இலங்கையில் ஆட்சிமாற்றத்தின் பின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசியல்யாப்பு மாற்றம் ஒன்றிற்கான முயற்சிகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இதனடிப்படையில் வடமாகாண மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, இந்த குழு இன்றைய தினம் (வியாழக்கிழமை) வடமாகாணசபையின் அரசியல் தீர்வு திட்ட யோசணைகளை நிறைவு செய்வது தொடர்பாக கலந்துரையாடியது.
இச்சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
”வடமாகாணசபையின் அரசியல் தீர்வுத்திட்ட யோசணைகளை முன்வைப்பதற்கான குழு இன்றைய தினம் கூடியிருந்தது. இதனடிப்படையில் எமது யோசணைகளை பூர்த்தி செய்து எதிர்வரும் 7ஆம் திகதி மாகாணசபையில் உறுப்பினர்களின் கருத்துக்களை பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தனிடம் கையளிக்கப்படும்.
மேலும் 19பேர் கொண்ட குழு 3 உபகுழுக்களாக பிரிக்கப்பட்டு தமிழர்களின் வரலாற்றை அறியவும், அரசியல் ரீதியான கொள்கைகளை அறியவும், தமிழர்கள் தனித்துவமாக எதனை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறியவும் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்த உப குழக்களின் கருத்துக்களின் அடிப்படையில் ஒரு கருத்து உருவாக்கப்பட்டு அந்த கருத்தே எமது இறுதி யோசனையாக சமர்ப்பிக்கப்படவுள்ளது.” என்றும் கூறினார்.