்பாக ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பின் இலங்கைக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேகர வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டங்களை அங்கீகரிக்கும் உயரிய சபையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்ட விதம், சட்டத்தின் ஆட்சியை கேள்விக்குட்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளை குழப்பும் வகையில் உறுப்பினர்கள் செயற்பட்டமையானது, நாடாளுமன்ற ஒழுக்கக் கோவையை அப்பட்டமாக மீறும் வகையில் அமைந்துள்ளதென ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாக்குதல் நடத்தியமை, அச்சுறுத்தியமை மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்காமை போன்ற செயற்பாடுகளுக்கு 2 வருடங்களுக்கு அதிகமான காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும், சட்டமா அதிபர் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டமா அதிபரின் அறிக்கையின் பிரகாரமே உயர்நீதிமன்றில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்புபட்ட இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் தமது அமைப்பினால் முறைப்பாடு செய்யப்பட்டபோதும், அவர்களுக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென அசோக்க ஒபேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இவ்வாறான மோசமான விடயங்கள் நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டுமென ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேகர வலியுறுத்தியுள்ளார்.