போர் விமானக் கொள்வனவு அரசியல் குழப்பத்தை தூண்டுமா?

இலங்கை விமானப்படைக்குப் புதிய போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான முயற்சி,  இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் குழப்பங்களை ஏற்படுத்திவிடும் அறிகுறிகளை வெளிப்படுத்தியிருக்கின்றன.
இலங்கை விமானப்படையிடம் உள்ள கிபிர் மற்றும் மிக் - 27 போர் விமானங்கள் மிகவும் பழையதாகி விட்ட நிலையில், அவற்றுக்குப் பதிலாக புதிய விமானங்களைக் கொள்வனவு செய்யும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் தயாரிக்கும் ஜே.எவ்-17 போர் விமானங்களை இலங்கை விமானப்படை கொள்வனவு செய்யவுள்ளதாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகவே உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இலங்கை விமானப்படை பாகிஸ்தான் போர் விமானங்களை வாங்குவதற்கு கொள்வனவுக் கட்டளையை கொடுத்து விட்டதாகவும் கூட செய்திகள் வெளியாகின.
ஆனால் அவ்வாறு எந்த விமானத்தையும் கொள்வனவு செய்வதற்குத் தாம் தீர்மானிக்கவில்லை என்றே இலங்கை விமானப்படை இன்றுவரை கூறி வருகிறது.
இலங்கை விமானப்படை தாம் புதிய போர் விமானங்களைக் கொள்வனவு செய்ய விரும்புவதை மறைக்கவில்லை.
ஆனாலும் எந்த நாட்டின் விமானங்களை வாங்கவுள்ளோம் என்று கூறுவதையும் தவிர்த்தே வந்திருக்கிறது.
எவ்வாறாயினும் வரும் ஆண்டில் புதிய போர் விமானங்களை விமானப்படை கொள்வனவு செய்யவுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு கூடுதல் நிதியை விழுங்கியிருக்கிறது.
அதில் விமானப்படைக்கான மூலதனச் செலவுக்கான ஒதுக்கீடு மூன்று மடங்கினால் அதிகரிக்கப்பட்டுள்ளதையும் அவதானிக்கலாம்.
2015ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், 688 கோடி ரூபாவாக இருந்த விமானப்படைக்கான மூலதனச் செலவு ஒதுக்கீடு 2016ம் ஆண்டு 1923.7 கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரிப்பாகும். புதிய போர் விமானங்களை விமானப்படை கொளவனவு செய்வதற்காகவே நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனவே இலங்கை விமானப்படை தனக்குப் பொருத்தமான புதிய போர் விமானங்களை முடிவு செய்ய வேண்டிய கட்டத்துக்குள் நுழைந்திருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அதேவேளை, முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் ஜெயலத் வீரக்கொடி பாகிஸ்தானில் இலங்கைத் தூவராகப் பணியாற்றிய போது தான், விமானப்படைக்கு ஜே.எவ்-17 போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்படதாகக் கூறப்படுகிறது.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் எயர் சீவ் மார்ஷல் ஜெயலத் வீரக்கொடி கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்டு விட்டார்.
ஆனாலும் ஜே.எவ்-17  போர் விமானங்களை எப்படியாவது இலங்கை விமானப்படையின் தலையில் கட்டிவிட பாகிஸ்தான் கங்கணம் கட்டியே செயற்படுகிறது என்பதில் சந்தேகமில்லை.
ஏற்கனவே பாகிஸ்தான் சர்வதேச ஊடகங்களில் கசியவிட்ட செய்திகள் எல்லாமே அதனை மையப்படுத்தியவைதான்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இலங்கைக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணத்தின் போது இந்தப் போர் விமான விற்பனை பற்றிய அறிவிப்பை வெளியிட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேவேளை, பத்து ஜே.எவ்-17  போர் விமானங்களை வாங்கும் இலங்கை விமானப்படைக்கு சலுகை ஒன்றை அளிக்கவும் பாகிஸ்தான் முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதன்படி இலங்கை விமானப்படையிடம் உள்ள எவ்-7 போர் விமானங்களை இலவசமாகவே புதுப்பித்துக் கொடுக்கப் பாகிஸ்தான் முன்வந்துள்ளதாம்.
எனினும் இலங்கை விமானப்படையோ, பாகிஸ்தான் அரசாங்கமோ நினைத்தவாறு இந்தப் போர் விமானக் கொள்வனவு ஒன்றும் இலகுவாக இடம்பெறுவதற்கான சூழல் இருப்பதாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம் இந்தியா தான். இந்தியா இந்தப் போர் விமான வர்த்தகத்தை விரும்பவில்லை  என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானும் இந்தியாவும் ஒன்றையொன்று எதிரி நாடுகளாகவே தம்மை வெளிப்படுத்தி வந்திருக்கின்றன.
இலங்கையுடன் பாகிஸ்தான் நெருக்கமாக இருப்பதை, பாதுகாப்பு உறவுகளை வலுவாகப் பேணுவதை, இந்தியா விரும்புவதில்லை.
