வட மாகாண மீள்குடியேற்ற செயலணியில், வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனும் இணைக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி விடுத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வட மாகாண மீள்குடியேற்ற செயலணி அமைப்பதற்கான பத்திரமானது, அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதன்போது வடக்கு முதல்வரையும் அதில் உள்ளீர்க்க வேண்டுமென ஜனாதிபதி பரிந்துரைத்ததாகவும், அதனை புறக்கணித்தே அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வட மாகாண மீள்குடியேற்ற செயலணியில் அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன், ரிஷாட் பதியுதீன், பைஸர் முஸ்தபா ஆகியோர் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் பெயரையும் அண்மையில் ஜனாதிபதி பரிந்துரைத்தார்.
வட மாகாண மீள்குடியேற்ற செயலணியில், வடக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை உள்ளீர்க்காமையானது, தமிழர் தரப்பில் பல விமர்சனங்களை எழச்செய்துள்ளது. இவ்விடயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த வட மாகாண சபை அமர்வில் பிரேரணையொன்றும் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மீள்குடியேற்ற செயலணியில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணைத்துக் கொள்ளப்படக் கூடாது என்று குறித்த செயலணயில் இடம்பெற்றுள்ள அமைச்சர் ஒருவர் தீவிரமாக செயற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வட மாகாண பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான இடம் தொடர்பிலும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறித்த அமைச்சருடன் முரண்பட்டிருந்தார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.