கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலையே என வலியுறுத்தி வட மாகாணசபையில் நேற்றுமுன்தினம் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டிருந்தது. இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன்- கடந்த அரசாங்கம் மக்களைத் துன்புறுத்தியுள்ளது என்பதற்காகவே அதனை மாற்றும் தீர்மானத்துக்கு மக்கள் வந்தனர். இதனாலேயே புதிய அரசாங்கத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். இந்தநிலையில் வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானமானது கடந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்பானவை. யுத்த விதிமுறைகளை மீறி மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இறுதியுத்தத்தின் போது 70 ஆயிரம் பேர்வரை உயிரிழந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையே தெரிவித்துள்ளது. கடந்த 30 வருட யுத்தத்தில் சுமார் 3 இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மட்டுமன்றி கடந்த அரசாங்கம் யுத்தத்தின் பின்னரும் மக்களை துன்புறுத்தியது. இதனால்தான் மீன்பிடி படகுகளில் ஏறி மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்றனர். தாக்குதல்கள் மட்டுமன்றி துன்புறுத்தல்களும் இனப்படுகொலைகளே. இவற்றுக்கு எதிராகவே வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவை தொடர்பில் புதிய அரசாங்கம் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமோசனங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு புதிய அரசாங்கம் முன்வரவேண்டும். புதிய அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகளை முன்வைப்பதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மீள்குடியேற்றம், காணிகளைக் கையளிப்பது உள்ளிட்ட விடயங்களை நாங்களே அழுத்தம் கொடுத்து அரசாங்கத்துடன் பேசிவருகின்றோம். இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் இந்த அரசாங்கம் கவனத்தில்கொண்டு உரிய தீர்வை வழங்கவேண்டும். தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கும், புதிய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கும் நல்லுறவுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். |
முன்னைய அரசுக்கு எதிரானதே வட மாகாணசபைத் தீர்மானம்! சுரேஸ் பிரேமச்சந்திரன்
Add Comments