கோட்டா நாட்டில் இருக்கும்போது குமார் குணரத்னம் இருக்கக்கூடாதா?




அமெரிக்க பிரஜாவுரிமை கொண்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் இலங்கை அரசியலில் அங்கம் வகித்து வருகையில், இந்நாட்டில் பிறந்து வளர்ந்த குமார் குணரத்னத்திற்கு பிரஜாவுரிமை வழங்காமல், அவரது அரசியல் உரிமையும் மறுக்கப்படுவது ஏன் என ஊடக தொழிலாளர் சம்மேளத்தின் செயலாளர் தர்மசிறி லங்காபேலி கேள்வியழுப்பியுள்ளார்.
குடிவரவு சட்டத்தை மீறினார் என குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த ஒரு வருட காலமாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் துறை பொறுப்பாளரான குமார் குணரத்னத்தை விடுவிக்குமாறும் அவருக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கவேண்டுமெனவும் வலியுறுத்தி, புறக்கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”கடந்த மஹிந்த ஆட்சியை தோற்கடிப்பதற்காக நாட்டின் பெரும்பாலான கட்சிகள் ஒன்றிணைந்ததோடு, ஜனநாயகம், நல்லாட்சி, சுதந்திரம் மற்றும் சமத்துவம் என்ற வசனங்களே அவர்களது தேர்தல் பிரசார வசனங்களாக காணப்பட்டன. ஆனால் அவை வெறும் ஏமாற்று வார்த்தைகள் மட்டுமே என்ற விடயம் இன்று வெளிப்படையாகியுள்ளது.
குமார் குணரத்னம் மற்றும் அவரது பெற்றோர் இந்நாட்டில் பிறந்து இங்கேயே கல்விகற்றிருந்தனர். குமார் குணரத்னம் இந்நாட்டில் அரசியலில் ஈடுபட்டு, உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். அவ்வாறு சென்றவர்களை மீண்டும் வருமாறு இலங்கை அரசாங்கம் அழைத்துள்ளது.
அத்தோடு, வெளிநாட்டு பிரஜாவுரிமை கொண்ட ஏராளமான அரசியல்வாதிகள் இந்நாட்டில் உள்ளனர். கடந்த மஹிந்த ஆட்சியில் அதிகாரத்தில் இருந்த கோட்டாவிலிருந்து பஷில் வரை அநேகமானோர் அமெரிக்க பிரஜாவுரிமை கொண்டவர்கள்.
இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஜனநாயகம், நல்லாட்சி என்பன குறித்து எவ்வாறான பிரசாரங்களை மேற்கொண்டு வந்தாலும், குமார் குணரத்னத்தின் பிரஜாவுரிமை மற்றும் அவருக்கு அரசியல் செய்வதற்கான உரிமை வழங்காவிட்டால் அவர்களது பிரசாரத்தில் எவ்வித பலனும் இல்லை.
ஆகவே குமார் குணரத்னத்திற்கு பிரஜாவுரிமையை பெற்றுக்கொடுப்பதோடு, அவருக்கு இலங்கையில் அரசியல் செய்யும் வாய்ப்பை வழங்கவேண்டுமென நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்” என்றார்.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila