இலங்கையில் தமிழர் பகுதிகளில் முகாமிட்டுள்ள ராணுவ படைகள் இப்போதைக்கு குறைக்கப்படாது என்று ,பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிகராக அமைச்சர் சுஷ்மாவைச் சந்தித்த பின்னர் , இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவது தொடர்பாக இலங்கை அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால் சில விஷயங் களில் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. மாநில முதல்வர்களுக்கு தன்னாட்சி உரிமம் வழங்கினால், போலீஸ் துறை அவர்களின் சொந்த ராணுவமாகிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து விரிவான ஆலோசனை நடத்தப் பட்டு வருகிறது. இந்திய ராணுவ நடைமுறைகளைப் பின்பற்றியே இலங்கையில் ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழர் பகுதிகளில் முகாமிட்டுள்ள ராணுவ படைகள் இப்போதைக்கு குறைக்கப்படாது. எதிர்காலத்தில் அங்கு நிலைமை மேம்பாட்டால் அதுகுறித்து பரிசீலிப்போம். நாடு முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அப்பகுதி மக்களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் அரசை விமர்சித்து வருகிறார். ஆனால் உண்மை என்னவென்றால் தமிழ் மக்கள் விக்னேஸ்வரனை அதிகமாக விமர்சித்து குற்றம் சாட்டி வருகின்றனர். வடக்கு, கிழக்கு மாகாணங் களை இணைப்பது குறித்து இரு மாகாணங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதுகுறித்து முடிவு செய்ய பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும்.