கைதானவர்களின் விடுதலைக்கு வவுனியா சட்டத்தரணிகள் உதவவேண்டும்


விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு இனிமேல் எழுகை பெறுவது முடியாத காரியம் என்பது உறுதியாகிவிட்டது. எனினும் விடுதலைப் புலிகள் மீது தாளாத பற்றுக் கொண்டவர்கள் அவர்களின் மீள் எழுகையை ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றனர்.

அதேநேரம் விடுதலைப் புலிகளோடு சேர்ந்து நின்று தங்களின் காரியங்களை கச்சிதமாகச் செய்து முடித்த தரப்பினர் விடுதலைப் புலிகள் ஒருபோதும் வரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

இதில் மூன்றாவது தரப்பு பொதுவானது. விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் புலிகளின் சில செயற்பாட்டை விமர்சித்தவர்கள். எனினும் தமிழ் மக்களின் நலன்களில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள். இப்போது கூட சமூக அக்கறையோடு அவர்களின் செயற்பாடும் சிந்தனையும் இருப்பதைக் காணமுடிகிறது.

இத்தகையவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வுக்காக ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்தோடு சமூகப் பணிகளில் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவே எங்களின் தற்போதைய நிலைமை.

இது ஒருபுறம் இருக்க, மகிந்தவுக்கும் மைத்திரிக்குமான வித்தியாசம் என்ன? புலிகள் மீள வரமுடியாது என்பது தெரிந்திருந்தும் மீண்டும் புலிகள் வரக்கூடிய சந்தர்ப்பம் உண்டென மகிந்த ராஜபக்­ தென்பகுதியில் பிரசாரம் செய்தார்.

ஆனால் மைத்திரியோ மீண்டும் புலிகள் வர முடியாது என்பதை நிறுத்திட்டமாகத் தெரிந்து வைத்துக் கொண்டு, புலிகள் பற்றிய விடயத்தை  தனது பேச்சில்,  பிரசாரத்தில் எடுத்துக் கொள்ளாமல் விட்டார்.

வர முடியாததை வரும் என்றவர் தோற்றார். வராதது வராததுதான் என்றவர் வென்றார். இது மகிந்த-மைத்திரி பற்றிய ஒப்பிடுகை. சரி,  விடுதலைப் புலிகள் இனிமேல் மீள் எழுகை பெற முடியாது என்பதை மகிந்தவும் மைத்திரியும் எவ்வாறு அறிந்திருந்தனர் எனில், விடுதலைப் புலிகள் மீளெழுவதை தமிழர் தாயகத்தில் உள்ள புத்திஜீவிகளில் ஒரு பகுதியினர்; அதிக இலாபம் உழைக்கும் தரப்பினர்; புலிகளின் ஆசியால் அரசியல் நடத்தும் புண்ணியவான்கள் என்போர் ஒருபோதும் விடமாட்டார்கள் என்பதை மகிந்தவும் மைத்திரியும் தெரிந்து வைத்திருந்தனர்.

இதை நாம் இங்கு கூறும்போது தங்களுக்கு இது எப்படித் தெரியும் என்று நீங்கள் கேட்டால் அதில் தவறில்லை என்பதுடன் உங்கள் கேள்விக்கு விளக்கம் தருவதும் நம் கடமை.

கடந்த 20ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தாலும் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றதல்லவா? அந்த ஆர்ப்பாட்டத்தைப் பார்த்த தமிழ் அரசியல் தரப்புகள் புலிகள் மீண்டும் வந்து விட்டனரோ! என்று பயந்து போயினர். இளைஞர்களின் இத்தகைய எழுச்சிக்கு இடம் வைக்கக் கூடாது என இவர்கள் திட்டம் தீட்டினர்...
எதுவாயினும் அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 130 இளைஞர்களில் குற்றம் அற்றவர்கள் விடுதலை பெறவேண்டும்.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டனை பெற்று விடக் கூடாது என்பதே நீதி அறம்.

அநுராதபுரம் சிறையில் உள்ள 130 பிள்ளைகளின் பெற்றோர் யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரத்திற்கு அலைகின்ற பரிதாபம் நீக்கப்பட வேண்டும். இதற்கு வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் உதவி செய்ய வேண்டும்.

கைதான இளைஞர்களுக்காக தாம் வாதிட முடியும் என வவுனியா சட்டத்தரணிகள் ஏற்கெனவே கூறியிருந்தனர். இது கைது என்ற துன்பத்திலும் ஓர் ஆறுதலை சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்குக் கொடுத்துள்ளது.

இதை வவுனியா சட்டத்தரணிகளுக்கு நாமும் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.   
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila