
கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் எந்தவொரு முன்பள்ளி ஆசிரியர்களையும் பணியில் இருந்து நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரவில்லை. மாறாக ஒரு பகுதியினருக்கு 32 ஆயிரமும் மறுதரப்பிற்கு 6 ஆயிரம் ரூபாவும் வழங்குவதனை சீர் செய்யும் நடவடிக்கையினையே கோருவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் விளக்கமளித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் இயங்கும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்மில் பணியாற்றும் முன்பள்ளி ஆசிரியர்களை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கூறியதாக வடக்கு மாகாண ஆளுநர் நேற்று கருத்து வெளியிட்டிருந்தார்.
கிளிநொச்சியில் தற்போது பணியில் உள்ள 1100 முன்பள்ளி ஆசரியர்களில் 322 பேர் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் இயங்குபவர்கள். இவர்களிற்கு மட்டும் இந்த நாட்டின் அரசினால் 32 ஆயிரம் ரூபா வழங்க முடியுமானால் எஞ்சிய முன் பள்ளி ஆசிரியர்களிற்கு ஏன் அந்த 32 ஆயிரத்தை வழங்க முடியாது என்பதே எமது கேள்வி.
சிவில் பாதுகாப்புத் திணைக்களம் 8 வகுப்புடனும் வயதுக் கட்டுப்பாடு இன்றியும் நியமனம் செய்த பின்பு பயிற்சியினை வழங்கி பணியாற்ற அனுமதிக்கலாம் எனில் க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தரம் சித்தி எய்திய ஆயிரம் ஆசிரியர்கள் மட்டும் 6 ஆயிரத்திற்காக பணியாற்றுவது சரியானதுதானா என்பதனையும் வடக்கு மாகாண ஆளுநர் பதில் கூற வேண்டும்.
ஆனாலும் இராணுவத்தின் கீழ் முன்பள்ளிகள் இயங்குவதை அனுமதிக்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே குறித்த முன்பள்ளி ஆசிரியர்களை வடமாகாண கல்வி அமைச்சின் இணைத்துக்கொள்ளவும் அவர்களிற்கு ஊதியத்தை அரசு தற்போது வழங்குவது போல பாதுகாப்பு அமைச்சு ஒதுக்கீட்டிலிருந்து வழங்கமுடியுமெனவும் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.