வடக்கில் வருடந்தோறும் திரும்புகின்ற நிதியும் மாகாண சபையும்

வடக்கில் வருடந்தோறும் திரும்புகின்ற நிதியும் மாகாண சபையும்

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஒரு தேனீர் விருந்துபசாரத்தின் போது முதலமைச்சர் பின்வரும் ஒரு கருத்தை கூறியிருந்தார். அதாவது மாகாண சபையானது நிதியை உரிய காலத்தில் முறையாக செலவு செய்யாது வருட இறுதியில் அவற்றுக்கு பொருட்களை கொள்வனவு செய்து முடிப்பதாகவும் ஆனால் இனிவரும் காலங்களில் அவ்வாறு நடக்காது, நடக்கவும் விட முடியாது என்று தெரிவித்திருந்தார்.
முதலமைச்சர் மேற்படி கருத்தை கூறி தற்போது ஏழு மாதங்கள் கடந்துவிட்டன. இந்த ஏழு மாதத்தில் அதாவது 01-01-2016 தொடக்கம் 31-07-2016 வரை வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 44 சதவீதம் மாத்திரமே செலவு செய்யப்பட்டுள்ளது.
2016 இல் வடக்கு மாகாண சபைக்கான மொத்த ஒதுக்கீடு 27422.23 மில்லியன் ரூபாக்கள் இதில் 12008.12 மில்லியன் ரூபாக்கள் மாத்திரமே செலவு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த நிதியில் 44 சதவீதமாகும். இதில் மீண்டெழும் செலவீனத்திற்கு 18574.23 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டு 10979.64 மில்லியன்கள் செலவு செய்யப்பட்டு 59 வீதமாக செலவு விகிதம் காணப்படுகிறது. காரணம் சம்பளம், நிர்வாகச் செலவுகள் உள்ளிட்ட மீண்டெழும் செலவுகள் என்பதால் வழமையான செலவு விகிதத்தில் காணப்படுகிறது.
ஆனால் மூலதனச் செலவுக்கு 4695.65 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டு கடந்த ஏழு மாத்தில் 1028.48 மில்லியன்கள் மாத்திரமே செலவு செய்யப்பட்டுள்ளது அதாவது 22 வீதம் மாத்திரமே செலவு செய்யப்பட்டுள்ளது. மிகுதி 78 வீதமான நிதியில் ஒரு குறிப்பிட்ட விகிதத்திற்குரிய பணிகள் நடந்துகொண்டிருந்தாலும், பெருமளவு நிதியை ஜந்து மாதங்களுக்குள் செலவு செய்யவேண்டும். இங்குதான் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுகிறது. குறுகிய காலத்தில் பெரும் தொகை நிதி செலவு செய்யப்படவேணடும். இருக்கின்ற ஜந்து மாதங்களில் ஒரு சில மாதங்கள் பருவ மழையோடு கடந்துவிட காலம் இன்னும் குறுகியதாக மாறிவிடும். எனவே அந்தக் குறுகிய காலத்தில் பெரும் தொகை செலவு செய்யப்படும் போதே முறைகேடுகளும். திட்டமிடப்படாத செலவீனங்களும் ஏற்படுகிறது. இது உண்மையிலேயே மக்களின் பணத்தை விரையம் செய்யும் நடவடிக்கையாகவே அமையும். மேலும் ஒதுக்கப்பட்ட நிதியில் வருடத்தின் ஏழாவது மாத்தில் 50 வீதமாக நிதி செலவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வடக்கு மாகாண சபையில் அவ்வாறு இல்லை. இதனை அனைவரும் வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியும்.
வடக்கு மாகாண சபைக்கு 2016 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியும் கடந்த யூலை 31 ஆம் திகதி வரைக்குமான செலவுகளும் பின்வரும் நிலைமைகளிலேயே காணப்படுகிறது.
