விக்கியும் வரதரும் சந்தித்ததன் தாற்பரியம் எதுவாக இருக்கும்?


வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் யாழ்ப்பாணம் ஆறுதல் நிறுவனத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் உரையாற்றியிருந்தார். அவரின் உரையின் சாரம் வடக்கு கிழக்கு மாகாணத்தில்தான் முதலமைச்சராக இருந்ததன் பட்டறிவைப் பகிர்வதாக இருந்தது.

தனது பட்டறிவை கூறுவதாக அவரின் உரை அமைந்திருந்தாலும் தமிழர்கள் வரலாற்றுத் தவறை இழைத்து விட்டார்கள் என்பது அவரின் கருத்தாகும்.

வடக்கு கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த வரதராஜப்பெருமாள் ஈபிஆர்எல்எப் என்ற இயக்கத்தை சார்ந்தவர். பொதுவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்களுக்கு தமிழ் மக்கள் போதுமான அங்கீகாரத்தை கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

எதுவாயினும் ஏனைய இயக்கங்களுக்கு தமிழ் மக்களின் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற கருத்து விடுதலைப்புலிகள் படையினருக்கு எதிராகத் தனித்துவமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்ததன் பின்னரே இத்தகையதொரு நிலைமை ஏற்பட்டது.

இத்தகையதோர் சூழ்நிலைக்குள் முன்னாள் முதல்வர் அ.வரதராஜப்பெருமாளும் அகப்பட்டுக் கொண்டவர்களுள் ஒருவர்.எனினும் முதலமைச்சராக இருந்த தனது அனுபவம் பற்றி கருத்துரைத்த வரதராஜப்பெருமாளின் நோக்கம் இரு தன்மையைக் கொண்டது.

அதில் ஒன்று 1987களில்தான் மேற்கொண்ட அரசியல் அணுகுமுறை மிகவும் பொருத்தமானதாயினும் அதற்கு விடுதலைப்புலிகளின் அல்லது தமிழ் மக்களின் ஒத்துழைப்பு இருக்கவில்லை என்பதைக் கூறுவதன் ஊடாக,வடக்குக் கிழக்கு மாகாண அரசை உருவாக்கியதற்குள் இருக்கக்கூடிய தனது வகிபங்கை நியாயப்படுத்துவது.

மற்றையது தனது அனுபவத்தின் ஊடாக, தமிழர்களுக்கு தற்போது இருக்கக்கூடிய சாதகமான புறச் சூழ்நிலையை எங்ஙனம் பயன்படுத்துவது என்பதை எடுத்துரைப்பது.

இந்த இரு நோக்கங்களின் அடிப்படையில் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் கூறுகின்ற கருத்தில் முக்கியமானது; தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு என்ற விடயத்தில் இந்தியாவின் நேரடித் தலையீடு இனி இருக்கமாட்டாது என்பதாகும்.

அதாவது 1987களில் வடக்கு கிழக்கு இணைந்த மாகாண அரசை உருவாக்கும் போது அதற்கான அதிகாரத்தைப் பெற்றுக் கொடுப்பதில் இந்திய மத்திய அரசு  கொண்டிருந்த காத்திரமான வகிபங்கை இனிமேல் நாம் எதிர்பார்க்க முடியாது என்பதாகும்.

ஆக, சமகாலத்தில் நமக்குச் சாதகமாக இருக்கக்கூடிய புறச் சூழ்நிலைகளை இனங்கண்டு அதனைப் பொருத்தப்பாடாகப் பயன்படுத்திக் கொள்வதில் தமிழ் அரசியல் தலைமைகள் அதீத கவனம் செலுத்துவது அவசியம் என்பதை வலியுறுத்துவதாக முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளின் கருத்தியல் அமைகிறது.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு என்பதை நாம் நிராகரிக்க முடியாது. இந்த அடிப்படையில்தான் வடக்கின் தற்போதைய முதல்வர் விக்னேஸ்வரனும் முன்னாள் முதல்வர் வரதராஜப் பெருமாளும் சந்தித்துக் கதைத்தனர் என்றால், அது ஒரு நல்ல நோக்காக இருக்கும் என்று கூறலாம்.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila