முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நீதிமன்றில் ஆஜராக வேண்டும்.
உச்ச நீதிமன்றில் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
முன்னிலை சோசலி கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் துமிந்த நாகமுவினால் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நாட்டின் சிவில் பாதுகாப்புச் சட்டத்தை மீறும் வகையில் மஹிந்த ராஜபக்ஸ செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாகிய நேரத்தில் முப்படையினரையும் முக்கிய இடங்களில் நிலைநிறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முப்படைகளின் சேனாதிபதி என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, நாட்டின் பல பகுதிகளில் படையினரை நிலைநிறுத்தியதாகவும் இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதி விசேட வர்த்தமான அறிவித்தல் ஒன்றின் ஊடாக காவல்துறையினரின் அதிகாரங்களை முப்படையினருக்கு தொடர்ச்சியாக வழங்கி நாட்டை இராணுவ மயப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 18ம் திகதி இந்த மனு பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் உள்ளிட்ட நீதவான் குழுவினால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி இன்று நீதிமன்ற விசாரணைகளில் பங்கேற்க மாட்டார் எனவும் சட்டத்தரணி ஒருவரின் ஊடாக தமது பக்க நியாயங்களை முன்வைப்பார் எனவும், மஹிந்தவிற்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.