காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் நிலையில், கிளிநொச்சியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தாயொருவர் உயிரிழந்துள்ளார்.
பிள்ளைகள், கணவன்மார் என தமது உறவுகளை தேடியலையும் மக்களின் ஆயுள் முடிந்து காணாமல் ஆக்கப்பட்ட குற்றங்களுக்கான ஆதாரம் இல்லாமல் போகும் நிலைமை இதன்மூலம் ஏற்பட்டுவருவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று மூன்று மாதங்களை கடந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், ஆனந்தபுரத்தைச் சேர்ந்த காணாமல் போனவரின் தாயரான துரைசிங்கம் ஈஸ்வரி, நேற்று முன்தினம் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸ்சிஸ் சவேரியார் தேவாயலத்தின் பங்குதந்தை, அருட்தந்தை மரியாம்பிள்ளை ஹான்ஸ்போவர் தலைமையில் உயிரிழந்தவரின் ஆத்மசாந்தி வழிபாடுகளும் இடம்பெற்றன.
தமது பிள்ளைகளை தேடியலைந்து வாழ்வியலை தொலைந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், கவலைகள் மற்றும் துன்பங்களால் இவ்வாறு இல்லாமல் போகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸ்சிஸ் சவேரியார் தேவாயலத்தின் பங்குதந்தை, அருட்தந்தை மரியாம்பிள்ளை ஹான்ஸ்போவர் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பத்தை பராமரித்துவந்த தமது சகோதரர் 2009 ஆம் ஆண்டு காணாமல் போனதை எண்ணியே தாயார் உயிரிழந்ததாக அவரது பிள்ளைகள் குறிப்பிடுகின்றனர்.