செய்தியாளரை பல மணிநேரம் வீட்டில் தடுத்து வைத்து அட்டகாசம் புரிந்த கும்பல்!

செய்தியாளர் ஒருவரை அவருடைய தாயாரின் வீட்டிலிருந்து வெளியில் வரவிடாமல் தடுத்து, வீட்டைச் சூழ்ந்து நின்ற இளைஞர் குழுவொன்று பல மணித்தியாலங்கள் அட்டகாசம் புரிந்துள்ளது.
இதுபற்றி அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அந்தப் பிரதேசத்திற்கான பங்குத் தந்தை, மற்றும் இது குறித்து 119 ஊடாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, அங்கு அனுப்பி வைக்கப்பட்ட பொலிசார் ஆகியோர் முன்னிலையில் அந்த வீட்டின் மீது கல் வீச்சுத் தாக்குதலும் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமன்னார் கிராமத்தில் ஞாயிறு இரவு நடைபெற்ற இந்த சம்பவத்தில் செய்தியாளருடைய வீட்டைச் சுற்றி வளைத்து அட்டகாசம் புரிந்த கூட்டத்தைக் கலைப்பதற்கு பொலிசார் உடன் நடவடிக்கை எடுக்காத நிலையில், நிலைமை மோசமடைந்து பதட்டம் அதிகரித்தது. இந்நிலையில், மேலிடத்திலிருந்து வந்த உத்தரவொன்றையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அங்கிருந்து அந்த செய்தியாளரைப் பாதுகாப்பாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். தலைமன்னார் மற்றும் மன்னார் பிரதேசத்தின் மூத்த செய்தியாளராகிய வாஸ் கூஞ்ஞவுக்கே இந்த நிலைமை ஏற்பட்டிருந்தது. இதுபற்றி தெரியவந்துள்ளதாவது: தலைமன்னார் கிராமத்தில் அமைந்துள்ள உப அஞ்சல் அலுவலகம் இயங்கி வருகின்ற அவருடைய தாயாரின் வீட்டுக்கு முன்னால் உள்ள காணியில் அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் பலாத்காரமாக விளையாடி வருவதாகவும், இதனால் அஞ்சல் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு மட்டுமல்லாமல், அருகில் உள்ள தலைமன்னார் கிராமத்திற்கான பேரூந்து நிறுத்தும் இடத்தில் பயணிகளுக்கும் பெரும் இடைஞ்சல் ஏற்பட்டிருந்ததாகவும், இதுபற்றி ஏற்கனவே முறைப்பாடுகள் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகளும் நடைபெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பின்னணியில் இளைஞர் குழு தொடர்ந்தும் அந்தக் காணியில் விiளாயடுவதும், சில வேளைகளில் இரவு 10 மணிவரையில் தங்கள் விளையாட்டைத் தொடர்வதுமாகத் தொடர்ந்துள்ளது.
இதனையடுத்து, செய்தியாளர் கூஞ்ஞ அங்கு நடப்பவற்றை தனது தாயாரின் வீட்டு வளவுக்குள் இருந்து புகைப்படம் எடுத்ததாகவும், அதனைக் கண்ணுற்ற இளைஞர்கள் அவரிடம் வந்து ஏன் படம் எடுத்தது என வினவியுள்ளனர்.
அத்துடன், அந்தப் படங்களை அழித்துவிட வேண்டும் எனக் கூறி வாக்குவாதப்பட்டதுடன், அவரை வீட்டிலிருந்து வெளியில் வரவிடாமல் வீட்டைச் சூழ்ந்து நின்று அட்டகாசம் புரிந்தனராம்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பங்குத் தந்தை இரு தரப்பினருக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.
இதனையடுத்து தமக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து அங்கு அனுப்பி வைக்கப்பட்ட 3 பொலிசாரினாலும் நிலைமையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வர முடியாமல் போனது. கூக்குரலிட்டு அட்டகாசம் செய்தவர்களை அடக்கி அமைதிப்படுத்தவோ, கற்களை எறிந்தவர்களைக் கட்டுப்படுத்தவோ முடியாமல் போனதாம்.
கூடியிருந்தவர்களில் சிலர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையிலேயே மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவையடுத்து தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மேலதிக பொலிசார் நிலைமையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்ததுடன் செய்தியாளர் கூஞ்ஞவையும் அவருடன் இருந்து அவருடைய குடும்பத்தினரையும், பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்கு மூலம் ஒன்றைப் பதிவு செய்து கொண்டு, பேசாலையில் உள்ள வீட்டிற்கு அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று விட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து தலைமன்னார் பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila