எங்கள் பிள்ளைகளை வழிப்படுத்த நாங்கள் தவறியது பெருந்தவறு!

யுத்தத்திற்குப் பின்பான ஈழத்தமிழர்களின் வாழ்வியல் எப்படியாக அமையும் என்பது பற்றி நம்மவர் பலர் சிந்தித்திருந்தனராயினும் அந்தச் சிந்தனை செயலுருப் பெறாமல் போயிற்று.
அதற்கான காரணம் தமிழர்களின் எந்தச் சிந்தனையும் தங்களுக்கு ஆபத்தானது என்று மகிந்த ராஜபக்ச­  தலைமையிலான ஆட்சியாளர்கள் நினைத்தமையாகும்.
இதனால் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் அடைந்த மனவடுக்களைக் கூட எங்களால் ஆற்றுப்படுத்த முடியாமல் போயிற்று.
வன்னிப் போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சொல்லி அழவும் எழுதி ஆறுதல் அடையவும் முடியாத அளவில் தமிழர்களின் வாழ்வியல் அமைந்து போனமை மிகப் பெரிய துரதிர்ஷ்டம்.
இறந்தவர்களை நினைவு கூருவதற்கே தடையென்றால் எங்களின் வாழ்வு எப்படியிருந்திருக்கும் என்பதை இனி வருகின்ற சந்ததிதான் ஆய்வு செய்து அறிக்கையிட வேண்டும். அந்தளவில் எங்கள் வாழ்வு அவலமாயிற்று.
இந்த அவலங்களைத் தாங்கி எங்கள் இழப்பிற்கு நாங்களே ஆறுதலும் சொல்லி இதுதான் வாழ்க்கை என்று, மனங்களை இறுக்கிக் கொண்டு மீளவும் வாழத் தலைப்பட, எங்கள் சமூகத்தில் எங்களால் ஏற்படுத்தப்படுகின்ற அக்கிரமங்கள், எழுந்தவன் தலையில் வீழ்ந்தது உச்சியடி என்பதாகி விட்டது. போர்ச்சூழலின் பின்பான எங்கள் வாழ்வு ஆரோக்கியமற்றதாக மாறிவிட்டது.
இடிந்த கட்டிடங்களைக் கட்டுவதிலும் உடைந்த வீதிகளைத் திருத்துவதிலும் உயர்ந்த மின்கம்பங்களில் மின்குமிழ்களைப் பொருத்துவதிலும் காட்டிய ஆர்வம் எங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியமான உளச் செயற்பாடுகளில், அவர்களின் மனங்களை வழிப்படுத்தும் நெறிமுறைகளில்; அவர்களின் கல்வியில, அவர்களின் ஆளுமையில்; வேலை வாய்ப்பில், அவர்களைப் புரிதலில் நாம் எந்த அக்கறையும் காட்டவில்லை என்ற பெருங்குறையை இப்போது உணர்ந்தும் அனுபவித்தும் வருகிறோம்.
ஆம், பல்கலைக்கழகத்தில் பட்டம் முடித்தால் அரசு தேடி வந்து உத்தியோகம் தரவேண்டும் என்ற நினைப்பும்; சாதாரண தரம், உயர்தரம் படித்தால் வேலை இல்லையென்ற முடிவும் எங்கள் பிள்ளைகளை நெறி தவறச் செய்து விட்டது.
கல்விதான் வாழ்க்கை என்பதை மாற்றி வாழ்க்கைக்காகக் கல்வி என்ற உண்மையை உணர்த்தியிருந்தால், யுத்தம் முடிந்த கையோடு எங்கள் மண்ணில் எங்கள் இளைஞர்கள் தனித்தும் ஒருமித்தும் தொழில் முயற்சிகளை ஆரம்பித்திருப்பர்.
அரசாங்க வேலை என்பதை எதிர்பாராமல் சொந்தமாக, சுயமாக தொழில் முயற்சிகளைத் தொடங்கியிருப்பர்.
என்ன செய்வது? எங்கள் பிள்ளைகளை வழிப்படுத்தத் தவறிவிட்டோம். அச் சந்தர்ப்பத்தை சமூக விரோதிகள் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள, மது பாவனையும் போதைப் பொருள் விற்பனையும் பான் பறாக் பாக்குப் பரிமாற்றமும் நடக்கலாயிற்று.
ஓ தமிழினமே! எங்கள் பிள்ளைகள் எங்களுக்குத் தேவை. சமூக அக்கறையோடு எங்கள் பிள்ளைகளை வழிப்படுத்த, நெறிப்படுத்த ஒன்று திரளுங்கள். மக்கள் சமூகம் நினைத்தால் திருத்தம் ஒரு கணப் பொழுதில் கிடைத்தாகும்.
மீண்டும் ஒரு தடவை எங்கள் பிள்ளைகளை நெறிப்படுத்துவது எங்கள் கடமை. மறந்து விடாதீர்கள்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila