யாழ்.நகரில் இயங்கிய புளொட் அமைப்பினால் முன்னர் இயக்கப்பட்ட சித்திரவதைக்கூடமொன்றிலிருந்து கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் ஆட்கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத கொலைகளிற்கு இவை பயன்படுத்தப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.இதனிடையே குறித்த சித்திரவதைக்கூடத்தில் தங்கியிருந்த முன்னாள் புளொட் முக்கியஸ்தர் ஒருவரை இலங்கை காவல்துறை கைது செய்துள்ளது.
கைத்துப்பாக்கி,ரி-56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகள் ,வாள்கள் என்பவை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
1996ம் ஆண்டினில் யாழ்.குடாநாடு புலிகளிடமிருந்து இலங்கை படைகளால் கைப்பற்றப்பட்டதையடுத்து ஈபிடிபி மற்றும் புளொட் உறுப்பினர்கள் துணை ஆயுதப்படைகளாக யாழ்ப்பாணத்திற்கு தருவிக்கப்பட்டிருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் பலம் மிக்கதாக இருந்த புளொட் விடுதலைப்புலிகளை வேட்டையாடுவதாக கூறி கொலைகள் மற்றும் கப்பம் பெறுவதையே பிரதான நடவடிக்கையாக்கொண்டிருந்;தது.
விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படுவோர் அவர்களது ஆதரவாளர்கள் இச்சித்திரவதை முகாமில் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதுடன் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் சடலங்கள் யாழ்.கோட்டையினை சூழ உள்ள அகழியினுள் வீசப்படுவதும் அப்போது தொடர்ந்திருந்தது.
அதே போன்று வடமராட்சியின் கரவெட்டி இராஜகிராமம் பகுதியில் கடத்தப்பட்ட இளைஞன் ஒருவனது தலை மட்டும் துண்டிக்கப்பட்டு யாழ்.நகரப்பகுதியில் வீசப்பட்டிருந்தமை அப்போது பெரும்பரபரப்பினை தோற்றுவித்திருந்தது.
பின்னராக இராஜரட்ணம் இராஜேஸ்வரன் எனும் குறித்த இளைஞனின் தலையற்ற முண்டம் கழிவு குழியொன்றிலிருந்து மீட்கப்பட்டிருந்தது.
இதனை பின்னர் ஈபிடிபி துணை ஆயுதக்குழுவால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் இக்கொலைகளை அம்பலப்படுத்தியிருந்தார்.
இவ்வாறான ஆயுத குழு முகாமிலேயே தற்போது ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.
முன்னைய பலம்வாய்ந்த காலத்தில் சாவகச்சேரி நகரசபை மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை,பருத்தித்துறை நகரசபை புளொட் வசமிருந்தமை குறிப்பிடத்தக்கது.