மூலதனச் செலவுக்கான பிஎஸ்டிஜி நிதி ஒதுக்கீட்டில் முதலமைச்சரின் கீழுள்ள திணைக்களங்களுக்கு ஒதுக்கப்பட்ட 341 மில்லியன் ரூபாக்களில் 44.68 மில்லியன் ரூபாக்களே கடந்த ஏழு மாதங்களில் செலவு செய்யப்பட்டுள்ளன. அதாவது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த பிஎஸ்டிஜி நிதியில் 13 வீதம் மாத்திரமே செலவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே சிபிஜி நிதியில் கடந்த யூலை மாதம் வரை 39 வீதம் மாத்திரமே செலவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட மூலதனச் செலவுக்கான பிஎஸ்டிஜி நிதியான 1000 மில்லியன் ரூபாக்களில் 177.23 மில்லியன் ரூபாக்கள் மாத்திரமே யூலை 31 வரை செலவு செய்யப்பட்டுள்ளன. இது கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட மூலதனச் செலவுக்கான பிஎஸ்டிஜி மொத்த நிதியில் 18 வீதமாகும். அவ்வாறே சிபிஜி நிதியில் கடந்த ஏழு மாதம் வரைக்கும் 34 வீதம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்றே கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட ரிஎஸ்இபி நிதியில் 44 வீதமே செலவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 465 மில்லியன் ரிஎஸ்இபி நிதியில் கல்வி அமைச்சு கடந்த யூலை 31 வரைக்கும் 206.56 மில்லியன்களையே செலவு செய்திருக்கிறது. இதனை தவிர யுனிசெப் திட்டத்திற்கு ஊடாக 0.53 மில்லியன் ஒதுக்கப்பட்ட போதும் அதில் 0.03 மில்லியன் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 6 வீதம் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே விவசாய அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட மூலதனச் செலவு பிஎஸ்டிஜி நிதியான 410 மில்லியன் ரூபாக்களில் 136.94 மில்லியன் ரூபாக்கள் மாத்திரமே ஏழு மாதங்களுக்குள் செலவு செய்யப்பட்டுள்ளன. இது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த மூலதனச் செலவுக்கான பிஎஸ்டிஜி நிதியில் 33 வீதமாகும். அவ்வாறே விவசாய அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட சிபிஜி நிதியில் அமைச்சு 49 வீத நிதியை மாத்திரமே செலவு செய்திருக்கிறது.
இதேபோன்றே சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட பிஎஸ்டிஜி நிதி 932 மில்லியன் ரூபாக்களில் 158.73 மில்லியன் ரூபாக்கள் மாத்திரமே செலவு செய்யப்பட்டுள்ளன. இது ஒதுக்கப்பட்ட மொத்த மூலதனச் செலவுக்கான பிஎஸ்டிஜி நிதியில் 17 வீதமாகும் அவ்வாறே அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட சிபிஜி நிதியில் 12 வீதம் மாத்திரமே செலவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட எச்எஸ்டிபி நிதியில் அமைச்சு கடந்த ஏழு மாதங்களில் 19 வீத நிதியினையே செலவு செய்திருக்கிறது. அதாவது 365 மில்லியன் ரூபாக்களில் கடந்த யூலை 31 வரைக்கும் 68 மில்லியன்களே சுகாதார அமைச்சினால் செலவு செய்யப்பட்டிருக்கின்றன.
மேலும் மீன்பிடி, கிராம, வீதி அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட பிஎஸ்டிஜி நிதியான 408.30 மில்லியன் ரூபாக்களில் 135.71 மில்லியன் ரூபாக்கள் செலவு செய்யப்பட்டுள்ளன. இது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த மூலதன செலவுக்கான பிஎஸ்டிஜி நிதியில் 33 வீதமாகும். அவ்வாறே அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சிபிஜி நிதியில் 17 வீதம் மாத்திரமே செலவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒதுக்கப்பட்ட 475 மில்லியன் ரூபாக்களில் 80.11 மில்லியன் ரூபாக்கள் மாத்திரமே யூலை 31 வரைக்கும் செலவு செய்யப்பட்டுள்ளன.
மேற்படி இந்த விபரங்கள் வடக்கு மாகாண சபையின் ஒவ்வொரு அமைச்சினதும் வினைதிறனை தெளிவாக கோடிட்டு காட்டுகின்றன. உரிய காலத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்களுக்கு நிதியை செலவு செய்யாது வருட இறுதியில் நிதி திரும்பிவிட போகிறது அவ்வாறு மீண்டும் திறைசேரிக்கு நிதி திரும்பினாள் அது மக்கள் மத்தியில் தங்களுக்கு எதிரான கருத்தலைகளை ஏற்படுத்தி விடும் என்ற காரணத்தினால் முதலமைச்சர் குறிப்பிட்டது போன்று முறையற்ற விதத்தில் பொருட்களை கொள்வனவு செய்து நிதியை செலவு செய்வதனை வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.
மிக மோசமான யுத்தப் பாதிப்புகளுக்கு உள்ளான வடக்கு மக்கள் மிக அதிகளவான தேவைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழ்கின்ற பிரதேசங்களும் பல்வேறு அபிவிருத்திக்களுக்காக காத்துகிடக்கின்றன. பல பாடசாலைகளில் மாணவர்கள் இன்றும் மர நிழல்களில் கல்வி கற்று வருகின்றனர். வீதிகள் மிக மோசமான நிலையில் காணப்படுகின்றன. கணவனை இழந்த பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகள் வாழ்வாதாரத்திற்காக ஏங்கிகொண்டிருக்கின்றார்கள். இப்படி வடக்கின் தேவைகள் நீண்டுகொண்டு செல்கின்றன. முழு வீச்சில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தாலும் கூட இன்னும் பல ஆண்டுகள் தேவை நிலைமை வழமைக்கு திரும்பும். எனவே நிலைமை இப்படியிருக்க கிடைக்கின்ற நிதிகளை முறையாக பயன்படுத்தாது விட்டால் அது மக்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா?
மத்திய அரசின் திறைசேரியிடம் இருந்து நிதி விடுவிடுக்கப்படுது சீராக விடுவிக்கப்படுவதில் தாமதங்கள் இருக்கின்றன. ஆனால் விடுவிக்க செய்ய முடியும். அதாவது ஒவ்வொரு அமைச்சினதும் வினைத்திறனான செயற்பாடுகள் மூலம் அதனை மேற்கொள்ள முடியும். நிதியை விடுவிக்க கோரி திறைசேரிக்கு ஒரு கடிதத்தை எழுதிவிட்டு இருந்துவிட்டால் காரியம் நடக்காது. தொடர் முயற்சிகள் அவசியம். மேலும் ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்வதில் ஆளுநர் தடை, இடையூறு என்பதெல்லாம் ஆடத் தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்ற கதையே.
மாகாண சபைகளை பொறுத்த வரை வரவு செலவு திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர் அது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆளுநர் ஒப்பதல் அளித்து விட்டால் அதன் பின்னர் அதில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆளுநர் தடையாக இருக்க முடியாது. எச்சந்தர்ப்பத்தில் ஆளுநர் தடையாக இருக்கலாம் என்றால் முன்மொழியப்பட்ட திட்டத்தில் ஊழல். மோசடிகள் இடம்பெறுகிறது என்று ஆதாரத்துடன் முறையிடுகின்ற சர்ந்தர்ப்பத்தில் மாத்திரமே ஆளுநர் தலையிட்டு தடை விதிக்க முடியும். மற்றும் எந்த வகையிலும் முன்மொழியப்பட்ட திட்டத்தை மேற்கொள்வதற்கு ஆளுநர் தடையை ஏற்படுத்தி முடியாது. எனவே எல்லா இடங்களிலும் ஆளுநரை காரணம் காட்டுவது என்பது தங்களுடைய ஆளுமின்மையை மறைப்பதற்கே என்பதே யாதார்த்தம்.
கடந்த 2014 ஆம் ஆண்டு பெருமளவு நிதி செலவு செய்யப்படாது திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்ட போது பல மில்லியன்களை மாகாண சபை வங்கியில் வைப்புச் செய்தது. ஆனால் அந்தக் காலப்பகுதியில் மக்கள் மிக மோசமான அடிப்படைத் தேவைகளின் குறைபாடுகளுடன் வாழ்ந்தனர். அவ்வாறே 2015 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் பெருமளவு நிதி திரும்பிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்ட போது உடனடியாக அவற்றுக்கு கொள்வனவுகள் மேற்கொள்ளப்பட்டன. இதே நிலைமை 2016 ஆம் ஆண்டும் ஏற்பட போகிறது. இனி அவ்வாறு பொருட்களை கொள்வனவு செய்யப் போவதில்லை என 2015 டிசம்பர் கருத்து தெரிவித்த முதலமைச்சர் தனக்கு ஒதுக்கப்பட்ட பிஎஸ்டிஜி நிதியில் 13 வீதத்தை மாத்திரமே ஏழு மாதங்களில் செலவு செய்திருக்கின்றார். மிகுதி 87 வீதமான நிதியை எஞ்சியிருக்கும் காலப்பகுதியில் செலவு செய்ய வேண்டும். எனவே முதலமைச்ரே இவ்வாறு என்றால் அவர் எவ்வாறு அமைச்சர்களை கட்டுப்படுத்த முடியும்?
2014 ஆம் ஆண்டுக்குரிய கணக்காய்வு அறிக்கையின் படி 1028 திணைக்களங்களுக்கு 2162 விடயங்களுக்காக செலவு செய்யப்பட்ட பல மில்லியன்களுக்கு ஆதாரங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. இதனை வடக்கு மாகாண சபையின் எதிர் கட்சி தலைவர் சி. தவராஜாவும் பல இடங்களில் கூறியிருக்கின்றார்.
எனவேதான் மக்கள் மத்தியில் எழுகின்ற மிகப்பெரும் கேள்வியும், கோபமும் என்னவெனில் முப்பது வருட கொடிய யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு அனைத்தையம் இழந்து வாழ்ந்து வரும் எங்களின் நிலைமை எங்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு நன்கு தெரியும். இருந்தும் அவர்கள் கொஞ்சமும் பொறுப்பின்றி இவ்வாறு நடந்துகொள்ள எவ்வாறு மனம் வருகிறது என்பதே? எப்பொழுதும் குறை கூறிக்கொண்டும் அறிக்கைகள் விட்டுக்கொண்டும் செயற்படுகின்ற இவர்கள் எங்களுடைய பிரதிநிதிகளா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
வன்னியில் பல பாடசாலைகளில் மாணவர்கள் மரநிழல்களிலும், கூரை இல்லாத கட்டடங்களிலும் மற்றும் போதிய வளங்கள் இன்றியும் கல்வி கற்று வருகின்றனர். ஆனால் கல்வி அமைச்சோ ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக உரிய காலத்தில் செலவு செய்யாது மந்த போக்கில் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கிறது. வடக்கின் கல்விச் சமூகம் மிக அதிகளவான தேவைகளோடு இருக்கின்ற போது கிடைக்கின்ற நிதியை அந்த தேவைகளுக்கு செலவு செய்வதற்கு அமைச்சு வினைத்திறனற்று இருப்பது மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கல்விச் சமூகம் இச் செயற்பாடுகளை விசனத்தோடு நோக்குகிறது.
download (46)
முப்பது வருட கொடிய யுத்தத்தை எதிர்கொண்ட வடக்கு மக்களுக்கு மாகாண சபை ஊடாக ஒதுக்கப்பட்டு வருகின்ற நிதி மிக மிக சொற்பமே. இந்த நிதியை கொண்டு யுத்தப் பாதிப்புகளிலிருந்த மக்களை ஒரு குறுகிய காலத்திற்குள் மீள கட்டியெழுப்ப முடியாது. இந்த நிலையில் அந்த மக்களை பிரதிநிதிப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கு கிடைக்கின்ற நிதியை முறையாக திட்டமிடப்பட்ட வகையில் செலவு செய்யாது நடந்துகொள்வது பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் மிகப்பெரும் அநீதியாகவே அமையும். வெறும் அரசியல் கோசங்களுக்காக மக்கள் மாகாண சபைக்கு தங்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்யவில்லை என்பதனை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பு வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீடு மற்றும் செலவீனங்கள் தொடர்பில் மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று வலது பக்கத்தில் உள்ள நிதி அறிக்கை பகுதியை தெரிவு செய்து உள்நுழைவதன் மூலம் விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila