30 வருடங்களாக தோல்வியடைந்த மொழிக் கொள்கையை உடனடியாக நிவர்த்திக்க முடியாது: மனோ
தேசிய மொழிக்கொள்கை கடந்த காலங்களில் தொடர்ச்சியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையிலே நடைமுறைப்படுத்தப் பாடாததையிட்டு நானும் உங்களைப் போல மனம் வருந்துகின்றேன். கடந்த 30 வருடங்களாக தோல்வியடைந்த ஒரு மொழிக்கொள்கையை ஆறு, எட்டு மாதங்களில் நிவர்த்திக்க முடியாது. ஆனாலும், தற்போது பல்வேறுபட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். இரு மொழி அரச திணைக்களங்கள் மற்றும் பிரதேச சபைகளில் இரு மொழி கொள்கை ஒழுங்காக கடைப்பிடிக்கப்படுகின்றதா? அது தொடர்பில் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்? என நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை), நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரான மனோ கணேசனிடம், எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து பதிலளித்த அமைச்சர் மனோ, 41 பிரதேச செயலகங்களே இரு மொழி அரச கருமம் ஆற்றுகின்றன. எனது அமைச்சின் கீழ் உள்ள அரச கரும மொழிகள் திணைக்களம் இன்னும் பல்வேறு பிரதேச செயலகங்களை இரு மொழி அரச கருமம் ஆற்றும் பிரதேச செயலகமாக மாற்ற வேண்டும் என்ற சிபார்சை ஜனாதிபதியிடம் வழங்கியிருக்கின்றது. அரச பணியாளர்கள் அனைவருமே, தங்கள் தாய்மொழி தவிர்ந்த ஆட்சி மொழியை பயின்றிருக்க வேண்டும் என்ற சுற்றுநிருபம் இருக்கின்றது. அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இப்போது, அரச பணிகளுக்கு வந்த பின்னரேயே இரண்டாவது மொழி கற்பிக்கப்படுகின்றது. ஆனால், நியமனம் வழங்க முன்னரேயே இரு மொழி தெரிந்தவர்களை நியமிக்க எமது அமைச்சினூடாக விரைவில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்க இருக்கின்றோம்.- என்றார்.
Add Comments