![]()
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ், முன்பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றுபவர்களை மறுஅறிவித்தல் வரை பணியிலிருந்து நீக்குவதை நிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே உத்தரவிட்டுள்ளார்.
|
வடக்கு- கிழக்குக்கான ஜனாதிபதி செயலணியின் அடுத்த கூட்டத்தில் இது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்து தகுந்த தீர்வொன்றினை பெற்றுக்கொள்ளும் வரையில் ஆசிரியர்கள் முன்பள்ளியை நடத்துவதற்கு அனுமதி அளிக்குமாறு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் மேஜர் கொஸ்வத்தைக்கு ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
“கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்பள்ளி ஆசிரியர்களாக 300 முதல் 3 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்று கற்பித்தல் செயற்பாட்டினை மேற்கொண்டு வந்த நாம், கடந்த 2012ம் ஆண்டிலிருந்து சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் 30 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட ஊதியத்தில் சேவை ஆற்றி வருகின்றோம். தற்போது திடீரென தமது ஊதியத்தை நிறுத்தி பணியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. எமது எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. எமக்கு ஒரு சிறந்த தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி முன்பள்ளி ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கானோர் ஆளுநர் செயலகம் முன்பாக ஆர்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.
நாட்டின் பல பாகங்களிலும் 19 மாவட்டங்களில் 851 முன்பள்ளிகளில் 1158 முன்பள்ளி ஆசிரியர்கள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊதியத்தில் பணியாற்றுகின்றனர். ஏன் வடக்கு மாகாணத்தில் மட்டும் முன்பள்ளி ஆசிரியர்களை சிவில்பாதுகாப்பு திணைக்களத்தின் ஊதியத்தினை பெறவேண்டாம் என எமது தமிழ் தலைவர்கள் வற்புறுத்துகின்றனர். அது ஏன் என அவர்கள் ஆளுநரிடம் கேள்வி எழுப்பினர்.
அவர்களின் கோரிக்கையினை செவிமடுத்த ஆளுநர் கடந்த வடக்கு கிழக்குக்கான ஜனாதிபதி செயலணியில் இந்த விடயம் பேசப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், சம்பந்தன் என எல்லோரும் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சிவில் பாதுகாப்பு திணைக்களம் இந்த முடிவினை எடுத்திருப்பதாகவும் நீங்கள் ஆசிரியர்களாக வேலை செய்வதில் ஜனாதிபதிக்கோ சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கோ மத்திய அரசுக்கோ எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை, எனவே இது தொடர்பில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி தீர்வொன்றினை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார். அவர்களின் கோரிக்கை கடிதங்களை பெற்றுக்கொண்ட ஆளுநர் ஜனாதிபதியுடன் பேசி நல்ல முடிவொன்றினை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
மேலும் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட ஆளுநர் ஜனாதிபதி தாம் கலந்துரையாடி முடிவு எட்டப்படும் வரையில் அவர்கள் பணியினை தொடர அனுமதிக்குமாறு வேண்டிக்கொண்டார்.
![]() ![]() |
முள்பள்ளி ஆசிரியர்களை நீக்க ஆளுநர் தடை!
Related Post:
Add Comments