அந்த நன்றி இலங்கையிடம் இருந்தாலும், இந்தியாவை மீறி பாகிஸ்தானுடன் நெருக்கத்தை பேணுவதில் இலங்கை அரசாங்கத்துக்கு சிக்கல்கள் இருக்கின்றன.
பாகிஸ்தானிடமிருந்து ஜே.எவ்-17 போர் விமானங்களை இலங்கை வாங்குவதை இந்தியா விரும்பவில்லை என்பது ஏற்கனவே அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில் தனது சொந்தத் தயாரிப்பான தேஜஸ் போர் விமானங்களை வாங்குமாறு இலங்கையிடம் இந்தியா நெருக்கடி கொடுப்பதாகவும் கூட செய்திகள் வெளியாகின.
 ஜே.எவ்-17  போர் விமானங்களை விட தேஜஸ் போர் விமானங்கள் திறன் மிக்கவையாக இருந்தாலும், அவை இன்னமும் சோதனைக் கட்டத்தை தாண்டவில்லை.
இந்திய விமானப்படையில் கூட இன்னமும் இணைக்கப்படாத இந்தப் போர் விமானங்களை இலங்கைக்கு விற்பதென்பது நடைமுறைச் சாத்தியமற்ற விடயம்.
எவ்வாறாயினும், பாகிஸ்தானிடம் போர் விமானங்களை வாங்குவதை இந்தியா விரும்பவில்லை என்று புதுடில்லி அழுத்தங்களைக் கொடுத்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விகரமசிங்க ஆகியோருடன், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தொலைபேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதன்போது பாகிஸ்தானிடம் போர் விமானங்களை வாங்கினால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அஜித் டோவல் எச்சரித்ததாகவும் சொல்லப்படுகிறது.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இந்திய - இலங்கை உறவுகள் புதிய உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில் அதற்குச் சோதனையான வகையில் இந்த விவகாரம் முளைத்திருக்கிறது.
எனினும், தேசிய பாதுகாப்பு என்று வரும்போது இந்தியா அவ்வப்போது கடுமையான தொனியை வெளிப்படுத்தவும் தயங்குவதில்லை.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் கொழும்புத் துறைமுகத்துக்குள் தரித்துச் செல்ல சீன நீர்மூழ்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதும் இந்தியா கடுமையான எச்சரிக்கைகளை தனது இராஜதந்திர தொடர்புகளின் மூலம் விடுத்திருந்தது.
அதுபோலவே திருகோணமலை சீனன்குடாவில் சீனாவின் வான்பொறியியல் நிறுவனம், விமானப் பராமரிப்பு நிலையம் ஒன்றை நிறுவ முயற்சி செய்த போதும் இந்தியா கடும் எதிர்ப்பைத் தெரிவித்து அந்தத் திட்டத்தை இடைநிறுத்த வைத்தது.
இந்தவகையில் பாகிஸ்தான் போர் விமானங்களை வாங்கும் இலங்கையின் திட்டத்துக்கும் இந்தியா எதிர்ப்பை வெளியிட்டிருப்பதற்கான வாய்ப்புக்களை நிராகரிக்க முடியாது.
இந்தநிலையில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நசிபடுகின்ற கட்டத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது இலங்கை.
பாகிஸ்தானிடம் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக எடுக்கக்கூடிய எந்த முடிவும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியான முறுகலையும் ஏற்படுத்தக்கூடும்.
இப்போதைய நிலையில் இலங்கைக்குஇந்தியாவே முக்கியமானது.
எனவே இந்தியாவைப் பகைத்துக் கொள்ளாத வகையில் தான் கொழும்பு எந்த நகர்வையும் மேற்கொள்ளும் என்று தெரிகிறது.
பாகிஸ்தான் தவிர்ந்த வேறு எந்த நாட்டிடமும் போர் விமானங்களை வாங்க இந்தியாவுக்கு கடனுதவி வழங்க இந்தியா புதிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை, இன்னமும் எந்த நாட்டிடம் போர் விமானத்தை வாங்குவது என்று முடிவு செய்யவில்லை என்று விமானப்படைத்தளபதி ககன் புலத்சிங்கள கூறியிருக்கிறார்.
இந்தியா, ரஷ்யா நாடுகளிடம் வாங்குவது குறித்தே கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இந்தியாவிடமிருந்து உடனடியாக எந்தப் போர் விமானத்தையும் வாங்கும் சாத்தியங்கள் இல்லை. எனவே ரஷ்யாவின் போர் விமானங்களை நாடுவதே இலங்கை விமானப்படையின் அடுத்த தெரிவாக இருக்கலாம்.
எவ்வாறாயினும் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் போது அது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவுகளில் குழப்பம் ஏற்படக்கூடும்.
ஏனென்றால், இலங்கையால் ஒரே நேரத்தில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் சமாதானப்படுத்த முடியாது போகும்.
ஹரிகரன்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila