தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அன்பு வணக்கம். அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் இடைக்கால வரைபு வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் தமிழ் மக்கள் பலவாறு பேசிக்கொள்கின்றனர். அதில் தமிழ் அரசியல் தலைமை தமிழர்களை விற்றுவிட்டது என்பதும் ஒன்று.
இதுபற்றி நீங்கள் அறிந்திருப்பீர்களோ தெரியவில்லை. இருந்தும் அதனைத் தெரிவிப்பது ஓர் ஊடகத்தின் கடமை என்ற வகையில் உங்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளோம்.
எதுஎவ்வாறாக இருப்பினும் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் இடைக்கால வரைபு வெளி வந்திருக்கக்கூடிய இக்காலசூழ்நிலை மிகவும் முக்கியமானது என்பதை நீங்கள் மறுதலிக்க மாட்டீர்கள் என நம்புகின்றோம்.
இடைக்கால வரைபு தமிழ் மக்களுக்கு ஒரு பெரும் வரப்பிரசாதம் என்பது போல கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் அவர்கள் கூறுகின்றார்.
பரவாயில்லை அவர் கூறுவது போல வரப் பிரசாதமாக இருந்தால் அதனை இருகரம் நீட்டிப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால் இடைக்கால வரைபில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் ஏதேனும் இருப்பதாக தெரியவில்லை என்பது தமிழ்ப் புத்திஜீவிகளின் கருத்துக்களாக இருக்கிறது. எனினும் இதனை ஆதாரபூர்வமாக நிரூபிப்பதுதான் நியாயமானது.
அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் வரைபு ஒன்று வெளியாகி இருக்கும் போது அதில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய சாதக பாதகங்களை ஆய்ந்தறிந்து தர்க்கரீதியில் கருத்துக்களை முன்வைப்பதே பொருத்துடையது என்பதால்,
அதனைச் செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய உங்களுக்கும் உரியது என்பதை நீங்கள் நிராகரிக்க மாட்டீர்கள்.
இடைக்கால வரைபு தொடர்பில் உங்கள் கட்சித் தலைமைகள் கொண்டிருக்கக்கூடிய அபிப்பிராயங்களும் நீங்கள் கொண்டுள்ள அபிப்பிராயங்களும் வேறுபட்டதாக இருக்கலாம்.
கருத்துக்களைக் கூறி கட்சித் தலைமையின் கோபத்துக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வதே புத்திசாலித்தனம் என்று நீங்கள் கருதி மெளனமாக இருந்தால், அது தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரும் பாவச் செயலாகும்.
ஆகையால், கெளரவத்துக்குரிய தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களே! வெளியாகி இருக்கும் இடைக்கால வரைபு தமிழ் மக்க ளுக்கு உரிமை தருமா? எங்கள் மக்கள் பட்ட துன்பங்களுக்கு முடிவு கட்டப்படுமா?
எங்கள் வருங்காலச் சந்ததியினர் இந்த நாட்டில் நிம் மதியாக வாழ்வதற்கு அரசியலமைப்புச் சீர் திருத்தத்தின் இடைக்கால வரைபு உறுதி செய் யுமா? என்பது பற்றிய உங்களின் கருத்துக் களை மக்களிடம் முன்வையுங்கள்.
யார் எதைக் கூறினாலும் அதைப் பற்றி கவலை கொள்ளாதீர்கள். தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் இழப்புக்களை அறிந்தவர் கள் நீங்கள்.
ஆகையால் உங்கள் மனச்சாட்சிக்கு அமைவாக உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள்.