தனிநாடு ஒன்று இல்லாததே இலங்கையில் உள்ள தமிழர்களின் முதன்மைப் பிரச்சினை. தமிழர்களுக்குப் பிரச்சினை இல்லை என்று நாம் கூறக்கூடாது. நாடு இல்லை என்பதுதான் அவர்களின் முக்கிய பிரச்சினை.
அவர்கள் தமிழ் நாட்டுக்குச் சென்று அல்லது மலேசியா, கனடா போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கு ஒரு பகுதியைத் தனிநாடாகக் கோரவேண்டும்.
இலங்கையை விடவும் அதிகளவான தமிழர்கள் வாழ்கின்ற நாடுகள் உள்ளன. அங்கு சென்று சுயநிர்ணய உரிமையுடன் அதனைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
இப்படித் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் மெதகொட அபயதிஸ்ஸ தேரர். சிறிலங்கா பாளி மொழி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் அவர்.
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும் மகிந்த ராஜபக்சவின் தம்பியுமான கோத்தபாயவின் அமைப்பான ‘எதிர்பார்ப்புகளை ஏற்றிவைக்கும் ஒளி’ என்ற அமைப்பின் உறுப்பினராகவும் அவர் இப்போது இருக்கிறார்.
புதிய அரசமைப்பை எதிர்த்து மக்களிடம் பரப்புரை செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்தப் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய அரசமைப்புக்கு எதிராக மகிந்த தரப்பு பச்சை இனவாதத்தையே கையில் எடுத்துப் பரப்புரை செய்யப்போகின்றது என்பதற்கு தேரரின் கருத்தே போதுமான சான்று.
தமிழர்களின் பிரச்சினையை எள்ளி நகையாடி, அவர்களைத் தூசாக நினைத்துத் தூக்கியெறிந்து பேசக்கூடிய இந்த இனவாதப் போக்குக்கு இந்த நாட்டில் இன்னமும் அனுமதி வழங்கப்படுகிறது என்பதுதான் கவலைக்குரியது.
அதற்கு அனுமதியும் வழங்கிவிட்டு, அவர்கள் அப்படி இனவாதம் பேசுவதாலேயே சிறுபான்மையினருக்கு உரிமைகளை வழங்குவது முடியாத காரியமாக இருக்கின்றது என்று அரசு சப்பைக்கட்டு கட்டுவது அதைவிடவும் வேதனையானது.
இத்தகைய சிங்கள மேலாதிக்கவாத இனவாதப் பேச்சுக்களும் செயல்களும்தான் இலங்கையில் இனங்களிடையே மிக மோசமான பகைமையையும் ஆயுத மோதலையும் உருவாக்கின.
அழிவுகளையும் கொண்டு வந்தன. உலக நாடுகள் மத்தி யில் இலங்கை இன்று தலைகுனிந்து நிற்பதற்கும் அவையே காரணமாகின. ஆனாலும் மீண்டும் மீண்டும் அதே சிங்கள இனவாதம் தளைத்துக்கொண்டே இருக்கிறது.
அதனைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவொரு அரசும் இதுவரையில் போதிய நடவடிக்கை எடுத்ததாக இல்லை. அதற்குப் பதிலாக அந்த இனவாதத்தைக் கண்டு அஞ்சி நடுங்கித் தமது வாக்கு வங்கி அதனால் பாதிக்கப்பட்டுவிடுமோ என்று ஏங்கித் தவிக்கும் அரசையும் ஆட்சியாளர்களையுமே இதுவரையில் காணமுடிந்திருக்கிறது.
நல்லாட்சி அரசு என்று கூறிக்கொண்டு பதவிக்கு வந்த மைத்திரி ரணில் அரசும்கூட அதேபாணியில்தான் நடந்துகொள்கிறது என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கின்றது.
சிறுபான்மை இன மக்களின் வாக்குகளால்தான் இன்று பதவியில் இருக்கும் அரசுக்கும் தலைவர்களுக்கும் வாழ்வு கிடைத்தது என்றாலும், சிங்கள இனவாதத்தைக் கட்டுப் படுத்தி நாடு சகல இன, மத மக்களுக்கும் உரியது என்கிற பாதுகாப்புணர்வை வழங்குவதற்கு இந்த அரசும் தவறிவிட்டது என்பதற்கான உதாரணமே மெதகொட அபயதிஸ்ஸ தேரரின் கருத்து.
அவரது கருத்து இனவாதத்தைக் கக்குவதாக இருக்கும் அதேநேரம், தாம் வாழும் நாடுகளில் தமக்கொரு தனிநாடு கோரும் உரிமையைத் தமிழர்கள் கொண்டிருக்கிறார்கள் என்கிற ரீதியில் தேரர் இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தால் அவர்கள் இலங்கையில் தனிநாடு கோருவதிலும் தவறில்லையே! இந்தியாவிலும் மலேசியாவிலும் தனிநாடு கோருவதற்கு தமிழர்களுக்கு உரித்துண்டு என்று தேரர் நினைத்தால் அதேயளவு உரித்து இலங்கையிலும் தமிழர்களுக்கு உண்டு.
ஏனெனில் இலங்கையின் வரலாறு முழுவதும் தமிழர்களும் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள்; ஆண்டிருக்கிறார்கள். நிழல் அரசுகளையும் நடத்தியிருக்கிறார்கள். எனவே இங்கு தமக்கென்றொரு தனிநாடு கோரும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது.
இதேவேளை, புதிய அரசமைப்புக்கு ஊடாகத் தமிழர்கள் தனிநாடும் கேட்கவில்லை. இடைக்கால அறிக்கையின் ஆரம்பத்திலேயே தனிநாடு குறித்துப் பேசுவதுகூடக் குற்றம் என்று திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழர்களின் தேவை தனிநாடு தான் என்றும், அதற்காகத்தான் புதிய அரசமைப்பென்றும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்து சிங்கள மக்களை நம்பவைக்க முயற்சிக்கும் தேரர் போன்றோரின் இனவாதத்தைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காதவரையில், பதில் இனவாதமும் முரண்பாடுகளும் சண்டையும் தீர்வதற்கான சாத்தியங்கள் ஏற்படப்போவதில்லை.