இந்த வருட மார்ச் மாத இறுதியில் சகல உள்;ராட்சிச் சபைகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்பது ஓரளவுக்கு நம்பகமாகவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் இலகுவாக வென்றது போன்று இத்தேர்தலையும் கையகப்படுத்த சூட்டோடு சூடாக அநுர குமார தரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
எதிர்பார்ப்பது வெற்றியளிக்கின், மாகாண சபைகளுக்கான தேர்தலையும் வருட நடுப்பகுதிக்குள் நடத்த ஆலோசிக்கப்படுகிறது. தற்போதுள்ள அதிகாரங்களுடன் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படுமென்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அநுர குமார பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
அதாவது, காணி மற்றும் காவற்துறை அதிகாரமில்லாமல் மாகாண சபைகள் இயங்க அனுமதிக்கப்படும் என்பதே இதன் அர்த்தம். கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இவ்வாறே மாகாண சபைகள் இயங்கியதால் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ள தமிழர் தரப்பும் தயாராகிறது. இந்தியாவும் இதனுடன் மகிழ்ச்சிப் பேறடையும்.
அடுத்து, முன்னைய ஆட்சிக் காலங்களில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்கள் பற்றிய விசாரணைகள் இடம்பெறுகின்ற காட்சிகளை ஊடகங்கள் ஊடாக பார்க்க முடிவதை குறிப்பிட வேண்டும். கொலைகள், கொள்ளைகள், பதுக்கல்கள் சம்பந்தமானவை இவை. பிள்ளையான், கருணா ஆகியோர் அழைக்கப்பட்ட விசாரணைக் கட்டுகளின் படிகளில் மகிந்த ராஜபக்சவின் மகனான யோசிதவும் சென்று வந்திருக்கிறார். முன்னாள் அமைச்சரான வியாழேந்திரனின் மட்டக்களப்பு வீட்டுக்கு முன்னால் ஒருவர் மரணமானது தொடர்பாக அமைச்சரின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜே.வி.பி.யில் அவதாரமெடுத்து மகிந்த ராஜபக்சவின் அரவணைப்பில் வளர்ந்து, கோதபாயவை ஆட்சிபீடத்திலேற்றி, பின்னர் அவரிடமிருந்து பிரிந்து சென்று அரசியலில் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் விமல் வீரவன்சவும் கடந்த வாரம் அதே விசாரணைக் கட்டிடத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். இவர் மீதான குற்ற விசாரணைக்கல்ல. மகிந்தவின் தம்பியும், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ச மீது இவர் சுமத்தி வந்த குற்றச்சாட்டுகள் பற்றிய மேலதிக தகவல்களைப் பெறும் விசாரணைக்கே இந்த அழைப்பு.
முன்னாள் நிதியமைச்சரான, அமெரிக்க இரட்டைப் பிரஜாவுரிமை பெற்ற பசில் அமெரிக்காவில் சொத்துகளை சேர்த்து வைத்திருப்பதைப் பற்றிய விசாரணைகளை அரசு ஆரம்பித்தால் முழுத்தகவல்களையும் தம்மால் தரமுடியுமென விமல் வீரவன்ச இங்கு தெரிவித்துள்ளார். அவர் எதிர்பார்;ப்பதுபோல் விசாரணை தொடருமானால் மகிந்த - கோதபாய - நாமல் உட்பட பலருக்கு நெருக்கடி ஏற்பட இடமுண்டு. இதற்கான வெகுமதியாக, விமல் வீரவன்ச மீதான விசாரணைகளை அநுர குமார அரசு மறைத்துவிடக்கூடும். என்ன இருந்தாலும் விமல் வீரவன்ச ஜே.வி.பி.யின் முன்னாள் தோழரல்லவா? குற்றவியல் வழக்குகளில் எதிரி ஒருவர் முடிக்குரிய சாட்சியாக மாறி புனிதராவது போன்றது இது.
தெற்கின் அரசியல் இவ்வாறு ஜோராக ஓடிக்கொண்டிருக்க தமிழர் தாயகத்தில் தமிழரின் தலைமைக் கட்சியெனவும், மூத்த அரசியல் அமைப்பெனவும் பெயர் கொண்ட தமிழரசுக் கட்சி எழும்ப முடியாது வீழ்ந்து கொண்டிருக்கிறது. அண்மையில் இடம்பெற்ற பல நிகழ்வுகள் இதன் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் ஒன்றாக்கிப் பார்க்க வைக்கிறது.
தமிழரசுக் கட்சியின் நீண்டகால தலைவராகவிருந்த மாவை சேனாதிராஜாவுக்கு ஒருவாறு முடிவு கட்டப்பட்டுவிட்டது. கட்சியின் அண்மைய போக்குகளில் பெரும் விரக்தி கண்ட இவர், வெறுப்பின் உச்சக் கட்டத்தில் இருந்தபோது தமது தலைவர் பதவியைத் துறந்து கடிதம் அனுப்பினார் என்று சொல்லப்படுகிறது. பின்னர் கட்சியினதும், இனத்தினதும் எதிர்காலம் கருதி தமது பதவி விலகலை வாபஸ் பெற்றார்.
மாவையரை எப்போது வெளியே தள்ளலாமென்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாகிப் போனது. முன்னர் ராஜினாமாவை வாபஸ் பெற முடியாது என்று காரணம் சொல்லி பதவி பறிக்கப்பட்டது. (தமிழரசுக் கட்சியின் எந்த யாப்பில் எத்தனையாவது அத்தியாயத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது எவருக்கும் தெரியாது).
கட்சியின் மூத்த துணைத் தலைவராகவிருந்த திரு.சி.வி.கே.சிவஞானம் இப்போது பதில் தலைவராகியுள்ளார். இந்தத் தெரிவு அல்லது நியமனம் நெறிமுறைகளுக்கு உட்பட்டது என்பதால் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயம், மாவையரை கட்சியின் மூத்த தலைவர் அல்லது பெருந்தலைவர் என்று அழைக்கக்கூடாதென்று தடை வந்துள்ளது. தமிழரசுக் கட்சிக்கு மூத்த தலைவர், பெருந்தலைவர் என்பது புதிதான ஒன்றல்ல. கட்சியின் தலைவர் பதவியில் இல்லாதபோதும் இறக்கும்வரை இரா.சம்பந்தன் இவ்வாறுதான் மரியாதையாக அழைக்கப்பட்டார்.
கட்சியின் யாப்பின்படி மூத்த தலைவர் என்பது பதவிப் பெயரன்று. மதிப்பார்ந்த ஒரு கௌரவப் பெயர். அமெரிக்கா, இலங்கை உட்பட பல நாடுகளில் ஆட்சித் தலைவர்களாகவிருந்த அல்லது கட்சித் தலைவர்களாகவிருந்த ஒருவரை, பின்னைய காலத்தில் முன்னாள் தலைவர் (பாஸ்ட் பிரசிடன்ட்) என்று மரியாதையாக அழைப்பது வழக்கம். அவ்வாறுதான் சம்பந்தனும் அழைக்கப்பட்டார். கட்சிக்காகவும், இனத்துக்காகவும் நீண்டகாலம் களமாடிய மாவையரை மூத்த தலைவர் அல்லது பெருந்தலைவர் என்று அழைப்பதால் எந்த இழுக்கும் வந்துவிடப்போவதில்லை. அவரை அவமானப்படுத்தியே வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்ற இழிசெயலால் தமிழரசுக் கட்சி தனது எழுபதாவது ஆண்டில் தன்னைச் சிறுமைப்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும். இது கட்சிக்குள் ஒட்டகம் என்றும் குருவிச்சை என்றும் விமர்சிக்கப்படும் ஒருவரது செயல் என்பதை ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும் தெரிவித்து வருகின்றனர்.
மாவையரை சுமந்திரன் எதற்காக விரோதமாகப் பார்க்கிறாரென்று தமிழரசின் முக்கியமான ஒருவரிடம் வினவியபோது, சில வாரங்களுக்கு முன்னர் சி.வி.கே.சிவஞானம் இவர்கள் இருவர் பற்றியும் அளித்த வாக்கியமே அவரது பதிலாக வந்தது. உந்த அறுவானே அந்தப் பிசாசைக் கொண்டு வந்தது என்று சி.வி.கே. சொன்னது மாவையரையும் சுமந்திரனையும் சுட்டியது. மாவையரின் சில வழக்குகளில் சுமந்திரன் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் ஆஜராகியதாகவும், அதனால் சுமந்திரனை பின்கதவால் (தேசியப் பட்டியல்) எம்.பி.யாக்க சம்பந்தனிடம் மாவையரே சிபாரிசு செய்ததாகவும் தெரிய வருகிறது. மாவையர் தனக்குத்தானே சூனியம் செய்து பரிதவிப்பது தெரிகிறது.
இப்போது கட்சியின் நிலைமையைப் பார்த்தால் அங்கு மூன்று தலைவர்கள் காணப்படுகின்றனர். மாவையர் மூத்த - பெருந்தலைவர். சி.வி.கே.சிவஞானம் பதில் தலைவர். கிளிநொச்சி எம்.பி.சிவஞானம் சிறீதரன் சுமந்திரனை தோற்கடித்து முறைப்படி கட்சியின் தலைவராகத் தெரிவாகியும், வழக்கின் முடிவுகளுக்காக காத்திருக்கிறார். பவளவிழா ஆண்டில் கட்சிக்கு இப்படியொரு சோதனை.
கட்சியின் செயலாளர் என்று பார்க்கின் அங்கும் நிரந்தரமாக ஒருவருமில்லை. உதவிச் செயலாளராகவிருந்த ப.சத்தியலிங்கம் பதில் செயலாளராகப் பணியாற்றுகிறார். இவர் முன்னர் வடமாகாண அரசில் அமைச்சராகவிருந்தபோது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர். இவரை சுமந்திரனின் றப்பர் ஸ்ராம்ப் என்றே கட்சிக்காரர்கள் சொல்கின்றனர். தேவைப்பட்டால் தமது எம்.பி. பதவியைத் துறந்து சுமந்திரனை தேசியப்பட்டியல் எம்.பி.யாக்க இவர் தயாராகவிருப்பதாக ஊடகங்களில் அவ்வப்போது செய்தி வருகிறது.
சொல்லப்போனால் மாவையரை வெளியேற்றியது, சி.வி.கே.சிவஞானத்தை பதில் தலைவராக்கியது, தேர்தல் வேட்பாளரை நியமிப்பது நீக்குவது ஆகிய அதிகாரங்களைக் கொண்ட கட்சியின் செயலாளர் பதவியில் சத்தியலிங்கத்தைப் புகுத்தியது எல்லாமே ஒருவரின் திட்டமிட்ட செயல் என்பது கட்சியின் உறுப்பினர்களால் பகிரங்கமாகச் சொல்லப்படுகிறது.
இது போதாதென்று, கட்சியின் பேச்சாளராக சுமந்திரன் நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு அவரே அண்மையில் ஊடக சந்திப்பொன்றையும் நடத்தியிருந்தார். இப்பதவி இப்போது வழங்கப்படவில்லையென்றும் ஏற்கனவே இப்பதவியில் அவர் இருந்து வந்ததாகவும் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சொல்கிறார். கடந்த பொதுத்தேர்தலின் பின்னர் கட்சியின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் தெரிவாகி அப்பதவியை அவர் வகித்துக் கொண்டிருக்கையில், சுமந்திரன் எவ்வாறு கட்சியின் பேச்சாளராகத் தொடர முடியுமென்ற கேள்விக்கு பதிலளிக்க யாரும் இல்லை.
இன்னொரு புறத்தில், தம்மை கட்சியின் பதில் தலைவராக்கியதற்கும் சுமந்திரனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று கூறும் சி.வி.கே. சிவஞானம் தாம் அவரது கட்டுப்பாட்டில் இயங்குபவர் அல்லவென்றும் தெரிவித்துள்ளார். இதனை ஓரளவுக்கு நிரூபிக்கும் வகையில் கடந்த வருட கடைசி நாளான டிசம்பர் 31ம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை தனியாக நடத்தி கட்சியின் எதிர்காலத் திட்டத்தை விளக்கியுள்ளார்.
என்னதான் சொன்னாலும், தமிழரசுக் கட்சி பொதுமக்கள் முன்னால் சின்னாபின்னமாகக் காணப்படுகிறது. முழுமையான இயங்கு நிலையில் இல்லாத கட்சிக்கு பெயரளவில் மூன்று தலைவர்கள். அதில் ஒருவர் பதில் தலைவர். நிரந்தரச் செயலாளர் இல்லை. இங்கும் பதில் செயலாளர். தோற்றுப்போனவர்களுக்கு ஒரு பேச்சாளர், வென்றவர்களுக்கு ஒரு பேச்சாளராக இரண்டு பேச்சாளர்கள். இப்படியொரு நிலையில் இலங்கையில் எந்த அரசியல் கட்சியும் இல்லை.
தமிழர்களுக்கு தலைமை தாங்க வேண்டிய தமிழரசுக் கட்சி அதன் எழுபத்தைந்தாவது வயதில் தமிழிழிவுக் கட்சியாக காட்சியளிக்கிறது.