
ஜனவரி கைதின் பின் அடங்கியிருந்த ஞானசார இப்போது மீண்டும் புத்தெழுச்சி பெற்று அவரது இனவாத செயற்பாடுகளைப் புதுப்பித்துக் கொண்டதை நேற்று கண்டியில் காணக்கூடியதாக இருந்தது.
ஆனாலும், நேரடி செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கு முன்பதாக பல வழிகளில் அரசுக்கும், மகாநாயக்கர்களுக்கும் தலையிடியை உருவாக்கும் கைங்கரியத்தில் இறங்கியுள்ள ஞானசார, இந்நாட்டில் இனவாதத் தீ பரவுவது தடுக்கப்பட வேண்டுமாக இருந்தால் சிறுபான்மை சமூகத்துக்கு நெருக்குதல்களை உருவாக்கி அரசியல் ரீதியாக ஒதுக்கப்பட வேண்டும் எனும் மாபெரும் சவாலை ஆட்சியாளர்களுக்கு முன் வைக்கிறார்.
ஏற்கனவே சிறுபான்மை மக்களின் முழு ஆதரவை இழந்து அதன் மூலம் ஆட்சியையும் இழந்த தனது எஜமானருக்கு இந்த அரசை அதே வழியில் தோற்கடிக்க உதவி செய்வதாக எண்ணி தன் திட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இதனை எதிர் கொண்டு ஞானசாரவை அடக்குவதற்கு அரசாங்கத்துக்கு தெளிவான ஒரு சம்பவமும் சூழ்நிலையும் அவசியமாகும். ஆனாலும் அதற்கான பிடி கொடுக்காத ஞானசார, தன் தூண்டுதல்களை ஓரளவுக்கு பாதுகாப்பான எல்லைக்குள் வைத்தே பேசி வருகிறார் எனலாம்.
எனினும், அவரை ஏன் கைது செய்யக் கூடாது? எனும் கேள்வி மக்கள் மத்தியில் பலமாக முன் வைக்கப்படுகிறது. பேச்சுக்காகவே கைது செய்தாலும் கூட, அது கடந்த தடவை போன்று பிணை மறுக்கப்படும் சம்பவமாகவும், ஆகக்குறைந்தது சிறு காலம் சிறையில் அடைக்கும் சம்பவமாகவும் இருக்க வேண்டும். அதற்கான சட்ட சூழ்நிலை மஹிந்த அரசில் இருந்தது. ஆனால், மைத்ரி – ரணில் கூட்டரசோ சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவி, நீதித்துறையை சீர் செய்து வரும் நிலையில் இவ்வாறான ஒரு கடும்போக்கு வாதியை அடக்குவதற்கான இரும்புக் கரம் நீட்டப்படப் போவதில்லை.
நீதியமைச்சரின் சூளுரை
இதற்கிடையில் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்றில் சூளுரைத்துள்ளார் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச.அது எத்தனை தூரம் சாத்தியமாகும் எனும் சவால் அவர் ஆக்ரோசப்பட்டு 24 மணி நேரத்துக்குள்ளேயே எழுந்துள்ளது. அதிலிருந்து 48 மணி நேரம் முன்னதாகவே ஜனாதிபதி தயவு தாட்சண்யமின்றி இனவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பதாக பிரதமர் இதே நிலைப்பாட்டை விளக்கியிருந்தார். இந்த நிலையில் இது ஒட்டு மொத்த அரசுக்கும் விடுக்கப்பட்டு வரும் சவாலாகும்.
நேற்றைய கண்டி பேரணி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையாகி விடக்கூடாது என்பதில் அரசாங்கம் கண்ணுங் கருத்துமாக இருந்தது. எனவே, பொலிசார் உசார் படுத்தப்பட்டு பள்ளிவாசல்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும், அது வீதிப் பெயர்களை அழிக்கும் வகையிலும் உருவாகும் என பொலிசார் எதிர்பார்க்கவில்லையென்றால் புலனாய்வுத்துறை ஞானசார விடயத்தில் இன்னும் அலட்சியமாகவே இருக்கிறது என்பது தெளிவாகிறது.
பெஷன் பக்
இரண்டாவது தடவை முஸ்லிம் சமூகத்தின் வர்த்தக முன்னோடி நிறுவனங்களுள் ஒன்றான பெஷன் பக் தீக்கிரையாகியுள்ளது. நேற்றைய சம்பவம் சதியாக இருக்க வாய்ப்பில்லையென பொலிசார் முன் கூட்டியே தெரிவித்துள்ளமையும், சிசிடிவி பதிவு இயந்திரத்தை தம் வசப்படுத்தியதும் ஒன்றோடு ஒன்று முடிச்சுப் போடக்கூடிய விடயமில்லையாயினும் கூட சந்தேகத்துற்குரிய விடயங்களாகும்.
அளுத்கம மல்லிகாஸ் தீக்கிரையான போது மறு நாள் தான் சிசிடிவியைப் பற்றிய பேச்சே எழுந்தது. ஆனால் பெஷன் பக் நிறுவனத்தின் சிசிடிவையைப் பெற இத்தனை அவசரம் காட்டப்பட்டதன் பின்னணி என்ன எனும் சந்தேகம் தொடர்ந்து நிலவும். இதற்கு பொலிசார் அளிக்கப் போகும் விளக்கத்தைப் பொறுத்து இந்த சந்தேகம் மேலும் வலுவடையும் அல்லது தெளிவு கிடைக்கும். எனினும், தற்போதைய சூழ்நிலைக்கும் இச்சம்பவத்திற்கும் தொடர்பில்லையென மறுப்பதற்கான ஆயத்தமாகவும் இதைப் பார்க்கக் கூடும்.
மஹிந்த ஆட்சியின் போது இந்நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்புகளைக் காப்புறுதியிலிருந்து கூட மீட்க முடியாத சூழ்நிலை உருவாகியிருந்தது. காரணம், காப்புறுதி இழப்பீட்டைப் பெறுவதற்காக நிறுவனக் காரர்களே ஆடிய நாடகம் என அப்போதைய அரசு பரப்புரை செய்ததால் இழப்பை அந்நிறுவனவே ஏற்றுக்கொண்டது. அதிலிருந்து மீண்ட பின் மீண்டும் ஒரு இழப்பைதற்போது அந்நிறுவனம் சந்தித்துள்ள நிலையில் இம்முறை ஆட்சியாளர்கள் எதைச் சொல்லப்போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்த நிலையில் தான் சில காலமாக ஒதுங்கியிருந்த ஞானசாரவைக் கூவி அழைத்ததன் மூலம் தாவிக் கொண்டு வந்துள்ள இனவாதத்துக்கும் முஸ்லிம்களும், நாடும், அரசும் முகங்கொடுக்கப் போகிறது.
அதை இரும்புக் கரம் கொண்டு அடக்கும் வகையில் அரசு செயற்படுமா எனும் கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் எழுந்துள்ள அதேவேளை, மஹிந்த மீளவும் வந்து விட்டால் இனவாதம் மிகப் பயங்கரமாக இருக்கும் எனம் தெரிவற்ற சூழ்நிலையில் அரசின் மீது நம்பிக்கை வைப்பதொன்றே மக்களின் தெரிவாகவும் இருக்கிறது. எனினும் இந்த அரசில் எப்படியாவது முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதிலும் அரசியல் வங்குரோத்தடைந்தவர்கள் மிகக் கவனமாக இருக்கிறார்கள்.
முன்னைய விடப் பலமான மக்கள் ஆட்சியும், பாராளுமன்றில் நிறையவே முஸ்லிம் பிரதிநிதிகளும், சொல்லிக்கொள்ளும் அளவு சிறுபான்மைப் பிரதிநிதித்துவமும் இருக்கின்ற நிலையில் அரசியல் ரீதியாக மக்களின் தெரிவின் வினைத்திறன் எவ்வாறு இருக்கப் போகிறது என்பதைப் பரிசோதிக்கும் காலமாக மாறியுள்ளது தற்போதைய சூழ்நிலை.
முடிவுகள் எவ்வாறு அமையப்போகிறது..?
-இ.ஷான்