குருநாகலில் சிவாஜிலிங்கம் வெற்றி; மகிந்த ராஜபக்ச­ படுதோல்வி

எதிலும் ஒரு வித்தியாசம் தேவை என்று நினைப்பவர்கள் இருக்கவே செய்கின்றனர். அதிலும் அரசியலில் இத்தகையவர்கள் தங்கள் வாழ்வுக்குப் பின்னரும் பேசப்படுகின்றனர்.
இந்த நாட்டின் பிரதமராக இருந்த தகநாயக்க அவர்கள் ஒரு முறை பாராளுமன்றத்திற்கு கோவணத்துடன் சென்றார். பாராளுமன்றத்தில் ஒரே பரபரப்பு. வரவுசெலவுத் திட்டத்தில் சீத்தைத்துணியின் விலை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அப்படி ஒரு முடிவை தகநாயக்க செய்தார்.
அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் பாராளுமன்றத்தில் கூப்பாடு போட்ட போது அவரை வெளியேறுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். எனினும் அதனை அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் பொருட்படுத்த வில்லை. சபாநாயகரின் உத்தரவை நிறைவேற்ற பாராளுமன்ற சேவகர்கள் சுந்தரலிங்கத்தை அவர் இருந்த கதிரையோடு தூக்கிச் சென்று வெளியில் வைத்தனர்.
எனினும் சுந்தரலிங்கத்தின் திமிறல் தணியவில்லை. சில நிமிடங்கள் கழிந்த பின் மீண்டும் பாராளுமன்றத்திற்குள் வருமாறு சுந்தரலிங்கத்தை சபாநாயகர் அழைத்தார். சுந்தரலிங்கம் விடவில்லை. நானா வெளியில் வந்தேன். என்னைத் தூக்கிக் கொண்டு வந்தது போல தூக்கிச் சென்று உள்ளே இருத்துங்கள் என்றார். என்னசெய்வது! மீளவும் கதிரையோடு சுந்தரலிங்கத்தை தூக்கிச் சென்று பாராளுமன்றத்தில் இருத்தினர்.
அண்மைக்காலத்தில் அமைச்சராக இருந்த மேர்வின் சில்வா அரச உத்தியோகத்தர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்தார். இதுபோல வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் ஆசிரியை ஒருவரை முழந்தாளில் இருக்க வைத்து தண்டனை கொடுத்தார்.
இதுபோல ஏகப்பட்ட சம்பவங்கள் உலகம் முழு வதிலும் உண்டு. இந்த வித்தியாசங்களில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் ஒருவர். வடக்கு மாகாண சபையின் செங்கோலைத் தூக்கி எறிந்து அதனை உடைத்து வடக்கு மாகாணத்தில் செங்கோலை உடைத்த முதல் மாகாண சபை உறுப்பினர் என்ற பெயரை தனதாக்கிக் கொண்டார்.
இப்போது பாராளுமன்றப் பொதுத் தேர்தல்- 2015ல் சிவாஜிலிங்கம் குருநாகல் மாவட்டத்தில் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­, குருநாகலில் போட்டியிடுவதால் அவரைத் தோற்கடிப்பதற்காகவே குருநாகலில் தான் போட்டியிடுவதாகவும் சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். வித்தியாசம் என்பதில் இதுவே முதற்தரமானது.
குருநாகலில் தான் போட்டியிடுவதன் மூலம், குருநாகலில் சிவாஜிலிங்கம் அமோக வெற்றி; முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ படுதோல்வி என்ற தேர்தல் முடிவை சிவாஜிலிங்கம் எதிர்பார்க்கிறார் போலும்.
ஐயா! வேண்டாம் ஐயா! குருநாகலுக்குச் சென்று மகிந்த ராஜபக்­வுக்கு எதிராக நீங்கள் (சிவாஜிலிங்கம்) போட்டியிட்டால், அது வேறுவிதமாகப் பொருள்படும். அதாவது ஒரு தமிழன் இந்த நாட்டில் எங்கும் தேர்தலில் போட்டியிட முடியும். அந்தளவிற்கு சுதந்திரம், உரிமை, ஜனநாயகம் இலங்கையில் உச்சமாகியுள்ளது என்பது ஒரு அர்த்தம்.
மற்றையது மகிந்தவை எதிர்த்து சிவாஜிலிங்கம் போட்டியிடும் அளவில் ஜனாதிபதி மைத்திரி நாட்டை பழுதாக்கிவிட்டார் என்ற பிரசாரத்தின் ஊடாக அதிகளவு வாக்குகளை மகிந்த பெறுவார்.
சிவாஜிலிங்கத்துக்கு எதிரான மகிந்தவின் பிரசாரத்தால் பயம் கொண்ட; குருநாகலில் வாழும் தமிழ் மக்கள் தங்கள் வாக்குகள் முழுவதையும் மகிந்தவுக்கு அளித்து தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வர்.
என்ன செய்வது மகிந்தவை வீழ்த்தப் போய் அவரைத் தூக்கி விட்டதாக நிலைமை மாறும்.
ஏதோ! வித்தியாசம் என்று ஆறுதல் அடைவதைத் தவிர, இது விடயத்தில் வேறு என்னதான் நாம் செய்ய முடியும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila