தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பில் கொழும்பு வாழ் தமிழ் மக்களின் கருத்தறியும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
கருத்தறிறும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
”இலங்கை அரசாங்கம அரசியல் சாசனத் தயாரிப்பின் போது தமிழ் மக்கள் பேரவை முன்மொழியும் யோசனைகளை உள்ளடக்குவார்களாகவிருந்தால், தமிழ் மக்கள் ஒரு சுயாட்சி பிரதேசத்தில் வாழக்கூடியதாக இருக்கும்.
இதன்மூலம் தமிழர்கள் தமது அபிவிருத்தி பணிகளை தாங்களே நிறைவேற்றக் கூடியவாறு இருக்கும், அவர்களது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கிடைக்கும். ஒன்றுபட்ட இலங்கைக்குள், தமிழ் சிங்கள, முஸ்லிம் மக்கள் வேறுபாடில்லாமல் கௌரவமாக வாழக்கூடிய ஒரு சூழல் ஏற்படும். எந்தவொரு இனமும் தாழ்ந்து போகாது அவர்கள் தமது தனித்துவத்தை காப்பாற்றி, முழுமையான சுதந்திர மக்களாக வாழும் சூழல் ஏற்படும்.
எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்கள் பேரவையின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்துடனும், சர்வதேசத்துடனும் பேசி அவற்றை இலங்கை அரசியல் சாசனத்தில் உள்ளடக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றும் கூறினார்.