எங்கள் அரசியல் தலைமைகள் தொடர்பில் பொதுமக்கள் பலரும் வேதனை கொண்டுள்ளனர். ஏன்தான் இப்படியயல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்ற நினைப்பே வேதனை கொள்ளக் காரணம்.
அதிலும் யாழ்ப்பாண மாநகர சபையின் நிலைமையை நினைத்தால் தலையைப் பிய்த் துக்கொள்ள வேணும் போல் இருக்கும்.
அந் தளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
மகா பிழைகள் நடக்கிறது என்று தெரிந்தும் அதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் அரசி யல்வாதிகள் நினைத்தால் பதவிக்காக இப்படியொரு பணிவா என்று கேட்கத் தோன்றும்.
இவை ஒருபுறம் இருக்க, உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது நடக்கின்ற அரசியல் கூத்துக்கள் முழுமைக்கும் அரசியல்வாதிகளே காரணம் என்று சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வதென்பதும் ஏற்புடையதன்று.
தேர்தல் காலங்களில் தமிழ் மக்கள் மிக வும் நிதானமாகச் செயற்பட்டிருந்தால், மக்க ளின் கருத்துக்கு மதிப்பளிக்கின்ற அரசியல் கலாசாரம் உருவாகி இருக்கும்.
தமிழ் மக்கள் நிதானமாக வாக்களிப்பில் ஈடுபடாமல் எழுந்தமானமாக நடந்து கொண்ட தன் விளைவே இன்று மக்கள் அறுவடையாக வெட்டிக் கொண்டிருக்கின்றனர்.
பரவாயில்லை, நம்பி வாக்களித்தோம். அவர்கள் மோசம் செய்து விட்டார்கள். இனி மேல் அப்படி எதுவும் நடக்காது என்று திடசங் கற்பம் கொள்ளும்போதுதான் திருப்பங்கள் மாற்றங்கள் ஏற்படும்.
அரசியலில் யாரும் ஈடுபடலாம். ஆனால் மக்களின் ஆணையைப் பெறுவதென்பது மிகவும் முக்கியம். அதேநேரம் பெற்ற ஆசனத்தைத் தக்கவைப்பதென்பது எல்லாவற்றிலும் முதன்மையானது.
மக்கள் எங்களை ஆதரிப்பர். ஆதரிக்கா விட்டாலும் வெல்லும் வழி எங்களுக்குத் தெரியும் என்ற இறுமாப்பில் தமிழ் மக்களைப் பகடைக்காய்களாக நினைப்பவர்களுக்கு சம்மட்டி கொண்டு அடி கொடுக்க வேண்டும்.
இந்தச் சம்மட்டிதான் மக்களின் வாக்குகள். தமிழனை யார் என்று நினைத்தாய். அவன் செய்த தியாகத்தை நீ அறிவாயா! உயிரை ஆயுதமாக்கிய வரலாறு உனக்குத் தெரியுமா? என்று கேட்டுக் கேட்டு வாக்குகளால் அடி போட்டால் எல்லாம் சரிவரும்.
வாக்கு எனும் பிரமாஸ்திரத்தை கையில் வைத்திருக்கும் எமதருமை தமிழ் மக்களே!
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நீங்கள் தீர்மானிப்பதற்கு முன்னதாக பல தடவைகள் ஆழமாகச் சிந்தியுங்கள்.
இன்று தமிழனின் நிலைமை எப்படியுள்ளது என்று பாருங்கள். என் பிள்ளையை போரில் நான் இழக்கவில்லை, யுத்தத்தின் பாதிப்பு எனக்கு எதுவுமில்லை.
ஆகையால் நான் அரசியல் பற்றி சிந்திக்கத் தேவையில்லை. யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றியும் சிந்திக்க மாட்டேன் என்றிராமல்,
அடுத்தவன் வீட்டின் இழப்பைப் பாருங்கள். பெற்றோரை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழும் சின்னஞ்சிறுசுகளின் வேதனையைப் பாருங்கள்.
உங்கள் மனச்சாட்சிக்கு அமைவாகத் தீர்மானத்தை எடுங்கள். உங்கள் பிரமாஸ்திரம் அனைத்து தீமைகளையும் அழிக்கும். இது சத்தியம்.