யாழ்.நகரத்தை நவீனமயப்படுத்த இப்பொழுதே மணிவண்ணனால் திட்டம் முன்மொழிவு!



யாழ்.நகரத்தை எவ்வாறு ஒழுங்கு படுத்துவது? எந்த வடிவில் அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பில் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினை தலைமையாக கொண்டு உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய பேரவையின் யாழ்.மாநகர சபையின் முதல்வர் வேட்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். யாழ்.நகரத்தில் எவ்வாறான மாற்றத்தை ஏற்பத்துவது என்பது தொடர்பில் நிபுணர்களுடன் ஆராய்ந்து திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளேன். எமது கட்சி ஆட்சிக்கு வந்தால் அதனை நடைமுறைப்படுத்தவும் உள்ளேன். குறிப்பாக யாழில் இரண்டு நவீன சந்தை கட்டட தொகுதிகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
இதில் ஒன்று குருநகர் சின்னக்கடையும், மற்றையது யாழ்நகரில் இயங்கி வருகின்ற சந்தையையும் நவீனமயமாக்குவது. மேலும் பிரதானமாக மீள் சுழற்சியை அடிப்படையாக கொண்டு சூழலுக்கு தீங்கில்லாத வகையில் திண்ம கழிவகற்றல் முகாமைத்துவம் நடைமுறைக்கு கொண்டு வருதல், இதன் மூலம் கல்லுண்டையில் கொட்டப்படும் கழிவுகளுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை எட்ட முடியும்.
இது தவிர யாழ்.நகரில் உள்ள வீதிகள் அனைத்துமே நடைபாதைக்கு என இடம் ஒதுக்கப்படாமல் தான் காணப்படுகின்றன. இதனால் மக்கள் வீதிகளினாலேயே நடந்து செல்லும் நிலை காணப்படுகின்றது. நோயாளர்களும் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். ஆகவே எமது திட்டத்தில் நகரத்தில் காணப்படுகின்ற அனைத்து வீதிகளுக்கும் நடைபாதைகள் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் நகரில் வாகன தரிப்பிடம் ஒன்று நவீனமயப்படுத்தப்பட்ட முறையில் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்த வாகன தரிப்பிடம் அமைக்கப்படுமாக இருந்தால் வீதிகளின் நடுவே வாகனங்களை நிறுத்த வேண்டிய தேவை ஏற்படாது. குறிப்பாக யாழ்.மாநகரத்துக்குள் காணப்படும் வாய்க்கல்கள் அனைத்துமே மாசடைந்த நிலையில் தான் காணப்படுகின்றன. எனவே சிறந்த ஒரு வடிகாலமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் டெங்கு காய்ச்சல் உட்பட பல நோய்களின் பரவலை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும். இது தொடர்பிலும் எமது திட்ட வரைபில் யோசனைகளை முன்வைத்துள்ளோம். இவற்றுக்கு என இரண்டு நிபுணர் குழுக்களை உருவாக்கி பணிகளை முன்னெடுத்து செல்லவும் தீர்மானித்துள்ளோம். குறிப்பாக நகர அபிவிருத்தியில் ஏற்படுகின்ற சட்ட சிக்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு சட்டத்தரணிகள் கொண்ட குழுவும்,
நகர திட்டமிடல் தொடர்பில் ஆராய்வதற்கு பேராசிரியர்கள், துறைசார் நிபுணர்கள், பொருளியல் நிபுணர்கள் என்போரை உள்ளடக்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டவுள்ளது. மேலும் எம்மால் கைப்பற்றப்படும் உள்ளூராட்சி சபைகளையும் ஒவ்வொரு நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்த உறவுகள் பொறுப்பெடுத்து அந்த சபைகளின் கிராம, நகர அபிவிருத்திக்கு நிதி, துறை சார் வளங்கள், பயிற்சிகள், அபிவிருத்திகள் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டம் தொடர்பிலான திட்ட வரைபும், ஆலோசனைகளும் எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடப்படவுள்ளது என்றார். மணிவண்ணன். இதேவேளை தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவர் தான் போட்டியிடும் சபையின் அபிவிருத்தி தொடர்பில் திட்டம் ஒன்றை தேர்தலுக்கு முன்னதாகவே வெளியிடுவது என்பது புதிய ஆக்கபூர்வமான அரசியல் கலாச்சாரம் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila